
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த சிட்ரோன் நிறுவனம், இந்தியாவில் சி3, சி3 ஏர்கிராஸ் மற்றும் பசால்ட் ஆகிய கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்நிலையில், தன்னுடைய சி3 மாடலில் டார்க் எடிசன் பதிப்பை சிட்ரோன் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இவை, முழுக்க முழுக்க கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இவை ‘டாப் எண்ட் மாடல்’ எனப்படும் உயர்ரக வேரியண்ட்களில் கிடைக்கின்றன.
சிட்ரோன் சி3
3 வேரியண்டுகளில் கிடைக்கும் சி3 மாடலின் ஷைன் டார்க் எடிஷன் காரானது, இருவேறு என்ஜின்களுடன் விற்பனைக்கு வந்திருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸுடன், 1.2 லிட்டர் என்.ஏ. பெட்ரோல் என்ஜினானது 82 எச்.பி. பவரையும், 115 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். அதேபோல, 1.2 லிட்டர் டர்போ என்ஜினானது, 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கக்கூடியதாக வந்திருக்கிறது. டர்போ என்ஜின் என்பதால், செயல்திறனும் அதிகமாகவே இருக்கிறது.
ஸ்பெஷல்
சிட்ரோன் சி3 டார்க் எடிஷன் மாடல் காரில், வெளிப்புறம், உட்புறம் என எல்லா பக்கமும், கருப்பு நிறம் பளிச்சிடுகிறது. காரின் சீட், டேஷ் போர்டு, ஸ்டேரிங் வீல், கன்சோல் என அனைத்தும் கருப்பு நிறத்திலேயே உள்ளன. இதுதவிர ஸ்டாண்டர்டு அம்சங்களாக சாவி இல்லாத டிஜிட்டல் நுழைவு வசதி, எலெக்ட்ரானிக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஜன்னல் கண்ணாடிகள், முன்புறம் 2 ஏர்பேக்குகள், ஸ்பேர் வீல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
விலை
ஷைன் டார்க் எடிஷன் காரானது ஆரம்ப ஷோரூம் விலையாக ரூ.8.38 லட்சம் விலையிலும், டர்போ எடிஷனானது ரூ.9.58 லட்சம் விலையிலும் கிடைக்கும். ஆட்டோமேட்டிக் டர்போ என்ஜின் காரானது ரூ.10.19 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
டார்க் குரோம், மேம்படுத்தப்பட்ட பெர்லா நேரா பிளாக வெளிப்புறங்களைக் கொண்ட இந்த பதிப்பு சாலையில் ஒரு கம்பீரமான தோற்றத்தை உறுதியளிக்கும்.
சென்னையில் கடந்த ஏப்ரல் 11-ம்தேதி விற்பனைக்கு வந்தது. இந்த வெளியீட்டு நிகழ்வு கிரிக்கெட் ஐகானும் சிட்ரானின் பிராண்ட் அம்பாசிடருமான மகேந்திர சிங் தோனியின் முன்னிலையில் நடைபெற்றது. அவர் டார்க் எடிஷன் விற்பனையை தொடங்கி வைத்தது மட்டுமின்றி பசால்ட் டார்க் எடிஷனின் தொடக்க உரிமையாளராகவும் ஆனார்.
நாடு முழுவதும் குறைந்த எண்ணிக்கையிலான யூனிட்கள் மட்டுமே கிடைப்பதால், சிட்ரான் டார்க் எடிஷன் இந்திய சாலைகளில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இது ஒரு தனித்துவமான சிட்ரான் அனுபவத்தை வழங்கும் அற்புதமான வடிவமைப்பு மற்றும் ஆடம்பரமான உட்புறங்களைக் கொண்டுள்ளது.