
தங்க ஈ.டி.எஃப் (ETF) வாங்குவது என்பது ஒரு வகையான முதலீட்டு கருவியாகும். இது தங்கத்தின் விலையை பிரதிபலிக்கும் வகையில் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதை வாங்குவதன் மூலம் தங்கத்தை நேரடியாக சொந்தமாக வைத்திருக்க வேண்டியதில்லை. ஆனால் தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களில் இருந்து பயனடையலாம். இதை வாங்குவதற்கு நம்மிடம் ஒரு பங்குச் சந்தை கணக்கு மற்றும் ஒரு டிமேட் கணக்கு இருக்க வேண்டியது அவசியம். பிறகு அந்த கணக்கை பயன்படுத்தி பங்குச்சந்தையில் ஒரு தரகர் மூலம் அல்லது ஆன்லைன் வர்த்தக தளங்கள் மூலம் ஈ.டி.எஃப் ஐ வாங்கலாம். நாம் வாங்கும் ஈ.டிஎஃப் தங்கத்தின் விலையை பிரதிபலிக்கும் வகையில் செயல்படும்.
தங்க ஈ.டி.எஃப் வாங்குவதற்கு ஒரு பங்கு சந்தை கணக்கை திறப்பதும், ஒரு டிமேட் கணக்கைத் திறப்பதும் நம் ஈடிஎஃப் பங்குகளை சேமித்து வைக்க உதவும். இதனை பங்குச்சந்தையில் வாங்குவது எளிது. இதை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். தங்க ஈ.டி.எஃப்களின் விலை, சந்தையில் தங்கத்தின் விலைக்கு ஏற்ப மாறுபடும். தங்கத்தின் விலை சர்வதேச சந்தை நிலவரம், டாலரின் மதிப்பு, இறக்குமதி வரி மற்றும் ஜிஎஸ்டி போன்றவற்றால் பாதிக்கப்படும்.
சந்தையில் பல தங்க ஈடிஎஃப்-கள் உள்ளன. நம் தேவைக்கேற்ப ஒன்றை தேர்வு செய்து வாங்கலாம். உதாரணத்திற்கு கோல்ட் பீஸ்(Gold BeEs) என்பது ஒரு பிரபலமான தங்க ஈ.டி.எஃப் ஆகும். வாங்கிய ஈ டி எஃப் ஐ நம் டிமேட் கணக்கில் பத்திரமாக வைத்திருக்கலாம். நீங்கள் ஒரு புதிய முதலீட்டாளர் என்றால் சிறந்த முதலீட்டு ஆலோசகருடன் கலந்தாலோசித்த பின்பு இதில் முதலீடு செய்யவும். தங்க ஈடிஎஃப் -களின் செயல்திறன், தங்கத்தின் விலையை பொறுத்தது. இதில் முதலீடு செய்வதற்கு முன்பு அதன் கட்டணங்கள் மற்றும் அபாயங்களை தெரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.
தங்க ஈடிஎஃப் என்பது ஒரு மியூச்சுவல் ஃபண்ட் வகையைச் சேர்ந்தது. இது தங்கத்தின் விலையை அடிப்படையாகக் கொண்ட ஒரு முதலீட்டு நிதியாகும். இது தங்கத்தை வாங்காமல் அதன் விலையில் ஏற்ற இறக்கங்களால் பயனடைய ஒரு சிறந்த வழியாகும். இதனை பங்குச்சந்தைகளில் பங்குகளைப் போலவே வாங்கலாம் அல்லது விற்கலாம். இவற்றின் விலை தங்கத்தின் சந்தை விலையை ஒட்டியே இருக்கும். தங்கத்தை நேரடியாக வாங்குவதை விட தங்க ஈ.டி.எஃப்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாகவும், எளிதாகவும் இருக்கும். ஏனெனில் தங்கத்தை சேமித்து வைக்கவோ, பாதுகாப்பாக வைத்திருக்கவோ வேண்டிய அவசியமில்லை.
இது பண வீக்கத்திற்கு எதிரான ஒரு நல்ல முதலீடாக கருதப்படுகிறது. எனவே தங்க ஈ.டி.எஃப்-களில் முதலீடு செய்வது நம் பணத்தை பணவீக்கத்தில் இருந்து பாதுகாக்க உதவும்.
தங்கத்தை வாங்குவது மற்றும் விற்பதுடன் தொடர்புடைய செலவுகள் தங்க ஈ.டி.எஃப்களில் குறைவாகவே இருக்கும். பங்குகள் போல எந்த நேரத்திலும் விற்கலாம். இதனால் இவற்றை எளிதாக பணமாக்கவும் முடியும். ஒரு யூனிட் தங்கம் என்பது ஒரு கிராம் தங்கத்திற்கு சமமாக இருக்கும். தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை முதலீட்டு போர்ட்ஃபோலியோவுடன் ஒருங்கிணைக்க விரும்புபவர்களுக்கு தங்க ஈ.டி.எஃப் ஒரு சிறந்த முதலீட்டு வழியாகும்.
முதலீடு செய்வதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை:
சந்தை அபாயங்கள்:
தங்க ஈ.டி.எஃப் -களின் விலைகள் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை. எனவே முதலீட்டாளர்கள் சந்தை அபாயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
வரிவிதிப்பு:
தங்க ஈ.டி.எஃப்களின் வருமானத்திற்கு வரி விதிக்கப்படலாம். எனவே வரி விதிப்பு விதிகளை புரிந்து கொள்வது அவசியம். இவற்றில் முதலீடு செய்வதற்கு முன்பு சிறந்த நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.