கடன் என்பது மனிதனின் சுதந்திரத்தைப் பாதிக்கக் கூடியது. கடன் என்பது நெருஞ்சி முள்ளைப் போன்றது. அது சிறியதாக இருந்தாலும் அது ஏற்படுத்தும் வலி பெரியது என்கிறார் வேதாத்திரி மகரிஷி.
கடன் என்கின்ற படுகுழியில் விழுந்த மனிதன், அதிலிருந்து மேலே வரும் வரை நிம்மதியான வாழ்க்கையை அடைய முடியாது.
இதனைக் குறித்த ஓர் ஈசாப் கதையைப் பார்ப்போம்.
ஒரு எலி பசியாக இருந்தது. ஒரு பெரிய சோள மூங்கில் கூடையிலிருந்து வந்த சோளத்தின் வாசனையை நுகர்ந்தது. அந்த மூங்கில் கூடையில் மூங்கில்களுக்கு இடையே இருந்த சிறிய இடைவெளியில் எலி நுழைவது கடினமாக இருந்தது. எனினும், சோளத்தினை உண்ண வேண்டும் என்ற ஆசை காரணமாக, மிகவும் கடினப்பட்டு எப்படியோ எலி நுழைந்து விட்டது.
உள்ளே சென்ற எலி சோளத்தை அதிகமாக சாப்பிட்டது. தன்னுடைய அளவைப் போன்று மூன்று மடங்கு ஆகிவிட்டது. சாப்பிட்டது போதும் என்று அது வெளியே வர எண்ணியது. ஐயகோ! அதனால் இப்பொழுது அந்தச் சோள மூங்கில் கூடையின் இடைவெளியில் தலையை மட்டுமே வெளியே நீட்ட முடிந்தது. அந்தக் கூடையில் தான் மாட்டிக் கொண்டதை எண்ணி எலி வருந்தியது.
இதனை எல்லாம் ஒரு மரநாய் அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தது. அந்த மரநாய் எலியைப் பார்த்து பின்வருமாறு கூறியது.
'நண்பனே. நீ உண்ணாவிரதம் இருந்து பழைய நிலைக்கு வா. அப்பொழுதுதான் உன்னால் மறுபடி அந்தக் கூடையில் இருந்து வெளிவர முடியும்.' என்றது மரநாய்.
இந்தக் கதையில் சோளக் கூடை என்பது கடன் நிறுவனத்தைப் போன்றது. சோளம் என்பது கடனைப் போன்றது. சோளம் உண்ணாத போது, ஒல்லியாக இருந்த எலி சோளக்கூடைக்குள் நுழைந்து விட்டது. இது ஒரு கடனில்லாத மனிதன் கடன் வாங்குவதைப் போன்றது. சோளக்கூடைக்குள் சென்ற எலி அதிகமாக சோளத்தை உண்டதன் மூலம். அதன் எடை கூடிவிட்டது. ஒரு மனிதன் அதிகமாக கடன் வாங்குவதன் மூலம், அவனது கடன்சுமை கூடிவிடுவதைப் போன்றது.
தன்னுடைய எடையை பழைய நிலைக்குக் குறைத்தப் பிறகுதான், மறுபடி அந்தக் கூடையில் இருந்து எலி விடுபட முடியும். கடன்சுமையை பழைய நிலைக்கு குறைத்தப் பிறகுதான், அதாவது கடனில்லாத போது இருந்த நிலைக்கு வந்த பிறகுதான் கடன் நிறுவனத்திலிருந்து ஒரு மனிதன் விடுபட முடியும். சோளக்கூடையிலிருந்து வெளியேறினால், எலி சுதந்திரம் அடையும். கடன் நிறுவனத்திலிருந்து வெளியேறினால், மனிதன் சுதந்திரம் அடைவான்.
இதனைக் குறித்து பெஞ்சமின் பிராங்க்ளின் பின்வருமாறு கூறுகிறார். கடன்காரனாக காலையில் எழுவதை விட பட்டினியுடன் இரவில் படுப்பது மேல்.
கடனை அடைக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இவற்றைப் பின்பற்றி ஒன்றன் பின் ஒன்றாக கடன்களை அடைத்து முடித்து, கடனில்லாத வாழ்க்கையை அடைய முடியும்.
1. கடன் பனிப்பந்து (debt snowball) முறை: கடன்களை சிறிய பாக்கி முதல் பெரிய பாக்கி வரை வரிசைப்படுத்தி முதலில் சிறிய பாக்கிக் கடனை அடைத்து மற்ற கடன்களுக்கு மாதாந்திர கடன் தவணை மட்டும் செலுத்த வேண்டும். சிறிய கடன்களை அடைக்கும் போது ஊக்கமளிப்பதால், மனோ தத்துவ ரீதியாக சிறந்த முறை.
2. கடன் பனிச்சரிவு (debt avalanche) முறை: கடன்களை அவற்றின் வட்டி விகிதத்தின் படி வரிசைப்படுத்தி முதலில் அதிக வட்டி உள்ள கடனை அடைத்து, மற்ற கடன்களுக்கு மாதாந்திர கடன் தவணை மட்டும் செலுத்த வேண்டும். வட்டிக்கு பணம் குறைவாக செலவாகும்.
3. மன உளைச்சல் (annoying) சார்ந்த முறை: கடன்களை அவை தரும் மன உளைச்சல் படி, வரிசைப்படுத்த வேண்டும். உதாரணமாக, கடன் அட்டை நிறுவனம் அதிக தொந்தரவு செய்தால், அதனை முதலில் அடைக்கலாம். மற்ற கடன்களுக்கு மாதாந்திர கடன் தவணை மட்டும் செலுத்த வேண்டும். குறைந்த மனஉளைச்சல் இருக்கும்.
எந்த முறை உங்களுக்கு ஒத்துவருகிறதோ, அதனைத் தேர்ந்தெடுக்கலாம்.
கடன் இல்லாத மனிதனே நிம்மதியான மனிதன்.