நாளையத் தேவைக்கு மட்டுமின்றி குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காப்பீடு வசதி உதவுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தான் பலரும் காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். ஒவ்வொரு காப்பீடுக்கும் ஏற்றவாறு பிரீமியம் தொகை மாறுபடும். அவ்வகையில் அஞ்சல் அலுவலகத்தில் விபத்து காப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து அலசுகிறது இந்தப் பதிவு.
முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு வங்கிகளை விட அதிக வட்டியுடன் அஞ்சல் அலுவலகத்தில் பல நல்ல திட்டங்கள் உள்ளன. மாதாந்திர வருமானத் திட்டம், போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ், டைம் டெபாசிட் மற்றும் சேமிப்புக் கணக்குகளில் பொதுமக்கள் பலரும் முதலீடு செய்து வருகின்றனர். விபத்து காப்பீடுகளில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை குறைவாகத் தான் இருக்கிறது. விபத்து காப்பீடுகளை மக்களிடையே பிரபலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் அஞ்சல் துறை, தற்போது வெறும் 5 நிமிடத்திலேயே இந்தக் காப்பீடை எடுக்கும் வகையில் எளிதாக்கியுள்ளது.
அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியா பேமென்ட்ஸ் வங்கி, பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து விபத்து காப்பீடு எடுக்கும் வசதியை பொதுமக்களுக்கு வழங்குகிறது. ரூ.520, ரூ.555 மற்றும் ரூ.755 என்ற ஆண்டு பிரீமியத்தில், ரூ.10 இலட்சம் மற்றும் ரூ.15 இலட்சம் மதிப்புடைய விபத்து காப்பீடை அஞ்சல் துறை வழங்குகிறது. இந்தியாவின் கடைக்கோடியில் வாழும் சாதாரண ஏழை, எளிய மக்களும் அஞ்சல் அலுவலகத்தின் விபத்து காப்பீட்டில் இணைய முடியும்.
18 வயது முதல் 65 வயதுள்ள அனைவரும் விபத்து காப்பீடு திட்டத்தில் சேர முடியும். அஞ்சல் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்க நினைப்பவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றை இணைத்து விண்ணப்பிக்கலாம். தற்போது இந்த முறையில் கூட சிறு மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
"விபத்து காப்பீடை எடுக்க விரும்பினால், தபால்காரரே உங்கள் வீடு தேடி வருவார். அவர் கொண்டு வரும் ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தைப் பயன்படுத்தி, எவ்வித காகிதப் பயன்பாடுமின்றி வெறும் ஐந்தே நிமிடங்களில் ஆன்லைனில் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது."
விபத்து காப்பீட்டில் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம் மற்றும் பகுதி ஊனம் ஆகியவற்றிற்கு பிரீமியத்திற்கு ஏற்ப ரூ.10 இலட்சம் முதல் ரூ.15 இலட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். பாலிசிதாரருக்கு விபத்தால் ஏற்படும் மருத்துவச் செலவை சமாளிக்க அதிகபட்சமாக ரூ.1 இலட்சம் வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தில் வருடத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்து கொள்ளும் வசதியும், தொலைபேசி மூலம் மருத்துவரை அழைத்து ஆலோசனை பெறும் வசதியும் உள்ளது.
விபத்தால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரரின் இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவுக்கு ரூ.1 இலட்சமும், திருமண செலவிற்கு ரூ.1 இலட்சமும் வழங்கப்படும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாள்களில் முதல் 15 நாட்களுக்கு தினந்தோறும் ரூ.1,000 தினப்படியாக வழங்கப்படும். ஒருவேளை விபத்தில் பாலிசிதாரர் விபத்தில் இறந்து விட்டால், ஈமச்சடங்குகளைச் செய்ய ரூ.5,000 வழங்கப்படும்.
அஞ்சல் அலுவலகத்தின் விபத்து காப்பீட்டில் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும் போது இந்த அரிய வாய்ப்பைத் தவற விடலாமா! நமது எதிர்காலம் எப்படி இருக்கும் என யாருக்கும் தெரியாது. இருப்பினும், எதிர்காலத்தில் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு, அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்தை அணுகி உடனே இந்த விபத்து காப்பீட்டை எடுத்து விடுங்கள்.