
சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற பல பேருடைய கனவை நனவாக்கித் தருவது வீட்டுக் கடன்கள்தான். இன்றைய பொருளாதார உலகில் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. வங்கி ஊழியர்களே தேடி வந்து கடன் கொடுக்கும் அளவிற்கு, கடன் வாங்குவது மிகவும் எளிதாகி விட்டது. வீட்டுக் கடன் வாங்கும் போது வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்வதில் நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் வீட்டுக் கடனில் ஃபுளோட்டிங் ரேட் மற்றும் ஃபிக்ஸட் ரேட் என இரண்டு விதமான வட்டி விகித முறை கடைபிடிக்கப்படுகிறது. இவையிரண்டில் எது சிறந்ததாக இருக்கும் என்பதை உங்களுக்கு இந்தப் பதிவில் விளக்குகிறோம்.
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை அவ்வப்போது மாற்றுவது வழக்கம். இதனால் கடனுக்கான வட்டி விகிதத்திலும் மாற்றங்கள் நிகழும். வட்டி விகிதம் குறைந்தால் பிரச்சினை இல்லை. அதுவே அதிகரித்தால் கடன் வாங்கியவர்களுக்கு, கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டு விடும். முக்கியமாக வீட்டுக் கடன் வாங்கியவர்கள் ஃபுளோட்டிங் ரேட்டைத் தேர்வு செய்திருந்தால், வட்டி விகிதம் உயரும் போது நிச்சயம் கவலைப்படுவார்கள்.
நீங்கள் வீட்டுக் கடன் வாங்கச் செல்லும் முன்பு, வங்கிகளில் தற்போதைய வட்டி விகிதம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வட்டி விகிதத்தைப் பொறுத்தே வட்டி விகித முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஃபிக்ஸட் ரேட் வட்டி விகித முறையில், வீட்டுக் கடன் வாங்கும் போது என்ன வட்டி விகிதம் இருக்கிறதோ, அதே வட்டியைத் தான் கடன் முடியும் வரையும் செலுத்த வேண்டும்.
ஃபுளோட்டிங் ரேட் வட்டி விகித முறையானது, மாறும் தன்மை கொண்டது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினாலோ அல்லது குறைந்தாலோ, அது உங்கள் கடனுக்கான வட்டியிலும் எதிரொலிக்கும்.
வட்டி விகிதம் குறைவாக இருக்கும் சமயத்தில் வீட்டுக் கடன் வாங்கினால், ஃபிக்ஸட் ரேட் வட்டி விகித முறை தான் சிறந்தது. ஆகையால் இஎம்ஐ தொகையும் அதிகரிக்காது. கொரோனா காலங்களில் குறைந்தபட்சமாக 6.5% வட்டியில் கூட கடன் கிடைத்தது.
ஒருவேளை வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் போது வீட்டுக் கடன் வாங்கினால், ஃபுளோட்டிங் ரேட் வட்டி விகித முறையைத் தேர்ந்தெடுக்கலாம். ஏனெனில், வட்டி விகிதம் அதிகபட்சமாக 10% முதல் 11% வரை தான் உயரும். இது ஒரு சுழற்சி முறை என்பதால், அதன்பிறகு எப்படியும் வட்டி குறைந்து விடும். அப்போது தானாகவே உங்கள் கடனுக்கான வட்டியும் குறையும்.
ஏதேனும் ஒரு வட்டி விகித முறையைத் தேர்வு செய்த பின் மற்றொன்றிற்கு மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இருப்பினும் இந்த வசதியை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது. ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. மேலும், வங்கி ஊழியர்களின் பேச்சைக் கேட்டு வட்டி விகிதத்தைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. ஆகையால் வீட்டுக் கடன் வாங்கும் போதே தற்போதைய வட்டி விகிதத்தைப் பொறுத்து, வட்டி முறையைத் தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது.