EPFO அறிமுகப்படுத்திய தானியங்கி முறையின் அம்சங்கள்!

EPFO
EPFO
Published on

பிஎஃப் பயனாளர்கள் முன்பணம் எடுக்க இனி அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அவசரத் தேவைகளுக்கு முன்பணம் எடுக்க புதிய தானியங்கி வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் 3 நாட்களில் முன்பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதன் முக்கிய அம்சங்களை இப்போது காண்போம்‌.

மாதச் சம்பளம் வாங்கும் அனைத்து பணியாளர்களுக்கும், மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO) நிறுவனம் பிடித்தம் செய்கிறது. இந்தத் தொகை வருங்கால சேமிப்பிற்கு உதவும் என்ற நோக்கத்துடன் பிடித்தம் செய்யப்படுகிறது. இப்போது டிஜிட்டல் மயமாகி வருவதால், பிஎஃப் பணத்தை எடுக்க நாம் எங்கும் அலைய வேண்டியதில்லை. இபிஎஃப்ஓ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பித்தாலே, சில நாட்களில் நமது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்நிறுவனம் பிஎஃப் பயனாளர்கள் முன்பணம் பெறுவதற்கான விதிமுறைகளை தற்போது எளிதாக்கி இருக்கிறது. இதன்படி திருமணம், கல்வி, மருத்துவ உதவி மற்றும் வீடு கட்டுதல் போன்ற முக்கிய கோரிக்கைகளுக்கு முன்பணம் பெற ஆட்டோ-மோட் செட்டில்மென்ட் (Auto-Mode Settlement) எனப்படும் தானியங்கி முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.

Advance in PF
Advance in PF

தானியங்கி முறை:

சுமார் 6 கோடிகளுக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்டுள்ள இபிஎஃப்ஓ நிறுவனம், பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது பல்வேறு திருத்தங்களை கொண்டு வருகிறது. புதிதாக கொண்டுவரப்பட்ட தானியங்கி முறையில், முன்பணம் கோரி விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் எவ்வித மனித தலையீடுகளும் இன்றி பரிசீலிக்கப்படும். இபிஎஃப்ஓ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக உரிய ஆவணங்களைக் கொண்டு விண்ணப்பித்தால், தானியங்கி முறையில் வெகு விரைவாக பரிசீலனை செய்யப்படும். இந்த முறையில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையில் முன்பணம் பெற பயனாளர்கள் விண்ணப்பித்தால் வெறும் 3 நாட்களில், வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.

தானியங்கு முறையில் மருத்துவ அவசரத்திற்கு முன்கூட்டியே தீர்வு காணும் நடைமுறை கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே செயல்படுத்தப்பட்டது. இருப்பினும் முன்பண வரம்பு தற்போது 50,000 ரூபாயில் இருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சுமார் 2.25 கோடி பிஎஃப் உறுப்பினர்கள் நடப்பாண்டில் தானியங்கி முறையின் பலனைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா சாதனை: உலக வங்கி அறிவிப்பு!
EPFO

விண்ணப்பிக்கும் முறை:

தானியங்கு முறையின் பலனைப் பெறுவதற்கு, பிஎஃப் உறுப்பினர்கள் இ-சேவா போர்டல் மூலம் ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். முன்பணம் வேண்டிய கோரிக்கைக்கு படிவம் 31-ஐ தேர்ந்தெடுத்து, அதில் தகுதி, KYC சரிபார்ப்பு மற்றும் வங்கிக் கணக்கு சரிபார்ப்புகளைச் செய்ய வேண்டும். மேலும் உரிய ஆவணங்கள் அனைத்தையும் இணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட நிபந்தனைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டால், முன்பண கோரிக்கையை வெறும் 3 முதல் 4 நாட்களிலேயே தீர்க்க முடியும்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் தானியங்கி முறை வசதி, அனைத்து பிஎஃப் உறுப்பினர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com