எஸ்ஐபி என்றால் முறையான முதலீட்டுத் திட்டம் என்று பொருள். ஒரு குறிப்பிட்ட காலவரையறையில், தொடர்ந்து ஒரு பரஸ்பரநிதியில் முதலீடு செய்வதுதான் SIP எனப்படும் Systematic Investment Plan ஆகும். அந்தக் காலவரையறை, வாரம், மாதம், வருடம் என இருக்கலாம். இதன் மூலம், பரஸ்பர நிதியில் அலகுகள் வாங்குவது தானியங்கி முறையில் அமைகிறது. நாம் மாதா மாதம் தனியாக அலகுகள் வாங்க வேண்டிய அவசியமில்லை.
இது எவ்வாறெனில், நீங்கள் மாதா மாதம் சந்தைக்குச் சென்று புளி வாங்குவதற்கு பதிலாக, மாதா மாதம் தானியங்கி முறையில் குறிப்பிட்ட பணத்தை புளி வியாபாரிக்கு அனுப்பிவிட்டால், அவர் அன்றைய புளி மதிப்பின்படி, உங்களுக்கு புளியை வீட்டில்கொண்டு வந்து இறக்கிவிடுவார்.
இதுபோலதான் பரஸ்பர நிதிகளில் மாதா மாதம் அலகுகள் வாங்குவதும் எளிதாகிறது.
எஸ்ஐபி மூலம் பெறும் ரூபாய்குரிய மதிப்பின் சராசரித்துவம் (Rupee cost averaging) என்ற பயன்; தானியங்கி முறையில் அலகுகளை வாங்கும்போது, ரூபாயின் மதிப்பின் சராசரித்துவத்தின் பலனைப் பெற முடிகிறது. அப்படி என்றால் என்னவென்று பார்ப்போம்:
உங்களிடம் 1000 ரூபாய் உள்ளது. அதனைக்கொண்டு, புளி வாங்க எண்ணுகிறீர்கள்.
மொத்தமாக வாங்குவது:
சந்தைக்குச் சென்று, ஒரே நாளில் ரூபாய் 1000க்கு புளி வாங்குவது. அதாவது, அன்றைய விலையான கிலோ ரூ. 100 என்ற விகிதத்தில் மொத்தம் வாங்கிய புளி - 10 கிலோ.
தினந்தோறும் புளி வாங்குவது:
5 தினங்களுக்குச் சந்தை சென்று, தினம் ரூ. 200க்கு புளி வாங்குவது.
திங்கள் புளியின் விலை - கிலோ ரூ. 100. கிடைத்த புளி - 2 கிலோ
செவ்வாய் புளியின் விலை - கிலோ ரூ 50. கிடைத்த புளி - 4 கிலோ
புதன் புளியின் விலை - கிலோ ரூ 80. கிடைத்த புளி - 2.5 கிலோ
வியாழன் புளியின் விலை - கிலோ ரூ 200. கிடைத்த புளி - 1 கிலோ
வெள்ளி புளியின் விலை - கிலோ ரூ 4.0 கிடைத்த புளி - 5 கிலோ மொத்தம் வாங்கிய புளி - 13.5 கிலோ
எனவே, மொத்தமாக புளி வாங்காமல், தினந்தோறும் புளி வாங்குவதன் மூலம், உங்களுக்கு 3.5 கிலோ புளி அதிகமாக கிடைக்கிறது. இங்கு 1 கிலோ புளியின் ரூபாயின் மதிப்பின் சராசரித்துவத்தின் பயனைப் பெறுகிறீர்கள். எனவே, சராசரியாக குறைந்த விலையில் புளியைப் பெற முடிகிறது.
இதனைப் போலவே, முறையான முதலீட்டுத் திட்டத்தில், வாரா வாரம், மாதா மாதம் தொடர்ந்து முதலீடு செய்யும் போது, அலகுகளின் விலையின் ஏற்றத்தாழ்வின் காரணமாக, சராசரியாக குறைந்த விலையில் அலகுகளைப் பெற முடிகிறது. இதன் மூலம், ஒரே அளவு பண முதலீட்டில் அதிக அலகுகளைப் பெற முடிகிறது.
முறையான முதலீட்டுத் திட்டமும் பரஸ்பர நிதியும் ஒன்றா?
முறையான முதலீட்டுத் திட்டமும் பரஸ்பர நிதியும் ஒன்றல்ல. முறையான முதலீட்டுத் திட்டமென்பது, பரஸ்பர நிதியில் ஒரு குறிப்பிட்ட காலவரையறையில் தொடர்ந்து முதலீடு செய்வதற்கான ஏற்பாடு மட்டுமே. ஆனால், இலாபமென்பது பரஸ்பர நிதி திட்டத்தைப் பொறுத்து அமையும். நீங்கள் தானியங்கி முறையில், புளி வாங்கினாலும், நேரடியாக புளி வாங்கினாலும், விற்கும்போது புளியின் தரம், காய்கறிச் சந்தையில் அந்த வகைப் புளியின் விலையைப் பொறுத்து லாபம் மாறுபடும். அதனைப்போலவே, எந்த முறையில் பரஸ்பர நிதி அலகுகளை வாங்கினாலும், அலகுகளை விற்கும்போது, பரஸ்பர நிதியின் அலகுகளின் அன்றைய மதிப்பைப் பொறுத்து, இலாபம் முடிவாகும்.
எனவே, சரியான பரஸ்பர நிதியைத் தேர்ந்தெடுத்து, முதலீடு செய்வது அவசியம்.
முறையான முதலீட்டுத் திட்டத்தின் பயன்கள் என்ன?
* முதலீடு என்ற நல்ல விஷயத்தை எளிதாக்குகிறது.
* முதலீட்டிற்குப் பிறகு செலவு என்ற நிதிக் கட்டுப்பாடு வருகிறது.
* ரூபாய்குரிய மதிப்பின் சராசரித்துவத்தின் பயனைப் பெற முடிகிறது.
* சிறுகச் சிறுக அலகுகள் சேர்த்து, நீண்டகாலத்தில் அதிக அளவில் அலகுகளைச் சேர்க்க முடிகிறது. இது, பணப் பெருக்கத்திற்கு உதவுகிறது.
கவனிக்க வேண்டியது என்ன?
முறையான முதலீட்டுத் திட்டம் தானியங்கி முறையில் நடந்தாலும், அவ்வப்போது, முதலீடு எப்படி வேலை செய்கிறது என்று கவனிப்பது முக்கியம். முதலீடு சரியாக வேலை செய்யவில்லையென்றால், முறையான முதலீட்டுத் திட்டத்தினை நிறுத்தி, வேறொரு பரஸ்பர நிதியில், முறையான முதலீட்டுத் திட்டத்தினைத் தொடங்கலாம்.
முறையான முதலீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பணத்தைப் பெருக்குவோம்.
« முறையான முதலீட்டுத் திட்டம்:
« பரஸ்பர நிதி: Mutual Fund.
« அலகுகள் : Units.