ஒவ்வொருவரும் குடும்பத்தின் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்பவே நிதி திட்டமிடலை வகுக்க வேண்டும். மாதந்தோறும் பட்ஜெட்டை முறையாகத் திட்டமிட்டு செலவு செய்தால், வீண் செலவுகளை குறைக்க முடியும். இருப்பினும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே மாதிரி பணத்தைக் கையாள மாட்டார்கள். ஒருவர் சிக்கனமாக செலவு செய்யலாம்; மற்றொருவர் சிக்கனமின்றி தாராளமாக வீண் செலவுகளை செய்யலாம். இதுமாதிரியான நேரத்தில் இருவருக்கும் நிதி சார்ந்த கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இது நாளடைவில் மோதலாகவும் மாறக் கூடும். ஆகையால் இதனைத் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
நிதி சார்ந்த முடிவுகளை எப்போதும் தன்னிச்சையாக எடுக்கக் கூடாது. கணவன் மனைவி இருவரும் கலந்தாலோசித்து முடிவெடுத்தால், கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து விடலாம். அதேபோல் அனைவரது சம்பளமும் ஒரே அளவில் இருக்க வாய்ப்பில்லை. ஆகையால் குறைந்த சம்பளம் வாங்குபவர் தாழ்வு மனப்பான்மையில் சிக்கி விடாமல் பாதுகாப்பதும் முக்கியம்.
பணம் சார்ந்த ஆளுமை:
ஒவ்வொருவரும் பணத்தை எப்படி செலவு செய்கிறார்கள் என்பதை வைத்தே, அவர்களின் நிதி ஆளுமையை நம்மால் புரிந்து கொள்ள முடியும். தாராளமாக செலவு செய்பவர் மற்றும் சிக்கனமாக செலவு செய்பவர் என இரு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்களின் பணம் சார்ந்த ஆளுமை குணத்தைப் நாம் புரிந்து கொண்டால், குடும்பத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கலாம்.
விதிமுறைகள்:
நிதி சார்ந்த தேவைகளுக்கு உங்கள் குடும்பத்திற்கு என தனியாக விதிமுறைகளை வகுத்துக் கொள்வது நல்லது. மருத்துவச் செலவு, விடுமுறைச் செலவு, வாழ்வியல் செலவு மற்றும் சேமிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு மாதந்தோறும் எவ்வளவு தொகையை ஒதுக்க வேண்டும்; செலவுகள் வரம்பை மீறினால் என்ன செய்ய வேண்டும் போன்ற விதிமுறைகளை உங்கள் குடும்பத்திற்கு ஏற்றவாறு வகுத்துக் கொள்ளலாம்.
உரையாடல் அவசியம்:
நிதி சார்ந்த விஷயங்களில் குடும்ப உறுப்பினர்களுடன் வாதிட வேண்டிய சூழல் ஏற்பட்டால், அவர்களின் எண்ணத்தையும் கேட்டறிய வேண்டும். அவர்கள் எடுக்கும் நிதி முடிவுகளையும் நாம் ஆதரிக்க வேண்டியது அவசியமாகும். இதுமாதிரியான வெளிப்படையான உரையாடல், இருவருக்கும் இடையிலான உறவை மேம்படுத்த உதவும். குறிப்பிட்ட நிதித் தேவையில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால், முடிவெடுப்பதற்கு முன்பே அதுகுறித்து பேச வேண்டும். மாறாக தன்னிச்சையாக முடிவெடுத்து விட்டு பேசினால், இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் தான் உண்டாகும்.
நீண்ட கால இலக்குகளை மனதில் வைத்து, மாதந்தோறும் ஒரு தொகையை முதலீட்டிற்காக பயன்படுத்தலாம். நிதி சார்ந்த விஷயங்களில் யாரேனும் ஒருவருக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும், அதை அப்போதே சொல்லி விடுவது நல்லது. இல்லையெனில் அது நாளடைவில் தேவையில்லாத மனக்குழப்பத்தை ஏற்படுத்தி விடும்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏதுமின்றி நிம்மதியாக வாழ்வதற்கு நிதி சார்ந்த விஷயங்களை திறமையாக கையாள வேண்டும். பாரம்பரிய சொத்துக்களை பிரிக்கும் போது கூட சண்டை சச்சரவுகள் ஏற்படுவதை நாம் பார்த்திருப்போம். ஆகையால் சில நேரங்களில் விட்டுக் கொடுத்துப் போவதும் உறவுகளின் பலத்தைக் கூட்டும்.