தையல் இயந்திரங்கள் பெரும்பாலும் அனைவர் வீடுகளில் இருக்கும். அவற்றை முறையாகப் பராமரித்து வந்தால் வீட்டின் சிறு சிறு தையல் வேலைகளை நம்முடைய அவசரத்துக்கு செய்து கொள்ளலாம். அப்படி அவற்றை எளிதாகப் பராமரிப்பதற்கான சில ஆலோசனைகளை இந்தப் பதிவில் காண்போம்.
தையல் மிஷின் ட்ராயரில் ஒரு பின் குஷனில் சில குண்டூசிகளையும் ஊசிகளையும் குத்தி வைத்துக் கொண்டால் தைக்கும்போது சுலபமாக இருக்கும்.
தையல் இயந்திரத்தில் எப்போதும் ஒரு காந்த துண்டை வைத்துக்கொள்ள வேண்டும். இது ஆங்காங்கே கிடக்கும் ஊசிகளை எடுக்க வசதியாக இருக்கும்.
கத்திரிக்கோல் மழுங்கி விட்டதா? கவலையே வேண்டாம். கத்திரிக்கோலை கொண்டு உப்பு காகிதத்தை வெட்டினால் மீண்டும் கூர்மையாகிவிடும்.
ஊசியில் நூல் கோர்ப்பதற்கு முன் நூலின் முனையை நகபாலிஷில் நனைத்து பின்கோர்த்தால் மிகவும் எளிதாக நூல் ஊசியில் நுழையும்.
நீண்ட நேரம் தைக்க வேண்டிய வேலை உள்ளதா? கையை ஒரு சிறிய குஷன் தலையணையின் மேல் வைத்துக்கொண்டு தையுங்கள். பின்னர் அவ்வப்போது மரங்களையும் ஜன்னல்களையும் பார்த்துக் கொண்டால் கண்கள் களைப்படையாது.
தையல் இயந்திரத்தில் உள்ள பெல்ட் நீளமாக இருந்தால் அதனை குளிர்ந்த நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் வெயிலில் காய வைத்தால் சரியாகிவிடும்.
தடிமனான துணிகளைத் தைப்பதற்கு முன் தையல் இயந்திர ஊசியில் சிறிது சோப்பு தடவினால் ஊசி உடைவதைத் தவிர்க்கலாம்.
முனை மழுங்கிய ஊசிகளை உப்புத்தாளில் பல முறை குத்தி எடுத்தால் மீண்டும் கூர்மையாகிவிடும்.
ஊசிகளை வைக்கும் டப்பாவில் சிறிது ஸ்டீல் உல்லை நிரப்பி வைத்தால் ஊசி துருப்பிடிக்காமல் பளபளவென்று கூர்மையாக இருக்கும்.
பருத்தித் துணிகளை வெட்டி தைப்பதற்கு முன் கஞ்சி போட்டு இஸ்திரி செய்து பிறகு வெட்டித் தைத்தால் துணி சுருங்குவதைத் தவிர்க்கலாம்.
பிளாஸ்டிக் ஷீட் போன்றவற்றைத் தைக்கும்போது அதன் மேல் ஒரு மெழுகு தடவிய காகிதத்தை வைத்து தைத்து பின் அந்த காகிதத்தை கிழித்து விட்டால் பிளாஸ்டிக் ஷீட் கிழிவதைத் தடுக்கலாம்.
ஆடைகளில் ஜிப் வைத்து தைப்பதற்கு முன் செலோஃபென் டேப்பைக் கொண்டு ஒட்டி விட்டு பின்னர் எளிதாகத் தைக்கலாம்.
முனை மழுங்கிய ஊசியை தையல் பிரிப்பதற்குப் பயன்படுத்தலாம்.
ஆடைகளில் பட்டன் தைப்பதற்கு முன் தைக்க வேண்டிய இடத்தில் சிறிது நகப்பூச்சை தடவி அதன்மேல் பட்டனைப் பொருத்திப் பின்னர் நூலால் தைத்து விட்டால் பட்டன் எளிதில் பிய்ந்து போகாது.
தையல் இயந்திரத்தை மாதம் ஒருமுறையாவது எண்ணெய் போட்டு துடைக்க வேண்டியது அவசியம். எண்ணெய் போடுவதற்கு முன் இயந்திரத்தில் உள்ள நூல் போன்ற அழுக்குகளை பழைய பெயிண்ட் பிரஷ் கொண்டு எடுத்து விட்ட பின்பே எண்ணெய் போட வேண்டும். துடைப்பதற்கு முன் ஊசி பாபின் நூல் போன்றவற்றை எடுத்துவிட்ட பின்னரே துடைக்க வேண்டும்.
தையல் இயந்திரத்தை சுத்தப்படுத்த டர்பன்டைன் ஆயிலை உபயோகிக்கலாம். இயந்திரத்துக்கு எப்பொழுதுமே தைத்து முடித்த பின்பே எண்ணெய் போட வேண்டும்.