'ஏலச்சீட்டு' - இப்படியும் ஒரு சேமிப்பு முறையா?

Ela Cheetu
Ela Cheetu
Published on

அவசர பணத்தேவைகளை சமாளிக்க அல்லது எதிர்காலத் தேவைகளுக்காக ஒரு கணிசமான தொகையை சேமிக்க என நமது முன்னோர்கள் கையாண்ட ஒரு வெற்றிகரமான வழியே ஏலச்சீட்டு. 

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் பெரும்பாலோர் அவர்களின் சக்திக்கேற்ப ஏதாவது ஒரு ஏலச்சீட்டில் உறுப்பினராய் இருப்பார்கள்.   ஏலச்சீட்டை நம்பி திருமணம், வீடு கட்டுதல் முதலான பெரிய விஷயங்களைத் தொடங்குவார்கள். கடன் கொடுத்தவர்கள் கடனைத் திருப்பிக் கேட்கும் போது இந்த மாசம் சீட்டு எடுத்துக் குடுத்துடறேன் என்பார்கள்.  ஏலச்சீட்டு என்றால் என்ன என்று கேட்பது புரிகிறது. அதைப்பற்றிய விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.

ஏலச்சீட்டை நடத்துபவர்கள் நம்பிக்கையான சிலரைத் தேர்வு செய்து உறுப்பினர்களாகச் சேர்ப்பார்கள். பெரும்பாலும் பத்து அல்லது இருபது நபர்கள் ஏலச்சீட்டில் உறுப்பினர்களாக இருப்பார்கள். உதாரணமாக மாதம் ஐநூறு ரூபாய் என்றால் இருபது நபர்கள் உள்ள சீட்டு பத்தாயிரம் ரூபாய் ஏலச்சீட்டு என அழைக்கப்படும். மாதம் ஆயிரம் ரூபாய் என்றால் இருபதாயிரம் ரூபாய் ஏலச்சீட்டு என அழைக்கப்படும். மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் ஏலச்சீட்டிற்கான தொகையை அதை நடத்துபவரிடம் செலுத்தி விடவேண்டும். ஒருவரே பலப்பலத் தொகைகளில் பலவிதமான ஏலச்சீட்டுக்களை நடத்துவார்கள். ஒருவர் அவருடைய பொருளாதாரத்திற்கு ஏற்ப எத்தனை ஏலச்சீட்டில் வேண்டுமானாலும் உறுப்பினராய் சேரலாம்.

மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் உறுப்பினர்களை ஒரு இடத்திற்கு வரவழைத்து ஏலச்சீட்டை நடத்துபவர் ஏலத்தை ஆரம்பிப்பார். ஏலத்தை நூறு ரூபாயில் தொடங்கி வைப்பார். பத்தாயிரம் ரூபாய் என்றால் ஒருவர் ஐநூறு ரூபாய் தள்ளி ஒன்பதாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு ஏலத்தைக் கேட்பார். அந்த மாதம் வேறு ஏதேனும் உறுப்பினருக்கு அவசரப் பணம் தேவை என்றால் அவர் எழுநூறு ரூபாயைத் தள்ளி ஒன்பதாயிரத்து முன்னூறு ரூபாய்க்கு ஏலத்தைக் கேட்பார்.  ஒவ்வொரு மாதமும் உறுப்பினரின் அவசர பணத்தேவைக்கு ஏற்ப இறுதி ஏலத்தொகை மாறுபடும்.

இதையும் படியுங்கள்:
இணையத்தில் கிடைக்கும் முதலீட்டு ஆலோசனைகளை நம்பலாமா? 
Ela Cheetu

அது சரி... ஏலச்சீட்டில் எப்படி உறுப்பினர்களுக்கு லாபம் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

உதாரணமாக முதல் மாதம் ஒருவர் ஆயிரத்து ஐநூறு ரூபாய் தள்ளி எட்டாயிரத்து ஐநூறு ரூபாய் கேட்டு அதற்கு மேல் யாரும் கேட்கவில்லை என்றால் ஏலத்தொகை ஆயிரத்து ஐநூறு ரூபாயைத் தள்ளி மீதுமுள்ள எட்டாயிரத்து ஐநூறு ரூபாயை அப்போதே ஏலம் நடத்துபவர் ஏலம் எடுத்த உறுப்பினரிடம் ஒப்படைப்பார். ஆயிரத்து ஐநூறு ரூபாய் தள்ளுத்தொகை எனப்படும். தள்ளுத் தொகை ஆயிரத்தி ஐநூறை இருபதால் வகுத்தால் தலைக்கு 75 ரூபாய் கிடைக்கும். இந்த 75 ரூபாய் உறுப்பினர்களுக்குப் பிரித்துத் தரப்படும்.

பொதுவாக இரண்டாவது மாதத்தில் வசூலாகும் மொத்த பணத்தையும் ஏலம் ஏதும் விடாமல் ஏலச்சீட்டை நடத்துபவர் எடுத்துக் கொள்ளுவார். இதுவே ஏலச்சீட்டு நடத்துபவர் அடையும் அதிகபட்ச லாபமாகும். ஆனால் அவருக்கு ஏலச்சீட்டை இருபது மாதங்கள் தொடர்ந்து நடத்தி வசூலிக்கும் பணத்தை யாருக்கும் நஷ்டம் ஏற்படாமல் திருப்பித் தரவேண்டிய மாபெரும் பொறுப்பு இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
வைப்பு நிதி பற்றி நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள் என்னென்ன?
Ela Cheetu

மூன்றாவது மாதத்தில் இருந்து பத்து அல்லது இருபதாவது மாதம் வரை சீட்டிற்கேற்ப ஒவ்வொரு மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஏலம் நடத்தப்படும். ஒருமுறை ஏலத்தில் பணத்தைப் பெற்றவர் பின்னர் ஏலத்தில் பங்கு பெற முடியாது.  ஏலச்சீட்டில் பணத்தைப் பெற்றவர் தொடர்ந்து வரும் ஒவ்வொரு மாதமும் ஏலச்சீட்டுத் தொகையை தவறாமல் செலுத்தி விட வேண்டும்.  ஏலச்சீட்டைப் பொறுத்தவரை நேர்மை மிக முக்கியமாகும். ஒவ்வொரு மாதமும் தள்ளு என்ற பணம் உறுப்பினர்களுக்கு லாபமாகக் கிடைக்கும். தள்ளு பணம் சில மாதங்கள் அதிகமாகவும் சில மாதங்கள் குறைவாகவும் சீட்டு எடுக்கும் உறுப்பினர்களின் அவசரப் பணத்தேவையைப் பொறுத்து அமையும்.

பலர் ஏலச்சீட்டை அவசர பணத்தேவைகளுக்காக எடுத்துப் பயன்படுத்துவர். சிலர் இதை ஒரு சேமிப்பாகக் கருதி மாதாமாதம் முதலீடு செய்து கடைசியில் பணத்தைப் பெறுவர். இதன் மூலம் அவர் அதிக லாபமும் அடைவார். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அவசர காலத்தில் ஆபத்பாந்தவனாய்த் திகழ்ந்தது ஏலச்சீட்டு என்றால் அது மிகையல்ல. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com