

ஒரு மனிதன் தன் வாழ்வில் செய்யும் இரண்டு மிகப்பெரிய செலவுகள் வீடு வாங்குதல் மற்றும் சிற்றுந்து வாங்குதல். இவை இரண்டுமே இலட்சங்களில் செய்யும் செலவுகள். மற்ற எல்லா செலவுகளும் குறைந்த செலவுகள்தான். இந்த இரண்டு பெரிய செலவுகளின் கடன் சுமையை எவ்வாறு குறைப்பது என்பதை விரிவாக பார்ப்போம்.
வீடு;
வீடு என்பது மிகப்பெரிய செலவு. அதற்கு பணம் சேமித்து வாங்குவது சிறப்பானது. ஆனால், அது சற்று கடினம். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வந்தால் எவ்வாறு கடன் சுமையை குறைப்பது என்று பார்ப்போம்.
சொந்த வீடு தேவையாக இருந்தால் மட்டும் வாங்க வேண்டும். தற்போது வீடு வாங்க நினைக்கும் ஊரில் குறைந்தபட்சம் 15 வருடங்களாகவே இருப்போமா என்று சிந்தித்து அவ்வாறு இருக்கும் திட்டமிருந்தால் மட்டுமே அங்கு சொந்த வீடு வாங்க வேண்டும். இல்லை என்றால் வாடகை வீட்டில் இருப்பது நலம். வாங்கி, விற்பதில் பல்வேறு செலவுகள் உண்டு. மேலும், வீடு பராமரிப்பில் பல்வேறு செலவுகள் உண்டு.
தேவைக்கேற்ற வீட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும் - ஔவையார் ஆத்திச்சூடியில் இடம்பட வீடெடேல் என்று அறிவுறுத்துகிறார்கள். அதாவது தேவைக்கு அதிகமான வீட்டைக் கட்டாதே என்கிறார்கள். பெரிய வீடு பெரிய செலவு. மேலும், பராமரிப்பு சார்ந்த செலவுகள், பெரிய வீடுகளுக்கு அதிகம். எனவே, நமது தேவைக்கு ஏற்ற வீட்டை வாங்க வேண்டும்.
3/20/30/40 சாம்யத்தைப் பயன்படுத்தி வீட்டுக் கடன் வாங்க வேண்டும் -
பிரபல நிதி ஆலோசகர் பி. வி. சுப்ரமணியம் வீடு வாங்குவதற்கு 3/20/30/40 சாம்யத்தைக் கூறுகிறார். இதன் மூலம், நாம் பெரும் வீட்டுக் கடன் சுமையில் மாட்டிக்கொள்ள மாட்டோம்.
3 மடங்கு - நமது வருடாந்திர வருமானத்தைப் போல, 3 மடங்கு வீட்டின் விலை
20 வருடங்கள் - 20 வருட வீட்டுக் கடன்
30% - மாதாந்திர சம்பளத்தில் 30% வீட்டுக் கடன் தவணை
40% - வீட்டை வாங்குவதற்கான முன்பணம்
இந்த சாம்யத்தின் மூலம், நமது வருமானத்திற்கு ஏற்ற வீட்டினைத் தேர்ந்தெடுக்க முடியும்.
நமது சம்பளத்தினை சேமித்து, வீட்டின் மதிப்பில் 40% முன்பணத்தை தயார் செய்ய வேண்டும். இதற்கு வங்கியின் தொடர் வைப்பு நிதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நமது வருடாந்திர சம்பளத்தினைப் போன்ற 3 மடங்கு விலையுள்ள வீட்டினை வாங்க வேண்டும். 20 வருட காலவரையுள்ள வீட்டுக் கடன் வாங்க வேண்டும். இன்னும் குறைந்த காலவரையறையை (உதாரணமாக 15 வருடம்) போன்றவை எடுத்துக்கொள்வது நலம். ஏனென்றால், வட்டியாக செலுத்தும் தொகை குறையும்.
வீட்டுக் கடனின் மாதாந்திர கடன் தவணை, நமது மாதாந்திர சம்பளத்தில் 30% க்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டுக்கடன் மட்டுமின்றி எல்லா கடன்களின் மொத்த தவணையும் 30% க்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும்போது, நமது வாழ்க்கை நடத்துவது எளிதாக இருக்கும். கடன்கள் மட்டுமின்றி, முதலீடு, மாதாந்திர செலவுகளுக்கும் போதிய பணம் இருக்கும்.
இவ்வாறு வீட்டைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, நமது வீடு சற்று ஊருக்கு தள்ளி இருக்கலாம். இதன் மூலம் கடன் குறைவாக இருக்கும். சீக்கிரம் கடனைக் கட்டி முடிக்க முடியும்.
சிற்றுந்து
சிற்றுந்து வீட்டை போல மிகப்பெரிய செலவு கிடையாது. அதற்கு நாம் பணத்தைச் சேமித்து வாங்க முடியும். மேலும் சிற்றுந்து ஒரு தேய்மானம் உடைய சொத்து (depreciating asset). எனவே, அதனை கடன் மூலம் வாங்குவது, அதிக பண இழப்பை ஏற்படுத்தும். சிற்றுந்து வாங்குவதற்கு முன் செலவை எவ்வாறு குறைப்பது என்று பார்ப்போம்.
சிற்றுந்து அவசியம் என்றால் மட்டும் வாங்கவேண்டும் - பொதுப் போக்குவரத்தை, ஓலா, ஊபர் போன்ற வாகன வாடகை வசதியைப் பயன்படுத்தி சமாளிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். கண்டிப்பாக, குடும்பத்திற்கு அவ்வப்போது பயணிக்க சிற்றுந்து வேண்டுமெனில், அதனை வாங்கவேண்டும்.
தேவைக்கேற்ற சிற்றுந்தை வாங்க வேண்டும் - நமது தேவைக்கேற்ற சிற்றுந்தினை தேர்ந்தெடுக்க வேண்டும். குறைந்த பராமரிப்பு செலவுள்ள, நல்ல பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த, குறைந்த எரிபொருள் செலவுடைய சிற்றுந்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நமது குடும்பத்திற்கு நான்கு பேர் அமரும் சிற்றுந்தே போதும் எனில் அதற்கேற்ற சிற்றுந்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பயன்படுத்திய சிற்றுந்தை வாங்க வேண்டும் - சிற்றுந்துகள் தேய்மானம் உடைய சொத்து. சிற்றுந்துகள் கடையை விட்டு வெளியேறிய உடனேயே, 10% மதிப்பு இழக்கின்றன. முதல் வருடத்தில் 15% மதிப்பு இழக்கின்றன. இரண்டாம் , மூன்றாம், நான்காம், ஐந்தாம் ஆண்டுகள் முறையே 20%, 30%, 40%, 50% என மதிப்பு இழக்கின்றன. எனவே, பயன்படுத்திய சிற்றுந்தை வாங்கும் பொழுது ஏற்கனவே தேய்மானத்தினை அது பெரிதாக சந்தித்துவிட்டது. நாம் தாங்கும் தேய்மானம் குறைவாக இருக்கும்.
மேலும், குறைவான விலைக்கு கிடைக்கும். வாகனத்தை வாங்கும் முன் அதனை தேர்ந்த ஒரு சிற்றுந்து இயந்திர நிபுணரிடம் (car mechanic) பரிசோதித்து விட்டு வாங்க வேண்டும். பழைய வாகனத்திற்கு பதிலாக, புதிய வாகனத்தை வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 8 முதல் 10 வருடங்களாவது அதனைப் பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் தேய்மானத்தால் ஏற்படும் மதிப்பிழப்பை நாம் குறைத்துக்கொள்கிறோம்.
பணத்தை சேமித்து வாங்க வேண்டும் - சிற்றுந்து போன்ற தேய்மானமான சொத்துக்களைக் கடன் வாங்கி வாங்க கூடாது. பணத்தை சேமித்து வாங்க வேண்டும். மாதா மாதம் வங்கியின் தொடர் வைப்பு நிதியில் பணத்தைச் சேமித்து, நமக்கு ஏற்ற சிற்றுந்தை வாங்க வேண்டும். கடன் வாங்கியே தீரவேண்டும் என்றால் எவ்வளவு குறைந்த வட்டியில் வாங்க முடியுமோ வாங்க பார்க்க வேண்டும். அதன் மூலம் கடன் சுமை குறையும்.
வீடு மற்றும் சிற்றுந்து என்ற இரண்டு பெரிய செலவுகளையும் கடனின்றி சமாளிக்க பார்ப்போம். ஒருவேளை கடன் வாங்கினால் எவ்வளவு சீக்கிரம் அடைக்க முடியுமோ அடைக்கப் பார்ப்போம்.
கடன் இல்லாத மனிதனே நிம்மதியான மனிதன்.