
நிதித் தேவைகள் அதிகமிருக்கும் போது பலரும் கடன் வாங்குவது வழக்கம். இன்றைய நிலையில் கடன்கள் பல விதங்களில் கிடைக்கின்றன. அதில் ஒன்று தான் கிரெடிட் கார்டு. இதில் முன்கூட்டியே ஒரு குறிப்பிட்ட தொகை உங்களுக்கு கொடுக்கப்படும். இதனை சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொண்டு, சரியான நேரத்தில் திருப்பி செலுத்தி விட்டால், எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒருவேளை சரியாகத் திருப்பி செலுத்தவில்லை என்றால், மற்ற கடன்களைக் காட்டிலும் அதிக வட்டியை செலுத்த நேரிடும்.
நிதி சார்ந்த விஷயங்களில் கிரெடிட் கார்டை சரியாகப் பயன்படுத்தினால் மிகச்சிறந்த நண்பனாக இருக்கும். சரியாக நிர்வகிக்கத் தெரியவில்லை என்றால், இதுவே உங்களுக்கு சாபமாகவும் மாறி விடும். மிக எளிதாக கிடைத்து விடுகிறது என்பதற்காக கிரெடிட் கார்டை யாரும் வாங்க வேண்டாம். உண்மையிலேயே இதன் தேவை உங்களுக்கு அவசியம் என்றால் மட்டுமே வாங்க வேண்டும்.
அவ்வகையில் யாரெல்லாம் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தவே கூடாது என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
1. ஆடம்பர செலவு செய்பவர்கள்:
ஆடம்பரமாக செலவு செய்யக்கூடிய நபர்களின் கையில் கிரெடிட் கார்டு இருந்தால், நிச்சயமாக கடன் வரம்பை மீறி செலவு செய்து விடுவார்கள். இது அவர்களுக்கு அடுத்த சில நாட்களிலேயே நிதிச் சிக்கலை ஏற்படுத்தி விடும். இது சிபில் ஸ்கோரையும் குறைத்து விடும். ஆகையால் இவர்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.
2. மாதத் தவணை செலுத்துபவர்கள்:
வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் ஏற்கனவே கடன் வாங்கி, மாதத்தவணை செலுத்துபவர்களும் கிரெடிட் கார்டைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், ஏற்கனவே இருக்கும் கடன் சுமையுடன் கிரெடிட் கார்டு சுமையும் சேர்ந்து விட்டால், அது உங்களுக்குத் தான் ஆபத்து.
3. தள்ளிப் போடும் பழக்கம் கொண்டவர்கள்:
நிதிப்பழக்கத்தைப் பொறுத்தவரை பிறகு பில் தொகையை செலுத்திக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுபவர்களும் கிரெடிட் கார்டை வாங்க வேண்டாம். ஏனெனில் இதே பழக்கத்தை கிரெடிட் கார்டு பில் தொகையை கட்டும் போதும் பின்பற்றினால், அதிக வட்டி செலுத்த நேரிடும்.
4. ஒழுங்கற்ற நிதிப் பழக்கம் கொண்டவர்கள்:
நிதிப் பழக்கத்தில் கட்டுப்பாடு இல்லாதவர்களும் கிரெடிட் கார்டைத் தவிர்த்து விடுங்கள். இவர்கள் ரொக்கமாக செலவு செய்வதைக் காட்டிலும், கார்டில் இருந்து ஆன்லைன் வழியாக அதிக செலவு செய்ய வாய்ப்புண்டு. இது பின்னாட்களில் உங்களை நிதி நெருக்கடிக்கு ஆளாக்கி விடும்.
5. மீண்டும் மீண்டும் கடன் வாங்குபவர்கள்:
ஒரு கடனை அடைப்பதற்கு மற்றொரு கடனை வாங்குபவர்களும் கிரெடிட் கார்டைத் தவிர்க்க வேண்டும். இங்கு பல பேர் ஒரு கிரெடிட் கார்டை வாங்கி விட்டு, அதற்கான பில்லைக் கட்ட இன்னொரு கிரெடிட் கார்டை வாங்குகின்றனர். இது அப்போதைக்குத் தீர்வாக இருக்குமே தவிர நிரந்தரத் தீர்வு அல்ல.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், அவ்வப்போது உங்களைத் தொடர்பு கொண்டு இலவச கிரெடிட் கார்டை வழங்குகிறோம் என்று சொல்லுவார்கள். பலரும் கிரெடிட் கார்டை வைத்திருக்கிறார்கள்; நாமும் வாங்கிக் கொள்ளலாம் என்று மட்டும் வாங்கி விடாதீர்கள். திட்டமிட்ட மற்றும் சரியான நிதிப் பழக்கம் கொண்டவர்கள், இதன் தேவை இருக்கும் பட்சத்தில் மட்டுமே கிரெடிட் கார்டை வாங்க வேண்டும். இல்லையெனில் இதனைத் தவிர்ப்பது தான் மிகவும் நல்லது.