
இன்றைய பொருளாதார உலகில் கடன் வாங்கும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதற்கேற்ப கடன் வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்துள்ளன. நிதிப் பிரச்சினைகளை சமாளிக்கவே பலரும் கடன் வாங்கினாலும், மீண்டும் அடுத்த முறை கடன் வாங்க சிபில் ஸ்கோர் முக்கியமாக கருதப்படும். வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் வங்கிகள் தான் சிபில் ஸ்கோரை அளிக்கின்றன. இதன் வரிசையில் கிரிசில் ரேட்டிங்கும் மிகவும் முக்கியமானது. ஆனால் பலருக்கும் இந்த கிரிசில் ரேட்டிங் பற்றிய தெளிவான புரிதல் இல்லை. கிரிசில் ரேட்டிங் குறித்த விழிப்புணர்வை உங்களுக்கு அளிக்கிறது இந்தப் பதிவு.
நாட்டின் முதல் கடன் மதிப்பீட்டு நிறுவனமான CRISIL லிமிடெட் கடந்த 1987 ஆம் ஆண்டு உதயமானது. அன்றிலிருந்து இன்று வரை கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் கடன் வாங்குபவர்களின் கடன் தகுதியை மதிப்பீடு செய்து ரேட்டிங் வழங்கி வருகிறது இந்நிறுவனம். இந்த ரேட்டிங் தான் பொருளாதார உலகில் கிரிசில் ரேட்டிங் என அழைக்கப்படுகிறது. கடன் வாங்கும் நபர்களுக்கு கிரிசில் ரேட்டிங் மிகவும் முக்கியமானது. முதல்முறை கடன் வாங்கும் போது எந்தவித ரேட்டிங்கும் தேவையிருக்காது. ஆனால் அடுத்தடுத்து கடன் வாங்கினால் சிபில் ஸ்கோர் மட்டுமல்ல கிரிசில் ரேட்டிங்கும் நல்ல நிலையில் இருப்பது முக்கியம்.
கடன் தகுதியை மதிப்பிடுவதால் நிதித் துறையில் முக்கியப் பங்காற்றி வருகிறது CRISIL நிறுவனம். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நிதித் துறையில் கணிசமான வளர்ச்சியைப் பெற்றுள்ளன இந்நிறுவனம், கடன் தகுதி மட்டுமின்றி பங்குச்சந்தை ஆராய்ச்சி, இடர் தன்மைகள் மற்றும் நிதி ஆலோசனை சேவைகள் உள்பட பல சேவைகளை வழங்கி வருகிறது. பரஸ்பர நிதிகளுக்கான கிரிசில் ரேட்டிங்கின் மூலம் முதலீட்டு உத்திகள், பங்குச்சந்தை விழிப்புணர்வு, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மற்றும் எஸ்ஐபி உள்ளிட்ட நிதித் தகவல்களை முதலீட்டாளர்கள் அவ்வப்போது அறிந்து கொள்ள முடியும்.
தனிநபர்கள் தங்கள் வருமானத்தை எப்படி நிர்வகிக்கிறார்கள் என்பதையும் கிரிசில் ரேட்டிங் மூலம் தெரிந்து கொள்ள முடியும். மேலும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து நீங்கள் வாங்கிய கடனை சரியாக திருப்பிச் செலுத்துகிறீர்களா, கிரெடிட் கார்டை எப்படி உபயோகமான முறையில் பயன்படுத்துகிறீர்கள் போன்ற நிதி பயன்பாட்டைக் கொண்டு CRISIL நிறுவனம் ஒரு மதிப்பெண்ணை வழங்கும். இந்த ரேட்டிங் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அடுத்தமுறை நீங்கள் தனிநபர் கடன், வாகனக் கடன் மற்றும் வீட்டுக் கடன் போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கும் போது உங்கள் கிரிசில் ரேட்டிங் உங்கள் முந்தைய கடன் விவரங்களை நன்முறையில் பிரதிபலிக்கும்.
தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியால் ஒரு தனிநபரின் கடன் விவரம் மட்டுமின்றி, பல்வேறு நிதிச் சேவைகள் முதல் முதலீட்டு உத்திகள் வரை அனைத்துமே இன்றைய காலகட்டத்தில் கண்காணிக்கப்படுகிறது. இருப்பினும் கடன் வாங்குவதைக் குறைத்து, நிதி திட்டமிடலை நாம் எப்படி மேற்கொள்ளப் போகிறோம் என்பதில் தான் அவரவரின் வளர்ச்சி இருக்கப் போகிறது. மற்றபடி கடன் வாங்கினாலும் சரி; முதலீடு செய்தாலும் சரி; நிதிப் பாதுகாப்பை தெளிவான பார்வையுடன் அணுகுங்கள்.