
சொந்த வீடு என்பது இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் பெரும் கனவாக இருக்கிறது. இந்தக் கனவை நிறைவேற்றுவதில் பொதுமக்களுக்கு உதவுபவை வங்கிகள் தான். வாடிக்கையாளர்களுக்கு தேவையான நேரத்தில் வங்கிகள் வீட்டுக் கடனை அளிக்கின்றன. இருப்பினும் வீட்டுக் கடனை வாங்கும் போது, காப்பீடு எடுக்க வேண்டும் என வங்கித் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்நேரத்தில் காப்பீடு அவசியம் தானா அல்லது கட்டாயமா என்ற பொதுமக்களின் குழப்பத்திற்கு விடையளிக்கிறது இந்தப் பதிவு.
பொதுவாக கிராமங்களில் பலருக்கும் சொந்த வீடு தான் இருக்கும். ஆனால், நகரங்களில் அப்படி இல்லை. பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசிக்கும் பலரும் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். நகரங்களில் புதிதாக நிலம் வாங்கி வீடு கட்டுவதெல்லாம் இன்றையப் பொருளாதார உலகில் மிகவும் கடினமான ஒன்று. ஆகையால் தான் பலரது கவனமும் வீடு வாங்குவதில் இருக்கிறது. நடுத்தர மக்கள் வீடு வாங்க வேண்டுமென்றால், வங்கியில் வழங்கப்படும் வீட்டுக் கடன் தான் முதல் தேர்வு.
இன்றைய காலகட்டத்தில் வங்கிக் கடன் எளிதாக கிடைத்து விடுகிறது. ஆனால் வட்டி தான் அதிகமாக உள்ளது. வீட்டுக் கடன் வாங்க, தேவையான ஆவணங்களை வங்கிகள் கேட்பது வழக்கமான ஒன்று தான். ஆனால், வாடிக்கையாளர் காப்பீடு எடுக்க வேண்டும் என சில வங்கிகள் நிர்பந்திக்கின்றன. உண்மையில் காப்பீடு எடுக்க வேண்டியது கட்டாயம் தானா என்று பொதுமக்களுக்கு குழப்பம் அடைகின்றனர். இருப்பினும் வீட்டுக் கடன் அவசியம் என்ற காரணத்தால், பலரும் காப்பீட்டை எடுக்கின்றனர்.
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் படி, வீட்டுக் கடன் வாங்கும் வாடிக்கையாளர் காப்பீடு எடுக்க வேண்டிய கட்டாயமில்லை. இருப்பினும் வங்கிகள் காப்பீட்டை எடுக்க வேண்டும் என நிர்பந்திப்பதிலும் ஒரு நியாயம் உள்ளது. வீட்டுக் கடன் தொகையானது அதிகம் என்பதால், ஒரு பாதுகாப்புக் கருவியாக இந்தக் காப்பீடு இருக்கும் என்பது வங்கிகளின் எண்ணம். திடீரென கடன் வாங்கியவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், காப்பீட்டுத் தொகை தான் வீட்டுக் கடனை அடைக்க உதவும். இதன் அடிப்படையில் தான் வங்கிகள் காப்பீட்டை எடுத்தாக வேண்டும் என சொல்கின்றன.
நீங்கள் இன்னொரு விஷயத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். வீட்டுக் கடன் வாங்குபவர்கள், பல மடங்கு மதிப்புடைய சொத்துக்களை அடமானம் வைக்கின்றனர். வீட்டுக் கடனை நீங்கள் அடைக்கும் வரை, அந்த சொத்துக்கு உரிமையாளர் வங்கிகள் தான். இருப்பினும் காப்பீடு எடுப்பது நமக்கான கூடுதல் பாதுகாப்பு தான்.
காப்பீடு எடுப்பது கட்டாயம் அல்ல; இருப்பினும் அவசியமான ஒன்று. வீட்டுக் கடனை நீங்களே அடைத்து விட்டால், பின்னாட்களில் இந்தக் காப்பீட்டுத் தொகை உங்களின் ஓய்வு நாட்களை இனிதாக கழிக்க உதவும் அல்லவா! ஆகையால் காப்பீடு எடுப்பது எப்போதும் வீண் போகாது என்பதை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள!