
சிறுதுளி பெருவெள்ளம் என்ற பழமொழி மிகவும் பிரபலமானது. சிறு துளிகள் ஒன்று திரண்டு பெருவெள்ளமாக உருவாவதைப் போல் சிறுக சிறுக நாம் சேமித்தால், அந்த சிறிய தொகை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பெரிய தொகையாக மாறி நமது குறிக்கோளினை அடைய உதவும். காலங்காலமாக, நாமும் உண்டியலில் பணத்தைச் சேமித்து, அதனைப் பல்வேறு குறிக்கோள்களுக்குப் பயன்படுத்தி வருகிறோம். அரசாங்கமும் மக்களுக்காக பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களை அஞ்சலகம் வாயிலாக வழங்குகிறது.
இதனைக் குறித்த ஓர் ஈசாப் கதையைப் பார்ப்போம்.
ஒரு காகம் கடுமையான தாகத்தில் இருந்தது. அப்போது அதன் கண்களில் ஒரு ஜாடி தென்பட்டது. அந்த ஜாடியில் இருக்கும் தண்ணீரை அருந்த காகம் மகிழ்ச்சியுடன் பறந்து வந்தது.
ஆனால், ஜாடியிலோ தண்ணீர் அடியில் இருந்தது. அந்தத் தண்ணீரைக் காகத்தினால் தனது அலகால் எட்ட முடியவில்லை. காகம் பல்வேறு யோசனைகளை யோசித்தது. அப்போது திடீர் என அதற்கு ஒரு யோசனை தோன்றியது. காகம் பறந்து சென்று அருகில் இருந்த கற்களை ஒவ்வொன்றாக எடுத்து வந்து ஜாடியில் போடத் துவங்கியது.
கற்களை ஒன்றன்பின் ஒன்றாக ஜாடியில் போட, ஜாடியில் தண்ணீரின் மட்டம் உயர்ந்தது. காகம் தனது அலகினால் தண்ணீரைக் குடிக்கும் அளவிற்கு தண்ணீரின் மட்டம் உயர்ந்தது. தண்ணீரைக் குடித்த காகம் தனது உயிரைக் காத்துக் கொண்டது.
இங்கு தாகத்தைத் தீர்ப்பது என்பது காகத்தின் குறிக்கோள். தாகத்தைத் தீர்க்க தண்ணீர் தேவை. காகத்தின் முன்னால் ஜாடி இருந்த பொழுதும் அந்த ஜாடியின் தண்ணீரை அதனால் குடிக்க முடியவில்லை. ஏனென்றால் அந்த ஜாடியின் தண்ணீரைக் குடிப்பதற்கு போதுமான கற்கள் அந்த ஜாடியில் இல்லை. இங்கு காகம் முயன்று ஒவ்வொரு கல்லாக கொண்டு வந்து போட ஜாடியின் தண்ணீர்மட்டம் உயர்ந்தது. இங்கு கற்கள் என்பவை பணத்தைப் போன்றவை. சிறிது சிறிதாக கற்கள் சேர, தண்ணீரின் மட்டம் உயர்ந்து, தண்ணீர் காகத்தின் அலகுக்கு எட்டியதைப் போல், சிறிது சிறிதாக பணத்தைச் சேமிக்க, அவை குறிக்கோளினை நாம் அடைய உதவுகின்றன. ஒரே ஒரு கல்லை மட்டும் போட்டிருந்தால் தண்ணீரின் மட்டம் போதுமான அளவு உயர்ந்து இருக்காது. தொடர்ந்து கற்களைப் போடுவதன் மூலம் தண்ணீரின் மட்டம் உயர்ந்தது. எனவே, குறிக்கோளினை அடைய தொடர்ந்து பணத்தைச் சேமிப்பது அவசியம்.
பணத்தைத் தொடர்ந்து உண்டியலில் சேமித்தால், நாம் சேமித்த பணம் மட்டுமே இருக்கும். இதற்கு மாறாக, அருகிலுள்ள வங்கியில் சேமிப்புக் கணக்கில் பணத்தைச் சேமித்தால், 3% முதல் 4% வரை வட்டி ஈட்டித் தரும். இது எவ்வாறெனில் 100 கற்கள் ஜாடியில் போடும்போது, 4 கற்கள் அந்த ஜாடியில் அதிகமாக சேர்வதைப் போன்றது. இன்னும் வேகமாக பணத்தைப் பெருக்க வங்கியில் தொடர் வைப்பு நிதியில் முதலீடு செய்ய வேண்டும். தொடர் வைப்பு நிதிகளில் 8% வரை வட்டி கிடைக்கும். இது எவ்வாறெனில், ஜாடியில் 100 கற்களுக்கு 8 கற்கள் அதிகமாக சேர்வதைப் போன்றது. தொடர் வைப்பு நிதிகளில் இவ்வாறு மாதாமாதம் சேமிக்கும் பொழுது வருட கடைசியில் நமது குறிக்கோளினை அடைவது எளிதாகும்.
குறுகிய காலக் குறிக்கோள்கள்(< 5 ஆண்டுகள்) அடைவதற்கு வங்கி, அஞ்சலகத்தின் வைப்பு நிதிகள், தொடர் வைப்பு நிதிகள் போன்றவை சிறப்பானவை.
எந்த ஒரு முதலீட்டிற்கும் மூன்று கூறுகள் உண்டு.
வளரும் விகிதம் (Rate of return)
நீர்ப்புத்தன்மை (Liquidity)
பணத்தை இழக்கும் அபாயம் (Risk)
வைப்பு நிதிகள் மற்றும் தொடர் வைப்பு நிதிகளில் குறுகிய காலத்தில் வளரும் விகிதம் நடுத்தரம். பணத்தை இழக்கும் அபாயம் குறைவு. நீர்ப்புத்தன்மை அதிகம். எனவே, குறுகிய காலக் குறிக்கோள்களுக்கு வைப்பு நிதிகள் மற்றும் தொடர் வைப்பு நிதிகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மிடம் முன்கூட்டியே அதிக பணம் இருந்தால் வைப்பு நிதியில் முதலீடு செய்து இன்னும் பெருக்கலாம். நம்மிடம் குறைவான பணம் இருந்தால் அதனைக் கொண்டு தொடர் வைப்பு நிதியைத் தொடங்கி மாதா மாதம் சேமித்து நமது குறிக்கோளினை அடையலாம். உதாரணமாக, வருடக் கடைசியில் சுற்றுலா செல்ல, வருடத் தொடக்கத்திலிருந்து மாதா மாதம் சேமித்து வர, வருடக் கடைசியில் சேமித்தப் பணத்தை விட, அதிகமாக பணம் வளர்ந்து நாம் சுற்றுலா செல்ல உதவும். இதனைப் போலவே, வீட்டில் குளிர்சாதனப் பெட்டி வாங்குவது, மோட்டார் வாகனம் வாங்குவது போன்ற குறுகிய காலக் குறிக்கோள்களுக்கு மாதா மாதம் பணத்தைச் சேமிக்க, இவ்வாறு தொடர் வைப்பு நிதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தொடர் வைப்பு நிதிகளைப் பயன்படுத்தி மாதா மாதம் முதலீடு செய்வோம். குறுகிய காலக் குறிக்கோள்களை எளிதாக அடைவோம்.