மாத கடைசியில் திண்டாட்டமா? இதோ உங்களுக்கான சில டிப்ஸ்!

Financial Burden
Financial Burden
Published on

மாதச் சம்பளத்திற்கு பணிபுரியும் ஊழியர்கள் பலரும் தங்களுடைய குடும்பத்தின் நிதி நிர்வாகத்தில் திட்டமிடலுடன் செயல்பட வேண்டும்‌. இல்லையெனில், மாத கடைசியில் பணமில்லாமல் அவதிப்பட வேண்டிய சூழல் ஏற்படும். இன்றைய காலத்தில் பெரும்பாலான ஊழியர்கள் மாத கடைசியை கடப்பதற்கு பெரும் சிரமத்தை மேற்கொள்கின்றனர். அடுத்த மாத சம்பளம் எப்போது வரும் என எதிர்பார்ப்பவர்கள், சரியான நிதி திட்டமிடலை மேற்கொள்ளவில்லை என்று தான் அர்த்தம். அவ்வகையில் மாத கடைசியில் ஏற்படும் நிதி சிக்கலை எப்படி தவிர்ப்பது என இப்போது பார்ப்போம்.

நடுத்தர மக்களின் வலியை உணர்த்தும் விதமாக அப்போதே தமிழ் சினிமாவில் ஒரு பாடல் ஒலித்தது. ‘ஒண்ணுல இருந்து 20 வரை கொண்டாட்டம்; 21-லிருந்து 30 வரை திண்டாட்டம்’ என்பது தான் அந்தப் பாடல். இந்தப் பாடலுக்கு ஏற்றவாறே இன்றும் பல குடும்பங்களின் நிலை இருக்கிறது. நிதி திட்டமிடலை சரியாக செயல்படுத்தினால் மட்டுமே மாத கடைசியில் ஏற்படும் பணத்தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.

மாத கடைசியைச் சமாளிக்க முதலில் பட்ஜெட் போடுவது தான் சிறந்தது. பட்ஜெட் தான் நிதி திட்டமிடலின் முதல் படி. கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களில், ஒருவரின் சம்பளம் வீட்டுச் செலவுக்கும், இன்னொருவரின் சம்பளம் சேமிப்பிற்கும் உதவும். ஆனால் ஒருவர் மட்டுமே வருமானம் ஈட்டும் குடும்பங்களில் சேமிப்புக்கும் நிச்சயமாக ஒரு தொகையை ஒதுக்க வேண்டும்.

மின் கட்டணம், வாடகை, மளிகை, வீட்டு பராமரிப்பு செலவு, காய்கறி, சேமிப்பு, கேஸ் மற்றும் அலைபேசி கட்டணம் உள்ளிட்ட மாதாந்திர செலவுகளை 10 தேதிக்குள் முடித்து விடுவது நல்லது. சொத்து வரி, தண்ணீர் வரி, குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், வாகனப் பராமரிப்புச் செலவு உள்ளிட்ட ஆண்டு செலவுகளை முன்னரே திட்டமிட்டு, அதற்கேற்ற நிதியை கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்க வேண்டும்.

ஷாப்பிங் செலவுகளை 15 ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுங்கள். அதற்கும் மேல் ஷாப்பிங் செய்ய வேண்டுமானால், அடுத்த மாதத்தில் செய்வது சிறப்பு. இப்படிச் செய்வதன் மூலம் எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவச் செலவுகளை சமாளிக்க முடியும். மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகள் உள்ள வீடுகளில், மருத்துவச் செலவுகளை முன்னரே திட்டமிடுவது நல்லது.

இதையும் படியுங்கள்:
ஒரு ரூபாய் கூட ஒரு கோடி: சிறிய சேமிப்பு கூட பெரிய தொகையாக மாறலாம்!
Financial Burden

மாதத்தின் முதல் வாரத்திலேயே பட்ஜெட் ஒன்றைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். ஒரு மாதத்திற்கு ஆகும் செலவைக் கணக்கிட்டு, அதில் ஒரு நாளைக்கு எவ்வளவு என சமமாகப் பிரித்து செலவிடலாம். இதன்மூலம் தேவையற்ற பண விரயத்தைக் குறைக்கலாம்.

இன்றைய நவீன யுகத்தில் கிரெடிட் கார்டு மோகம் உங்களைக் கவர வாய்ப்புள்ளது. இருப்பினும் இதனைத் தவிர்ப்பது தான் நல்லது. ஏனெனில் சரியான நேரத்தில் கிரெடிட் கார்டு பில்லைக் கட்ட முடியாமல் போனால், அதிக வட்டி செலுத்த நேரிடும்.

ஆன்லைனில் ஆர்டர் செய்வதைத் தவிர்ப்பதும் நிதி பற்றாக்குறையை சமாளிக்க உதவும். அதோடு தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பதைக் காட்டிலும், ஓடிடியில் படம் பார்த்தும் செலவைக் குறைக்கலாம்.

வீட்டில் வருமானம் ஈட்டும் நபர் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு எடுப்பது வருங்காலத்தில் ஏற்படும் எதிராபாரா செலவுகளைக் குறைக்க உதவும்.

மேற்கண்ட இந்த குறிப்புகளை நீங்கள் தொடர்ந்து பின்பற்றினால், மாதத் தொடக்கத்தில் மட்டுமல்ல, மாத கடைசியிலும் திண்டாட வேண்டிய அவசியம் இருக்காது.

இதையும் படியுங்கள்:
சிறப்பான நிதி திட்டமிடலை மேற்கொள்வது எப்படி?
Financial Burden

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com