இரயில் விபத்துகள் அடிக்கடி நடக்கும் நிலையில், நமது குடும்பத்தின் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம். ஆகையால் மிக எளிதாக இரயில் பயணக் காப்பீடு குறித்து உங்களுக்கு இப்போது விளக்குகிறோம்.
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களின் பயணத்திற்கு முதல் தேர்வாக இருப்பது இரயில் போக்குவரத்து தான். ஏனெனில், மற்ற போக்குவரத்துகளை விடவும் இரயிலில் பயணிக்க கட்டணம் குறைவு. இந்தியாவிற்குள் எங்கு செல்ல வேண்டும் என நினைத்தாலும், அதற்கு இரயில் பயணம் பாதுகாப்பான மற்றும் நமது பட்ஜெட்டிற்கு ஏற்றதாக இருக்கிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக இரயில் விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனால் இரயில் பயணம் ஆபத்தானதா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது.
விபத்துகளை நம்மால் யூகிக்க முடியாது. அனைத்து விதமான போக்குவரத்திலும் விபத்துகள் நடக்கத் தான் செய்கின்றன. இது மாதிரியான விபத்துகளில் இருந்து மீண்டு வர நமக்கு உதவுவது காப்பீடு மட்டுமே. நோய்களும், விபத்துகளும் அதிகரித்துள்ள இன்றைய நிலையில் காப்பீடு ஒன்றே நமது குடும்ப நலனுக்கான பாதுகாப்பாக இருக்கிறது. இரயில் விபத்துகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், மத்திய அரசு நிவாரணம் வழங்குகின்றது. இதுதவிர நாம் இரயில் பயணக் காப்பீடை எடுத்தால் ரூ.10 இலட்சம் வரை கிடைக்கும் என்பது பலருக்கும் தெரியாது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த காப்பீடு எடுக்க நாம் செலவழிக்க வேண்டியது வெறும் 35 பைசா தான்.
இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகத்தில் (IRCTC) இரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது, பலரும் காப்பீடு பற்றி சிந்திப்பதில்லை. ஏனெனில் இதுபற்றிய விழிப்புணர்வு இன்னும் மக்களைச் சென்றடையவில்லை. ஒவ்வொரு முறையும் டிக்கெட் முன்பதிவின் போது காப்பீடைத் தேர்வு செய்து, 35 பைசாவை மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்தக் காப்பீட்டின் மூலம் IRCTC பயணிகளுக்கு ரூ.10 இலட்சம் வரையிலான காப்பீடை உறுதி செய்கிறது. இரயில் பயணிகள் தங்கள் பயணத்தின் போது, மதிப்புமிக்க பொருள்களைத் தொலைந்தால் கூட இந்தக் காப்பீட்டின் மூலம் இழப்பீடு கிடைக்கும்.
பயணத்தில் ஏதேனும் விபத்துகள் நிகழ்ந்தால் சிகிச்சைக்கான செலவை IRCTC இழப்பீடாக அளிக்கும். ஒருவேளை பயணத்தின் போது விபத்து ஏற்பட்டு நிரந்தரமாக ஊனமுற்றால் ரூ.10 இலட்சமும், சிறிய அளவில் ஊனமுற்றால் ரூ.7.5 இலட்சமும், பலத்த காயம் உண்டானால் ரூ.2 இலட்சமும், சிறிய அளவிலான காயம் எனில் ரூ.10,000 என காயத்தின் அளவிற்கேற்ப இழப்பீடு கிடைக்கும்.
விபத்தில் சிக்கிய 4 மாதங்களுக்குள் பயணிகள் காப்பீட்டைக் கேட்டு விண்ணப்பிக்கலாம். இதற்கு முதலில் காப்பீட்டு நிறுவனத்திற்குச் சென்று காப்பீட்டுக்கான கோரிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். அப்போது தவறாமல் நாமினியின் பெயரைக் குறிப்பிட வேண்டும். ஏனெனில் விபத்தில் பயணி உயிரிழக்கும் பட்சத்தில் ரூ.10 இலட்சம் காப்பீட்டுத் தொகை நாமினிக்குச் செல்லும்.