

தங்கத்தில் முதலீடு செய்வது எப்போதும் பாதுகாப்பான முதலீட்டு முறையாக, பல ஆயிரம் வருடங்களாக இருந்து வருகிறது. தோன்றிய காலம் முதல் இன்று வரை மதிப்பு குறையாமல் , தொடர்ச்சியாக மதிப்பு கூடிக்கொண்டே வருவது தங்கத்திற்கு மட்டும்தான். சில உலோகங்கள் தங்கத்தைவிட மதிப்பு மிக்கதாக இருந்தாலும் கூட அதை முதலீடாக கருதமுடியாது. தங்கம் தவிர மற்ற எந்த உலோகமும் பெரிய லாபத்தை தராது. எவ்வளவு பழைய தங்கமாக இருந்தாலும் அதற்கு மதிப்பு சிறிதும் குறைவதில்லை என்பதே தங்கத்தின் சிறப்பு. தங்கத்தை வைத்து சம்பாதிக்கும் சில வழிகளை இங்கு பார்ப்போம்.
அரசு தங்கப் பத்திரங்கள் (Sovereign Gold Bonds - SGB)
தங்கத்தை பாதுகாப்பான முறையிலும் லாபம் தரும் வழியிலும் முதலீடு செய்ய அரசு தங்க பத்திரத்தை வாங்குவது நல்ல யோசனையாக இருக்கும். இந்த வகையில் முதலீடு செய்வதால் முதலீட்டுத் தொகைக்கு வருடாந்திர வட்டி 2.5% வரையில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். மேலும் தங்கத்தின் விலை உயரும்போது அதற்கான கூடுதல் லாபமும் கிடைக்கும். இதை இந்திய அரசின் ரிசர்வ் வங்கி (RBI) வெளியிடுவதால் மிகவும் பாதுகாப்பானது. இந்த பத்திரத்தின் முதிர்ச்சி காலம் 8 ஆண்டுகள் ஆகும். அந்த நேரத்தில் தங்கத்தின் விலைக்கு ஏற்ப அதிக பணத்தை பெறலாம்.
தங்கத்தை பணமாக்கும் திட்டம்( Gold Monetisation Scheme - GMS)
பயன்படுத்தாமல் வைத்திருக்கும் ஏராளமான தங்கத்தினை முதலீடாக மாற்றி வங்கிகளில், தங்கத்தினை வரவாக வைத்து அதன் மூலம் ஒரு வட்டியினை பெறமுடியும். இந்த திட்டத்தின் மூலம் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், தங்கத்தை வங்களில் வைத்து வட்டியை பெறமுடியும். இந்த திட்டத்தில் சேர குறைந்தபட்சம் 10 கிராம் தங்கம் தேவைப்படும், மேலும் அதிகபட்ச வரம்பு இதற்கு கிடையாது.
இதற்கு முதலீடு செய்யும் தங்கத்தினை, அதன் தரநிலைகளை சோதனை செய்து அதற்குரிய சான்றிதழுடன் வங்கியை அணுகலாம். குறைந்தபட்சம் ஒரு ஆண்டிலிருந்து 15 ஆண்டுகள் வரை இந்த முதலீட்டு திட்டத்தில் தங்கத்தினை வரவுவைத்து வருடாந்திர வருவாயை பெறலாம். சராசரியாக இதற்கு 2.25% -2.50% வரை வருடாந்திர வட்டி கிடைக்கும்.
பாரம்பரிய தங்க முதலீடு (Traditional Gold investment)
இந்த முறையில் தங்கத்தினை காசுகளாகவும் கட்டிகளாகவும் விலை குறைவாக இருக்கும் நாளில் வாங்கி, வீட்டிலோ வங்கி லாக்கரிலோ வைத்துக் கொள்ளலாம். ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடங்கள் கழித்து வாங்கிய தங்கத்தின் மதிப்பு, அன்றைய சந்தை மதிப்பின்படி குறைந்தபட்சம் 10 லிருந்து 20% வரை உயர்ந்து இருக்கும்.
அப்போது இந்த தங்க கட்டிகளை விற்பனை செய்தால் கூடுதலாக, அன்றைய சந்தை மதிப்பிற்கு லாபம் கிடைக்கும். இந்த முறையில் தங்கத்தினை வாங்கி சிறிது காலம் கழித்து அதிக விலைக்கு விற்பது எளிதான நடைமுறையாகும். இந்த முறையில் தங்கத்தை முதலீடு செய்ய எப்போதும் ஆபரண தங்கத்தை வாங்காதீர்கள் அதற்கு பதில் தங்க காசுகளாகவும் கட்டிகளாகவும் வாங்குங்கள்.
டிஜிட்டல் கோல்ட் ( Digital Gold)
இந்த முறையில் தங்கத்தினை நேரடியாக வாங்காமல் அதில் பணத்தை மட்டும் முதலீடு செய்யமுடியும். இந்த முறையில், ஒரு கிராம் விலைக்கும் குறைவாக கூட தங்கத்தின் மீது முதலீடு செய்ய முடியும். இந்த முறையில் வெறும் நூறு ரூபாயில் இருந்து முதலீட்டை தொடங்க முடியும். தினமும் டிஜிட்டல் ஆப் மூலம் தங்கத்தின் மேல் சிறிது சிறிதாக பணத்தினை கட்ட முடியும்.
இந்த முறையில் குறிப்பிட்ட அளவு பணத்திலே சேர்த்த பிறகு, அதற்கு இணையான தங்கத்தையோ அல்லது பணத்தையோ பெற்றுக்கொள்ளலாம். இந்த முறையில் என்று வேண்டுமானாலும் பணத்தினை திரும்ப பெறமுடியும். தங்கத்தின் சந்தை மதிப்பு உயரும் போதெல்லாம் உங்களின் முதலீட்டு பணம் அதற்கு இணையாக அதிகரித்துக்கொண்டே இருக்கும். இதில் நீங்கள் முதலீடு செய்துள்ள நிறுவனம், நல்ல பாதுகாப்பு மிகுந்த நிறுவனமாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் ஏமாறும் வாய்ப்புகள் அதிகம்.