

பாதுகாப்பான ஓய்வுகால முதலீடு எது? பிக்சட் டெபாசிட்டின் நிறைகளும் குறைகளும்:
'பணத்தை என்றுமே தூங்கவிடக்கூடாது' என்று சொல்வார்கள். ஏனெனில் வருடா வருடம் பணவீக்க விகிதம் அதிகமாகிக்கொண்டு தான் செல்லும். பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு ரூபாயின் மதிப்பு எப்படி இருந்தது, ஆனால் தற்போது அதன் நிலைமை என்னவென்று நம் அனைவருக்கும் தெரியும்.
பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஃபிக்சட் டெபாசிட் (FD) பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தைத் தரும். இருப்பினும் பணவீக்கத்தை சமாளிக்கவும், வரிச் சலுகைகளைப் பெறவும் அரசின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), தபால் நிலைய வைப்புத்தொகை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற பல்வேறு திட்டங்களின் கலவையில் (ஓய்வுகால முதலீடு) முதலீடு செய்வது மிகவும் லாபகரமானதாக இருக்கும்.
ஃபிக்ஸட் டெபாசிட் நன்மைகள்:
*முதலீட்டுப் பாதுகாப்பு மற்றும் பங்குச்சந்தை ஆபத்துகள் இல்லாதது. சந்தை மாற்றங்களால் நம் பணம் குறையாது. நிலையான வட்டி கிடைக்கும். அத்துடன் வங்கிகளில் உள்ள டெபாசிட்களுக்கு ரூ. 5 லட்சம் வரை காப்பீடு உண்டு.
*பெரும்பாலான வங்கிகள் 0.50% வரை அதிக வட்டி விகிதத்தை மூத்த குடிமக்களுக்கு வழங்குகின்றன.
*மாதாந்திர அல்லது காலாண்டு அடிப்படையில் வட்டிப் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
*பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்கும் செட்டில்மெண்ட் தொகையை ஃபிக்சட் டெபாசிட்டில் வைப்பது பாதுகாப்பானது. ஆனால் முழுமையான பெரிய லாபத்தைத் தராது. விலைவாசி உயர்வு காரணமாக பணத்தின் மதிப்பு காலப்போக்கில் குறையும்.
*FD மூலம் கிடைக்கும் வட்டி ரூ. 50,000 தாண்டினால், அது நம் வருமானமாக கருதப்பட்டு வரி (TDS) பிடிக்கப்படும்.
*FDயில் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி வரம்பின் படி வரி செலுத்த வேண்டும். ஃபிக்ஸட் டெபாசிட்க்கான வட்டியை பெரும்பொழுதே வட்டியில் வரி பிடித்தம் செய்து மீதியை கொடுப்பார்கள் அல்லது பார்ம் 16 கேட்பார்கள். அதை சமர்ப்பிக்க வேண்டும்.
*பணவீக்கம் அதிகரிக்கும் பொழுது, ஃபிக்சட் டெபாசிட்டில் கிடைக்கும் வட்டி லாபம் குறைவாகத் தோன்றலாம். வட்டி விகிதம் நிலையாக இருப்பதால், விலைவாசி உயர்வுக்கேற்ப வருமானம் போதுமானதாக இருக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மூத்த குடிமக்களுக்கு பரிந்துரைக்கப்படும் சிறந்த மாற்று வழிகள் என்னவென்று பார்க்கலாமா?:
முழுத் தொகையையும் FDல் போடுவதற்கு பதிலாக மத்திய அரசின் சில திட்டங்களில் பிரித்து முதலீடு செய்யலாம்.
*SCSS(Senior Citizen Savings Scheme):
தபால் நிலையம் அல்லது வங்கிகளில் உள்ள இந்தத் திட்டத்தில் FDயை விட அதிக வட்டி கிடைக்கும் (தற்போது 8.2%). இது அரசு திட்டம் என்பதால் முழு பாதுகாப்பானது. காலாண்டுக்கு ஒருமுறை வட்டி கிடைக்கும்.
*தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டம் (MIS):
ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற இது உதவுகிறது.
*SWP (Systematic Withdrawal Plan):
ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை ஃபிக்சட் டெபாசிட்டிலும், மீதியை மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்து மாதாந்திர வருமானம்(SWP) பெறுவது பணவீக்கத்தை வெல்ல உதவும்.
அவசரத் தேவை மற்றும் 3 - 5 ஆண்டுகளுக்கான மருத்துவச் செலவுகளுக்குத் தேவையான பணத்தை FDயில் வைக்கலாம். மீதிப் பணத்தை அதிக வட்டி தரும் அரசு திட்டங்களில் முதலீடு செய்வதே புத்திசாலித்தனம். ஓய்வுகால நிதி என்பது நம் வாழ்நாள் முழுமைக்கான பொறுப்பு. இதற்கு முறையான நிதி ஆலோசகரின் அல்லது நிபுணர்களின் தகுந்த ஆலோசனையைப் பெற்று பல்வேறு திட்டங்களின் கலவையில் பிரித்து முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்.
உங்களின் வாழ்நாள் சேமிப்பை வெறும் பிக்சட் டெபாசிட்டில் மட்டும் முடக்கி வைக்காமல், பணவீக்கத்தின் பிடியில் இருந்து பாதுகாக்கும் தெளிவைப் பெறுவீர்கள். உங்களின் மாதாந்திர தேவைகளுக்கான நிலையான வருமானத்தை உறுதி செய்வதோடு, வரிச் சுமைகளைக் குறைத்து, ஓய்வுகாலத்தை எவ்வித நிதி நெருக்கடியும் இன்றி நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழும் கலையை நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்.