வர்த்தகப் போர் நடைபெற்று வரும் இவ்வேளையில் தங்கத்தின் விலையை கச்சா எண்ணெய் தான் நிர்ணயம் செய்கிறது. கச்சா எண்ணெய் விலை உயரும் போது தங்கத்தின் விலையும் உயர்வதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்.
சுத்திகரிக்கப்படாத ஹைட்ரோ கார்பன் வைப்புகளால் ஆன பெட்ரோலியத்தை தான் கச்சா எண்ணெய் என்கிறோம். விலைமதிப்பிற்குரிய உலோகமாக தங்கம் இருப்பதால் இன்றைய உலகில் தங்கத்தில் அதிக முதலீடு செய்கின்றனர். தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் இவை இரண்டும் இன்றைய பொருளாதாரத்தை தீர்மானிக்கின்றன.
கச்சா எண்ணெய் மற்றும் தங்க விலைகள் பெரும்பாலும் நேர்மறையாக தொடர்புடையவையாக இருப்பதால் இன்றைய பணவீக்கம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக கச்சா எண்ணெய் விலை உயரும்போது தங்கமும் விலை உயர்கிறது.
பணவீக்க உறவு
எண்ணெய் , பல்வேறு தொழில்கள் மற்றும் போக்குவரத்திற்கு ஒரு முக்கியமான உள்ளீடாக இருப்பதால், இதன் விலை ஏற்றம் ஒட்டுமொத்த பணவீக்கத்திற்கு பங்களிக்கிறது. எனவே பணவீக்க காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கையாக தங்கத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதால் தங்கத்தின் விலை உயர்கிறது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் நிச்சயமற்ற தன்மை
கச்சா எண்ணெயின் விலையேற்றம் உற்பத்தி செலவுகளை அதிகரித்து, மந்த நிலைக்கு வழி வகுத்து பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறையாக பாதிப்பதால், முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான சொத்தாக மாற்றி அதன் விலையை உயர்த்துகிறார்கள்.
காலம் மாறுபடும் காரணம்
தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலைகளுக்கு இடையேயான உறவு எப்போதும் சீராக இல்லாமல் சந்தை நிலைமைகள் மற்றும் காலகட்டங்களை பொறுத்து மாறுபடும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன .
சமச்சீரற்ற விளைவுகள்
கொரோனா காலத்தில் தேவை குறைந்ததால் கச்சா எண்ணெய் விலைகள் ஆரம்பத்தில் சரிந்தது. அதே சமயத்தில் பாதுகாப்பான சொத்தான தங்கத்தின் விலை அதிகரித்தது. இது போல் புவிசார் அரசியல் நிகழ்வுகள், விநியோக சங்கிலி சீர்குலைவுகள் போன்ற சமச்சீரற்ற விளைவுகளும் நிகழ்ந்து கச்சா எண்ணெய் மற்றும் தங்க விலைகளின் ஏற்ற இறக்கங்களுக்கு வழி வகுக்கின்றன.
ஒட்டுமொத்தமாக தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் இரண்டும் நேரடி தொடர்புடையவையாக இருப்பதால் ஒன்றுக்கொன்று விலை ஏற்ற இறக்கங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன .