
இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு டிஜிட்டல் சேவைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பல்வேறு விதமான கடன்கள் முதல் கிரெடிட் கார்டுகள் வரை அனைத்து சேவைகளும் ஆன்லைன் வழியாக வெகு விரைவில் செயல்படுத்தப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இதற்கான முக்கிய காரணங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.
இந்தியப் பொருளாதாரத்தில் நிதித்துறையின் போக்குகளை தொடர்ந்து கவனிப்பவர்கள், கிரெடிட் கார்டு சேவையின் வளர்ச்சியை நிச்சயமாக அறிந்திருப்பார்கள். குறிப்பாக நகரங்களில் தான் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளன.
எவ்வித பிணயமுமின்றி வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதே இதன் சிறப்பம்சம். இதனாலேயே பலரும் கிரெடிட் கார்டுகளை விரும்பி வாங்குகின்றனர். அதோடு அவசரத் தேவைகளுக்காகவும் கிரெடிட் கார்டை சிலர் வாங்குகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்தியாவில் கிரெடிட் கார்டுகளில் எண்ணிக்கை 100 மில்லியனைக் கடந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த எண்ணிக்கை இன்னும் சில ஆண்டுகளில் இருமடங்காக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருசில வாடிக்கையாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பதும் இந்த உயர்வுக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் பரிவர்த்தனை:
ஆன்லைன் பணப் பரிவர்த்தனை தொடர்பான தொழில்நுட்ப வளர்ச்சி, கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை உயர்வதற்கு முக்கிய அங்கமாகும். நேரடி பணப் பரிமாற்றத்தைக் காட்டிலும், இன்றைய காலகட்டத்தில் ஆன்லைனில் பணம் பரிவர்த்தனை நடைமுறைகள் தான் அதிகம். அதற்கேற்ப கூகுள் பே, போன் பே மற்றும் பேடிஎம் போன்ற செயலிகள் ஆன்லைன் பணப் பரிமாற்றத்திற்கு வலு சேர்க்கின்றன.
பொருளாதார எழுச்சி:
கொரோனா வைரஸ் காலகட்டத்தில் சரிந்த இந்தியப் பொருளாதாரம், மிக விரைவிலேயே எழுச்சியைக் கண்டது. சவாலான சூழலைக் கையாள்வதில் இந்தியப் பொருளாதாரம் திறன் மிகுந்து காணப்படுவதும் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை உயர காரணமாகத் திகழ்கிறது.
ஆன்லைன் ஷாப்பிங்:
இன்று ஆன்லைன் வழியாக ஷாப்பிங் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்களில் தள்ளுபடிகள் கிடைப்பதால், அதிக விற்பனை நடக்கும். இந்நேரத்தில் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டுகள் பெரிதும் துணை புரிகின்றன.
பல சேவைகள்:
வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப கிரெடிட் கார்டு சேவைகளை நிதி நிறுவனங்களும், வங்கிகளும் வழங்குகின்றன. இந்த பல்வகையான சேவைகள் இன்றைய இளம் தலைமுறையினரை பெரிதும் கவர்வதும் கிரெடிட் கார்டு உயர்வுக்கு காரணம்.
நிதி பழக்கம்:
பெரிய செலவுகளுக்கு கிரெடிட் கார்டைப் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். இதனால் அவர்களின் நிதிப் பழக்கவழக்கத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தள்ளிப்போட்ட செலவுகளைக் கூட, சிலர் கிரெடிட் கார்டுகளின் மூலம் வாங்குகின்றனர். மேலும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதில் பலரும் அனுபவம் பெற்றுள்ளனர்.
கிரெடிட் கார்டுகள் அதிகரித்துள்ள அதேசமயம், இதில் தவணையை சரியாக செலுத்தாமல் அதிக வட்டி கட்டுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளன. ஆகையால், கிரெடிட் கார்டு பயன்பாட்டில் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியம்.