மருத்துவக் காப்பீட்டை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் தெரியுமா?

Health Insurance
Health Insurance
Published on

ஒரு சிறந்த மருத்துவக் காப்பீட்டை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என இங்கு பலருக்கும் தெரிவதில்லை. காப்பீட்டில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அவ்வகையில் மருத்துவக் காப்பீடு எடுக்க விரும்பினால் இந்தப் பதிவு உங்களுக்கு உதவும்‌.

செயற்கையின் ஆதிக்கம் தலைதூக்கி வரும் இன்றைய காலகட்டத்தில், தொழில்நுட்ப வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. வளர்ச்சி முக்கியம் தான் என்றாலும், இயற்கைக்கு கேடு விளைவிக்கும் வளர்ச்சி தேவை தானா என்று கேள்வி எழுகிறது. ஏனெனில் இன்று அனைத்திலும் கலப்படம் மற்றும் ஹைபிரிட் உணவுகள் என நமது சமையலறையை ஆக்கிரமித்து விட்டன. இதன் விளைவாக சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு கூட நோய்கள் ஏற்பட்டு மருத்துவமனைகளுக்கு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளன. காய்ச்சல் என்று மருத்துவமனைக்குச் சென்றால், குறைந்தபட்சம் ரூ.1,000 செலவாகி விடுகின்றது. இதில் சிக்கலான நோய் ஏற்பட்டு விட்டால் அவ்வளவு தான். நம்மிடம் இருக்கும் சேமிப்பு முழுவதும் காலியாகி, கடன் வாங்க வேண்டிய நிலை கூட ஏற்பட வாய்ப்புண்டு.

பொதுமக்களின் அவசர மருத்துவச் செலவுகளை சமாளிக்க காப்பீட்டு நிறுவனங்கள் உதவுகின்றன. இன்றைய சூழலில் குடும்பத்திற்கு ஒரு மருத்துவ காப்பீட்டையாவது எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் சொத்துகளை விற்கவோ அல்லது கடன் வாங்கவோ வேண்டும். சந்தையில் இன்று பல மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. இதில் எதைத் தேர்வு செய்வது? எந்தத் திட்டம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கேள்வி பலருக்கும் உள்ளது. சிலர் இந்தக் கேள்விகளுக்கு விடையை அறிந்து கொள்ளாமலேயே மருத்துவக் காப்பீட்டை எடுக்கின்றனர்.

மருத்துவக் காப்பீட்டை பொறுத்தவரையில், பெயரின் அடிப்படையில் குறிப்பிட்டு ஒரு தனிப்பட்ட நிறுவனத்தை நாம் தேர்ந்தெடுக்க கூடாது. முதலில் நீங்கள் கவனிக்க வேண்டியது காப்பீட்டுத் தொகை. ஓர் ஆண்டில் காப்பீட்டு நிறுவனம் உங்களின் மருத்துவ செலவுகளுக்கு எவ்வளவுத் தொகையை வழங்கும் என்பதை முன்னரே தெரிந்து கொள்ளுங்கள். தேவைக்கு ஏற்ப இந்தத் தொகையை உயர்த்திக் கொள்ளும் வசதி இருக்கிறதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

நீங்கள் எடுக்கும் காப்பீடு பிளெக்சி பாலிசியாக இருக்க வேண்டும். அதாவது தனிநபருக்கு மட்டும் உதவும் காப்பீடாக இல்லாமல், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் உதவும் வகையிலான மருத்துவக் காப்பீட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இலவச மருத்துவக் காப்பீடு: மத்திய அரசின் இந்தத் திட்டம் உங்களுக்கு தான்!
Health Insurance

ஒருசில நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சில நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்நேரத்தில் நீங்கள் காப்பீட்டு நிறுவனத்தை அணுகினால் விரைவில் கிளைம் செய்யும் நிறுவனமாக இருக்க வேண்டும். காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமானது அவ்வப்போது கிளைம் செட்டில்மென்ட் விகிதத்தை வெளியிடும். இதனைக் கண்காணித்து எந்த நிறுவனம் விரைவில் கிளைம் தொகையை செலுத்துகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு காப்பீடு எடுங்கள்.

நாடெங்கிலும் உள்ள பல மருத்துவமனைகளில் இந்தக் காப்பீடு ஏற்கப்படுமா என்பதையும் முன்னரே தெளிவாக விசாரிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பலரும் மருத்துவக் காப்பீடு எடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் மருத்துவமனைக்குச் சென்றால் தான் காப்பீட்டு நிறுவனங்களின் உண்மை முகம் நமக்குத் தெரிய வரும். ஆகவே காப்பீட்டு முகவர்கள் சொல்வதை முழுமையாக நம்பாமல், நீங்களே எடுக்கப்போகும் காப்பீடு பற்றி ஆராய்ந்து முடிவெடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com