இலவச மருத்துவக் காப்பீடு: மத்திய அரசின் இந்தத் திட்டம் உங்களுக்கு தான்!

Free Health Insurance
Free Health Insurance

மருத்துவ சேவைகளை இலவசமாக அளிக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் புதிய அப்டேட் வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

உணவு வகைகளில் பலவகையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில் நோய்களுக்கும் பஞ்சமில்லை. மருத்துவமனைகளும், மருந்தகங்களும் அதிகரித்துள்ள அதே வேளையில் காப்பீட்டு நிறுவனங்களும் அதிகரித்துள்ளன. வருங்காலத்தை கணிக்க முடியாததால் பலரும் மருத்துவக் காப்பீட்டை எடுத்து வருகின்றனர். தனியார் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீடு எடுக்க வேண்டுமாயின், அதிக ப்ரீமியம் தொகை கட்ட வேண்டியிருக்கும். மேலும் வயதைப் பொறுத்து இந்தத் தொகை மாறும். இந்நிலையில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்த காப்பீட்டு திட்டம் தான் 'ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா' (AB-PMJAY). இத்திட்டத்தில் தற்போது புதிய விதியை வெளியிட்டு மூத்த குடிமக்களுக்கு நற்செய்தியை அளித்துள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

மத்திய அரசு காப்பீட்டுத் திட்டத்தின் படி 70 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் எனத் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 70 வயதிற்கு குறைவாக இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு மட்டும் மருத்துவக் காப்பீடு இலவசம். இத்திட்டத்தில் பயனடைய 70 வயது பூர்த்தி அடைந்துள்ளது என்பதை நிரூபிக்க ஆதார் அட்டை மட்டும் போதுமா என்ற குழப்பம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. இதுகுறித்த அறிவிப்புகள் ஏதும் இன்னும் வெளியிடப்படாத நிலையில் முன்கூட்டியே காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பித்து விடுவது நல்லது. இத்திட்டத்தின்படி ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

https://abdm.gov.in/ என்ற இணையதள முகவரிக்குச் சென்று Create ABHA Number (ஆயுஷ்மான் பாரத் உடல்நல எண்) என்பதை கிளிக் செய்யுங்கள்.

ஆதார் கார்டு அல்லது ஓட்டுநர் உரிமம் இரண்டில் ஏதேனும் ஒரு ஆப்சனைக் கிளிக் செய்து உள்நுழையலாம்.

அடுத்து வரும் திரையில் உங்களது ஆதார் அல்லது ஓட்டுநர் உரிமத்தை உள்ளிட்டு, மொபைல் எண்ணை உள்ளிட்டால் உடனே OTP என்ற பாதுகாப்புக் குறியீடு, உங்கள் எண்ணிற்கு வரும்.

OTP-யை உள்ளிட்ட பிறகு, உங்கள் மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும்.

நீங்கள் ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து இருந்தால் உங்களது பெயர் உடனே வந்து விடும். இல்லையெனில் புதிய பயனாளர் என்பதை கிளிக் செய்து விண்ணப்பித்து விடுங்கள். பிளே ஸ்டோரில் PM-JAY என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, இதிலும் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
சுற்றுலாவில் உதவும் காப்பீடு திட்டம்: தெரியுமா உங்களுக்கு?
Free Health Insurance

ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தெரியவில்லை என்றால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள உதவி மையங்களை அணுகி, தேவையான ஆவணங்களை அளித்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். இல்லையெனில் இ-சேவை மையங்களிலும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். புதிதாக விண்ணப்பிக்கும் பயனாளர்களுக்கு 5 முதல் 7 நாட்களுக்குள் காப்பீடு கார்டு வந்து விடும்.

தேவையான ஆவணங்கள்:

ஆதார் அட்டை

ரேசன் அட்டை

முகவரிச் சான்று

வருமானச் சான்று (கட்டாயமில்லை)

வருமானச் சான்று கட்டாயமில்லை என்றாலும், ஆண்டு வருமானத்தை வைத்து தான் மத்திய அரசின் பல திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதால், வருமானச் சான்றையும் சமர்ப்பிப்பது நல்லது.

உங்கள் வீட்டில் 70 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் இருந்தால், உடனே மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பித்து விடுங்கள். அவசரத் தேவை வரும் போது அலையாமல் இருக்க இப்போதே அரசு அளிக்கும் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com