
உலகப் பொருளாதாரச் சந்தையில் தங்கத்தில் முதலீடு செய்வது இலாபகரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. வரிவிதிப்பு மற்றும் பங்குச்சந்தை வீழ்ச்சி போன்ற பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படும். இருப்பினும் தங்கத்தின் விலை முன்பை விட இப்போது பலமடங்கு உயர்ந்து விட்டது. இம்மாதிரியான சூழலில் தங்கத்தை விற்றால் நல்ல லாபம் கிடைக்கும். இருப்பினும் தங்கத்தை விற்கும் போது வரி கட்ட வேண்டுமா என்ற சந்தேகமும் எழுகிறது. இதற்கான விடையைத் தருகிறது இந்தப் பதிவு.
தங்கத்தின் விலை எவ்வளவு தான் உயர்ந்தாலும், அதன் மீதான மோகம் மட்டும் குறையவில்லை. இந்தியாவில் தங்கத்தை பலரும் அழகைக் கூட்டும் ஆபரணமாகவே பார்க்கின்றனர். ஆனால் ஒருசில முதலீட்டாளர்கள் தங்க முதலீட்டை முதன்மையானதாக கருதுகின்றனர். படிப்படியாக தங்கத்தின் விலை உயர்வது தான் இதற்கு முக்கிய காரணம். ஏற்கனவே வாங்கிய தங்க நகைகளை அவசரத் தேவைக்கோ அல்லது முதலீட்டு நோக்கத்திற்காகவே விற்றால் வரி கட்ட வேண்டியது அவசியம்.
தங்கத்தை விற்பனை செய்யும் போது அதன் தூய்மை மற்றும் எடையைப் பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படும். தங்கத்தின் விலையேற்றம் நடுத்தர மக்களை கலக்கமடையச் செய்தாலும், தங்கத்தை விற்பனை செய்ய நினைப்பவர்களுக்கு அதிக இலாபத்தை ஈட்டித் தரும். தங்க முதலீடு என்றுமே இலாபம் நிறைந்தது என்பதால் பங்குச்சந்தை சரியும் போதெல்லாம், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய முன்வருகின்றனர். தங்கத்தின் விலையேற்றத்திற்கு முதலீட்டாளர்களின் ஈடுபாடும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
தங்கத்தை விற்கும் போது இரண்டு வகையான வரிவிகித முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. விற்பனையின் போது தங்கமானது சொத்துக்களின் அடிப்படையில் மூலதன ஆதாயங்கள் என்ற பிரிவில் சேர்க்கப்படும். இதன்படி தங்கத்தை வாங்கிய பின் அதனை 24 மாதங்களுக்குள் விற்றால், குறுகிய கால மூலதன வரியை செலுத்த வேண்டும். 24 மாதங்கள் கழித்து எப்போது தங்கத்தை விற்றாலும் அதற்கு நீண்ட கால மூலதன வரியை செலுத்த வேண்டும்.
நம் வீட்டிலுள்ள முன்னோர்கள் வாங்கிய தங்க நகைகளை இப்போது விற்பனை செய்யும் பட்சத்தில், அதற்கு நீண்ட கால மூலதன வரியாக 12.5% விதிக்கப்படும். இதில் செஸ் வரியும் விதிக்கப்படும். வரியின் மீது விதிக்கப்படும் சேவைகள் கட்டணத்தை செஸ் வரி என்பர். இதனால் நாம் அதிக வரியை செலுத்த நேரிடலாம். பழைய நகைகளை விற்பனை செய்யும் போது, அந்நகையை வாங்கியதற்கான ரசீது கேட்கப்படலாம். ஒருவேளை ரசீது இல்லையென்றால், அங்கீகரிக்கப்பட்ட தங்க நகை மதிப்பீட்டாளர், இந்த நகையை உரிய முறையில் மதிப்பீடு செய்து ரசீதைக் கொடுப்பார்.
குறுகிய கால மூலதன வரியைப் பொறுத்தவரை, விற்பனை செய்பவர் எந்த வருமான வரி விகிதத்திற்குள் வருகிறாரோ அதற்கேற்ப வரி கணக்கீடு செய்யப்படும். ஒருவேளை தங்கத்தை விற்று வேறு ஏதேனும் சொத்து வாங்க நினைத்தால், உங்களால் வரி விலக்கைப் பெற முடியும். தங்கத்தை விற்று சொத்து வாங்கினால், வருமான வரிச் சட்டம் 54F-ன் படி, வரிவிலக்கு அளிக்கப்படும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.