நட்பு வேறு; முதலீடு வேறு - தனித்தனியாகவே வைத்திருங்கள்!

Friendship and investment are different
2 male Friends
Published on

தனிமனித முதலீடு என்பதில் தனிமனித என்ற சொல் மிகவும் முக்கியமானது. தனிமனித நிதி முதலீடுகளைத் தனி மனிதனாகச் செய்யுங்கள். நண்பர்களுடன் கூட்டாகச் செய்யாதீர்கள்.‌ ஏன் என்றால், நிதி சார்ந்த முதலீடுகள் தனி மனிதனுக்குத் தனி மனிதன் மாறுபடும். நிதி முதலீட்டின் வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்புகள்,  பணத்தினை இழக்கும் அபாயத்தைத் தாங்கும் மனத்திறன், நிதிக் குறிக்கோள்கள்  என நிதி முதலீடு சார்ந்த அம்சங்கள் தனிநபருக்குத் தனிநபர் மாறுபடும். 

இதனைக் குறித்த ஓர் ஈசாப் கதையைப் பார்ப்போம்... 

ஓர் அடுப்பு கரி விற்கும் வியாபாரியும் ஒரு சலவை தொழிலாளியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். அவர்கள் தினமும் சந்தித்துக் கொள்வர். அவர்கள் ஒருவருக்கொருவர் பண உதவி செய்து கொள்வர். அவர்களது நட்பைக் கண்டு ஊர் மகிழ்ந்தது.

ஒருநாள் அடுப்புக்கரி வியாபாரி தனது சலவைத் தொழிலாளி நண்பனிடம், 'நண்பா! நீ எதற்கு தனியாக கடை வைத்து நடத்துகிறாய். எனது கடையிலேயே உனக்கு ஒரு அறை ஒதுக்குகிறேன். அங்கேயே நீ உனது தொழிலைச் செய்யலாமே. நமது கடைக்கான செலவுகள் குறையுமே!' என்றான். 

'நண்பா! உனது யோசனைக்கு நன்றி. ஆனால், என்னைப் பொருத்தவரை இந்த ஏற்பாடு சாத்தியமல்ல. நான்  எதை சலவை செய்து வெள்ளையாக்கினாலும், உடனே நீ உனது அடுப்புக்கரி மூலம் அதனை மறுபடியும் கருப்பாக்கிவிடுவாய். இதனால் நமது இருவருடைய தொழிலுக்கும் பங்கம் ஏற்படும். நமது உழைப்பு வீணாகும். நாம் என்றும் நண்பர்களாக இருக்க வேண்டும். தொழில் விஷயத்தில் நம்மிடையே கூட்டுறவு வேண்டாம்' என்றான் சலவைத் தொழிலாளி. 

ஆங்கிலத்தில் ஒன்று சொல்வார்கள் ; Dont mix money and friendship, unless you are prepared to lose both. அதாவது, பணம் மற்றும் நட்பு என்ற இரண்டையும் இழக்க தயாராக இல்லாத பட்சத்தில், பணத்தையும் நட்பையும் கலக்காதீர்கள். ஆங்கிலத்தில் மற்றொன்று சொல்லுவார்கள். There is no friendship in business and there is no business in friendship. அதாவது தொழிலில் நட்பு என்பது கிடையாது மற்றும் நட்பில் தொழில் என்பது கிடையாது. இன்னும் சுருக்கமாக சொன்னால், நட்பு வேறு, தொழில் வேறு. இரண்டையும் நாம் கலக்கும் பொழுது அங்கு பல்வேறு பிரச்சனைகள் விளைய வாய்ப்புண்டு.‌

இதையும் படியுங்கள்:
பணக்காரர் ஆகணுமா? இந்த 10 தவறுகளை மட்டும் செய்யாதீங்க!
Friendship and investment are different

அதனைப் போலவே, நட்பு வேறு. முதலீடு வேறு. இருவரும் சேர்ந்து முதலீடு செய்வதால், முதலீட்டு முடிவுகளில் ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால் நட்பு பாதிக்க வாய்ப்பு உண்டு.  உதாரணமாக, பணத்தை இழக்க நேர்வது அல்லது குறைவாக இலாபம் அடைவது என்ற ஒரு சந்தர்ப்பத்தை எடுத்துக் கொள்வோம். இந்தச் சந்தர்ப்பத்தில், தனிமனித நிதியில் அதிக புரிதல் உள்ள நண்பர் சரியாக புரிந்து கொள்வார். ஆனால், அத்தகைய புரிதல் இல்லாத நண்பர் தனது நண்பரிடம் இதைக் குறித்து வருந்தலாம். அப்போது, நடந்த இழப்பைச் சரி செய்ய தனி மனித நிதி புரிதல் உள்ள நண்பர் அபாயகரமான முதலீடுகளில் இறங்கலாம். அதனால் இன்னும் அதிகமாக பணத்தை இழக்கலாம்.‌ அது நட்பில் விரிசலை உண்டாக்கலாம். 

எனவே, நிதி சம்பந்தமான புரிதல் உள்ள ஒருவரிடம், அவரது நண்பர் கூட்டாக முதலீடு செய்யக் கேட்டால், நண்பரை செபியில் பதிவு செய்து கொண்ட பணம் மட்டும் வாங்கிக் கொள்ளும் நிதி ஆலோசகரிடம் அவர் அழைத்துச் செல்லலாம். அவருக்குத் தெரிந்த, நிதி சம்பந்தமான புத்தகங்கள், இணையதளங்கள் போன்றவற்றைப் படிக்குமாறு நண்பரை அறிவுறுத்தலாம். அவருக்குத் தெரிந்த நிதி சம்பந்தமான விஷயங்களை நண்பருக்கு வகுப்பாக எடுக்கலாம். ஆனால், நிதி சார்ந்த முடிவுகள் நண்பரின் சுயமான முடிவுகளாக இருக்க வேண்டும்.

அடுத்தபடியாக, நண்பருடைய பணத்தை அவர் சார்பாக முதலீடு செய்யக்கூடாது. அதுவும் கூட்டாக முதலீடு செய்வதைப் போலத்தான். அந்த முதலீடுகளில் ஏற்படும் இழப்புகளும், குறைவான இலாபங்களும்  நண்பர்களின் உறவில் விரிசலை ஏற்படுத்தலாம். 

எனவே, முதலீடுகளில் நட்பு வேறு, முதலீடு வேறு என்று எண்ணி நட்பையும் முதலீட்டையும் தனித்தனியாகவே வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்வது, என்றும் நட்பு தொடர உதவும். நட்பு வேறு. முதலீடு வேறு. 

இதையும் படியுங்கள்:
கடன் இல்லாத மனிதனே நிம்மதியான மனிதன்!
Friendship and investment are different

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com