சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு அங்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், அவர்களுக்கு நிவாரணம் அளிக்க அறிமுகப்படுத்தப்பட்டது தான் பயணக் காப்பீடு திட்டம். இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை இங்கு காண்போம்.
சுற்றுலா செல்லும் போது அனைவரும் அளப்பரிய மகிழ்ச்சியில் மிதப்பார்கள். இருப்பினும், செல்லும் இடங்கள் எதுவாயினும் அங்கு நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டியதும் அவசியம். நம் பாதுகாப்புக்குத் தான் எப்போதுமே முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒருவேளை நமக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அதிலிருந்து வெளிவர முதலில் முயற்சி செய்ய வேண்டும். இன்றைக்கு அனைத்திற்குமே காப்பீடுத் திட்டங்கள் வந்து விட்டன. அவ்வகையில், சுற்றுலா செல்வோருக்கு உதவும் வகையில் பயணக் காப்பீடுத் திட்டம் ஒன்று உள்ளது. இத்திட்டம் பற்றி பல பயணிகளுக்கு இன்றளவும் தெரியாது.
சுற்றுலாவில் ஏற்படும் எதிர்பாராத விபத்துகள், லக்கேஜ் தொலைந்து போகுதல், பணம் தொலைந்து போவது, அவசரத் தேவைக்கான சிகிச்சைகள், பேருந்து மற்றும் ரயிலைத் தவற விடுவதால் உண்டாகும் இழப்புகள் போன்ற பல விஷயங்களுக்கு இந்த பயணக் காப்பீடு உதவியாக இருக்கும்.
பயணக் காப்பீடு எடுக்கும் போது அதில் பொதுவாக மூன்று விஷயங்கள் கவனிக்க வேண்டியது அவசியமாகும். அவை:
1. நிதி சார்ந்த செலவுகளுக்கான பாதுகாப்பு,
2. உடைமைகளுக்கான பாதுகாப்பு மற்றும்
3. உங்கள் ஆரோக்கியம் சார்ந்த பாதுகாப்பு.
இவையனைத்தும் இணைந்த முழுமையான காப்பீட்டுத் திட்டத்தைத் தான் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், பயணம் தொடர்பான அனைத்து அபாயங்களுக்கும் இந்தக் காப்பீடு உதவுமா என்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப காப்பீட்டுத் திட்டங்கள் பல வகைகளாக கிடைக்கின்றன. சர்வதேச பயணக் காப்பீடு, உள்நாட்டு பயணக் காப்பீடு, மூத்த குடிமக்கள் பயணக் காப்பீடு, மாணவர் பயணக் காப்பீடு, மல்டி டிரிப், சிங்கிள் டிரிப் பயணக் காப்பீடு, தனிநபர் மற்றும் குடும்பப் பயணக் காப்பீடு என அவரவர் வசதிக்கேற்ப காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். சுற்றுலா செல்பவர்கள் பயணக் காப்பீட்டுத் திட்டங்களின் விதிமுறைகள் அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக எதற்கெல்லாம் கவரேஜ் கிடைக்கும், கிடைக்காது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக ஏற்கனவே சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நோய்க்கும், உள்நாட்டு கலவரங்கள் மற்றும் போர்கள் ஏதேனும் நடந்தாலும் கவரேஜ் கிடைக்காது. இதுபோன்ற விதிவிலக்குகள் ஒவ்வொரு காப்பீடு நிறுவனங்களுக்கும் வேறுபடும்.
எதிர்பாராத காரணங்களால் பயணம் ரத்து செய்யப்பட்டாலோ, இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்டாலோ காப்பீட்டில் கவரேஜ் கிடைக்குமா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எவ்வளவு தொகைக்கு பயணக் காப்பீடு எடுக்க வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். நாம் எடுக்கப் போகும் காப்பீட்டின் வகை, காப்பீட்டுத் தொகை மற்றும் வயதைப் பொறுத்து தான் பிரீமியம் தொகை இருக்கும்.
சுற்றுலா பயணிகளே! பயணக் காப்பீடு எடுப்பது என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது. இருப்பினும், இப்படியும் ஒரு வசதி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.