
வாஷிங் பவுடர் நிர்மா என்ற விளம்பர பாடலை 90ஸ் கிட்ஸ்களால் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. குறைந்த விலையில் துணிகளை சலவை செய்யும் பவுடர்களை உருவாக்கி மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கர்சன் பாய் படேல் உருவாக்கிய நிறுவனம் தான் நிர்மா. கர்ஷன் பாய் படேல், 1945-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பிறந்தவர். இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். வேதியியல் பிரிவில் பட்டப்படிப்பை முடித்த கர்சன் பாய் படேல் ஒரு ஆய்வகத்தில் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார். 1969-ம் ஆண்டு அவருக்கு ஒரு யோசனை வந்தது.
மக்களுக்கு குறைந்த விலையில் சர்ப் சலவை தூளின் அதே நிலையில் தரமான சலவை பவுடரை விற்பனை செய்ய வேண்டும் என எண்ணினார். அப்படிதான் அவர் ரூ.15,000 முதலீடு செய்து சொந்தமாக டிடர்ஜென்ட் பவுடரை தயாரித்தார்.
ஆரம்பத்தில் அதை வேறு ஒரு பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்தார். ஆனால் அது பிரபலமாகவில்லை. பிறகு ஒரு கார் விபத்தில் இறந்து போன தனது மகளின் பெயரான நிருபமா (Nirupama) என்பதை சுருக்கி 'நிர்மா' (Nirma) என பெயர் வைத்தார். விற்பனை சூடு பிடித்தது.
நாடு முழுவதும் அனைவரும் மனதிலும் இடம் பிடித்தது. நிர்மா என்ற பிராண்டையும் மக்கள் மனதில் நிலை நிறுத்தியது. "தற்போதைய சூழலில் நிர்மா லிமிடெட் நிறுவனம் 18 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இந்த நிறுவனத்தின் மொத்த ஆண்டு வருமானம் சுமார் ரூ.23 ஆயிரம் கோடியாகும். இதன் மூலம் கர்சன் பாய் படேல் ரூ.34,000 கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரர் ஆனார். இந்திய பணக்காரர்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார். இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதினை வழங்கி கவுரவித்துள்ளது.
1935-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா பகுதியைச் சேர்ந்த பிசன்தாஸ் பாசில் எனும் இன்ஜினியர் ஜெர்மனியின் பாஃப் எனும் தையல் மெஷினை அடிப்படையாகக் கொண்டு இந்திய உதிரிபாகங்களைக் கொண்டு ஒரு தையல் மெஷினை "பிசன்தாஸ்" என்று தன் பெயரில் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்தார். இந்திய உதிரிபாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதல் தையல் இயந்திரம் அது தான். ஆனால் அது மார்க்கெட்டில் சரியாக போகவில்லை.
அதே தையல் மெஷினை தன் இளைய மகள் உஷா பெயரில் மீண்டும் சில மாற்றங்களை செய்து விற்பனைக்கு கொண்டு வந்தார். அது தான் இந்திய மார்கெட்டில் மிகவும் பிரபலமான 'உஷா' தையல் மெஷின். உஷா தையல் இயந்திரங்கள் இந்தியாவில் தற்போது நன்கு அறியப்பட்ட பிராண்டாகும்.
வெறும் 80 ரூபாயிலில் தொடங்கப்பட்ட ஒரு அப்பளத்தொழில் இன்று ரூ.1600 கோடி நிறுவனம், அது எது தெரியுமா? லிஜ்ஜத் பாபாட் (Lijjat Papad) என்ற அப்பளக் கம்பெனி தான் அது. ஜம்னாதாஸ் (Jaswantiben Jamnadas) என்ற பெண்மணி தலைமையின் கீழ் குஜராத் மாநிலத்தில் 1959ம் ஆண்டு 7 பெண்களால் தொடங்கப்பட்ட லிஜ்ஜத் பாபாட் (Lijjat Papad, அப்பளம்) என்ற நிறுவனம் இன்று உறுதி மற்றும் தன்னம்பிக்கைக்கு சான்றாக உருவாகியுள்ளது.
முதன் முதலில் 4 பாக்கெட் அப்பளத்துடன் தொடங்கிய வணிகம், தொழில்முனைவோர்களால் அடையாளம் காணப்பட்டு அதன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. இதனால் ரூ.6196 என்ற சிறிய ஆண்டு வருமானத்தில் தொடங்கிய லிஜ்ஜத் பாபாட் (அப்பளம்) வியாபாரம், இன்று ரூ.1600 கோடி வணிகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தில் தற்போது 45,000 பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெண்கள் முன்னேற்றத்திற்கு ஊக்கமாய் உருவெடுத்த ஜஸ்வந்திபென் ஜம்னாதாஸுக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.