
இந்தப் பதிவு வருமானவரி தாக்கல் படிவங்களைப் பற்றித் தெரிவிக்கிறது.
வருமானவரியின் குறைந்தபட்ச வருமானவரி வரம்பைத் தாண்டுபவர்கள் எல்லோரும் கண்டிப்பாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு வருமான வரி தாக்கல் செய்யும்போது, பல்வேறு வருமான வரி படிவங்கள் உள்ளன. இந்தப் படிவங்கள் ஐ.டி.ஆர் படிவங்கள் (ITR -Income Tax Return Forms) என்று அழைக்கப்படுகின்றன. அவை அந்தந்த நபருடைய வருமானத் தோற்றுவாய்கள்(income sources) எவை, அவர் இந்தியாவில் வசிப்பவரா(Residency status), வருமானத்தின் அளவு எவ்வளவு என்பதைப் பொறுத்து மாறுபடும். தவறான வருமான வரிப் படிவத்தினைத் தேர்ந்தெடுத்தால் அவரது வருமான வரி தாக்கல் நிராகரிக்கப்பட்டு, அவர் மறுபடி வருமான வரி தாக்கல் செய்ய நேரிடும். எனவே, வருமான வரி தாக்கல் படிவங்களைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
வருமான வரி தாக்கல்களில் ஏழு படிவங்கள் உள்ளன. ஒவ்வொரு படிவமும் குறிப்பிட்ட வகை நபர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1. ஐடிஆர் 1- இது 'சகஜ்' என்று அழைக்கப்படுகிறது. இது இருப்பதிலேயே மிகவும் எளிமையான படிவம். சம்பளம் அல்லது ஓய்வூதியம் மூலம் பெறும் வருமானத்தைக் கொண்ட தனிநபர்கள் இந்தப் படிவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்கள் ஒரு வீட்டில் இருந்து மட்டும் வருமானத்தைப் பெறலாம். ஆண்டு வருமானம் 50 இலட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். விவசாய வருமானம் 5 ஆயிரத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். நீண்ட கால மூலதன ஆதாய வரி 1.25 இலட்சத்திற்கு குறைவாக இருந்தால், இந்தப் படிவத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
2. ஐடிஆர் 2- ஐடிஆர் 1 இல் குறிப்பிட்டதற்கு மேலாக இன்னும் சில நிபந்தனைகள் வரும். 50 இலட்சத்திற்கும் அதிகமான வருமானத்தைக் கொண்ட நபர்கள் அல்லது இந்து பகுக்கப்படாத குடும்பத்தைச் (Hindu undivided family) சேர்ந்தவர்கள் இந்த படிவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து வருமானத்தைப் பெறுபவர்கள் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தி கொள்ளலாம்.
1.25 இலட்சம் ரூபாயை விட அதிகமாக நீண்டகால மூலதன ஆதாய வரியைக் கொண்டவர்கள் இந்தப் படிவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இலாட்டரி மூலம் பணம் சம்பாதிப்பது, குதிரைப் பந்தயத்தில் பணம் சம்பாதிப்பது என இதர சம்பாதிக்கும் முகாந்திரங்களைக் (income from other sources) கொண்டவர்கள் இந்தப் படிவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய வருமானத்தைக் கொண்டவர்கள், கடந்த வருடத்து நஷ்டங்களை இந்த வருடத்தில் சேர்ப்பது போன்ற சலுகைகளைப் பயன்படுத்த விரும்புவர்கள், இதனைப் பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு நிறுவனத்தின் இயக்குனர், பங்கு சந்தையில் பட்டியலிடப்படாத பங்குகளை உடையவர்கள் போன்றவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
3. ஐடிஆர் 3- ஐடிஆர் 2 விதிகள் இதற்குப் பொருந்தும். மேலாக தொழில் வல்லுனர்கள் (professional) அல்லது வியாபாரம்(business) செய்யும் தனிநபர்கள் அல்லது இந்து பகுக்கப்படாத குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் இந்தப் படிவத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். 50 இலட்சத்தை விட அதிகமாக வருமானத்தை கொண்டவர்கள், சம்பளம் அல்லது ஓய்வூதியம் மட்டுமன்றி இதர முகாந்திரங்களில் இருந்து வருமானத்தைப் பெறுபவர்கள் இந்தப் படிவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்களால் மற்ற ஐடிஆர் 1, 2, 4 போன்றவற்றைப் பயன்படுத்த இயலாது.
4. ஐடிஆர் 4- இது சுகம் என்று அழைக்கப்படுகிறது. ஐடிஆர் 1 விதிகள் இதற்குப் பொருந்தும். மேலாக, சிறு வியாபாரிகளுக்கு ஏதுவாக இது உள்ளது. அவர்களது வருமானம் 50 இலட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இங்கு சிறு வியாபாரிகள் தங்களுடைய மொத்த விற்பனையில் குறிப்பிட்ட சதவீதத்தை வருமானமாகக் குறிப்பிடலாம். இதில் அவர்கள் மிகவும் ஆழ்ந்த கணக்குகளை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், சில விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
5. ஐடிஆர் 5 - முதலீட்டு நிதிகள்(investment funds), வியாபார அறக்கட்டளைகள்(business trusts), தனிநபர்களின் குழுமம், குறைந்த பொறுப்புடைய கூட்டுத்தொழில்கள் (limited liability partnership) போன்றவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தனிநபர்கள், இந்து பகுக்கப்படாத குடும்பம், நிறுவனங்கள் இதனைப் பயன்படுத்த முடியாது.
6. ஐடிஆர் 6- ஈகை நோக்கமுள்ள அல்லது மதம் சார்ந்த நிறுவனங்களைத் தவிர மற்ற நிறுவனங்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
7. ஐடிஆர் 7 - ஈகை நோக்கமுள்ள அல்லது மதம் சார்ந்த அறக்கட்டளைகள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அரசியல் கட்சிகள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அறிவியல் ஆராய்ச்சி மையங்கள், ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், ஊடகங்கள் போன்றவை இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்களுக்கு எந்த வருமான வரி படிவம் சரி வருகிறது என்று அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ற வருமான வரிப் படிவத்தினைத் தேர்ந்தெடுத்து பூர்த்தி செய்யுங்கள். அதன் மூலம் நீங்கள் வருமான வரி தாக்கல் நிராகரிப்பினைத் தவிர்க்கலாம். மேலும், தாமதமாக வருமான வரி தாக்கல் செய்வதன் மூலம் வரும் அபராதத் தொகையைத் தவிர்க்கலாம். எந்த வருமான வரிப் படிவம் என்று குழப்பமாக உள்ளதா? அருகில் உள்ள பட்டயக் கணக்காளரை (chartered accountant)அணுகுங்கள். அவர் உங்களுக்கு உதவுவார்.
நீங்கள் சீக்கிரமாக வருமான வரி தாக்கல் செய்ய வாழ்த்துகள்.