

கோல்ட் ஓவர் டிராஃபட் (Gold Overdraft): என்பது தங்க நகைகளை அடகு வைத்து, ஒரு குறிப்பிட்ட தொகை வரை பணத்தைப் பெற்றுக் கொள்ளும் நெகிழ்வான கடன் வசதியாகும். இது வழக்கமான தங்கக் கடனிலிருந்து மாறுபட்டது. இதில் நாம் பயன்படுத்தும் தொகைக்கு மட்டுமே வட்டி செலுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட முழு வரம்புக்கும் வட்டி கிடையாது.
நகைக்கடனை விட கோல்ட் ஓவர் டிராப்ட் (Gold Overdraft) மிகவும் சிறந்தது. ஏனெனில் இது நாம் பயன்படுத்தும் தொகைக்கு மட்டும் வட்டி செலுத்தும் வசதியை வழங்குகிறது. மொத்த கடன் வரம்பு (Credit Limit) அனுமதிக்கப்பட்டு, தேவைப்படும் பொழுது மட்டும் பணத்தை எடுத்து, வட்டிச் சுமையை குறைத்து, நெகிழ்வான முறையில் திருப்பி செலுத்தலாம்.
கோல்ட் ஓவர் டிராஃப்ட் -ன் முக்கிய நன்மைகள்:
1) பயன்பாட்டிற்கு மட்டும் வட்டி:
வங்கி/நிதி நிறுவனம் ஒரு கடன் வரம்பை ஒதுக்கும். அதில் தேவையான பணத்தை எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ரூபாய் 1 லட்சம் கடன் வரம்பில் ரூ.20,000 மட்டுமே எடுத்தால், அந்த ₹20,000க்கு மட்டுமே வட்டி கணக்கிடப்படும்.
நகைகள் வங்கியின் பாதுகாப்பான லாக்கரில் இருக்கும். தனிப்பட்ட லாக்கர் வாடகைக் கட்டணம் கிடையாது. அவசர தேவைக்கும், முறையற்ற வருமானம் உள்ளவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ள கடன் முறையாகும்.
2) நெகிழ்வான திருப்பி செலுத்துதல்:
மாதத் தவணை (EMI) கட்டாயமில்லை. கடன் பெற்றவர்கள் எப்போது வேண்டுமானாலும் பணத்தை திருப்பி செலுத்தலாம். அதாவது இந்த ஓவர் டிராப்ட் வசதியானது, கடன் வாங்குபவர்கள் தங்கள் வசதிக்கேற்ப கடனை திருப்பி செலுத்த அனுமதிப்பதால், மாறிவரும் நிதித் தேவைகளுக்கு இது பொருத்தமானதாக அமைகிறது.
3) நிதியை விரைவாகப் பெறுதல்:
குறைந்தபட்ச ஆவணங்கள் மற்றும் மதிப்பீட்டு செயல்முறைகளுடன், கோல்டு ஓவர் டிராப்ட் மூலம் நிதியை விரைவாக பெறுவது அவசர நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது.
4) மீண்டும் பயன்படுத்தும் வசதி (Revolving Credit):
ஒருமுறை வரம்பு நிர்ணயிக்கப்பட்டால் கடனை திருப்பி செலுத்திய பிறகு அதே வரம்பிற்குள் மீண்டும் தேவைப்படும்பொழுது பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
5) குறைந்த வட்டி சுமை:
தனிநபர் கடன்களை (Personal Loan) விட தங்க ஓவர் டிராப்ட் வட்டி விகிதம் பொதுவாக குறைவாக இருக்கும். அத்துடன் ஒட்டுமொத்த கடன் தொகைக்கும் வட்டி செலுத்த வேண்டிய அவசியமில்லை. எடுத்த தொகைக்கு மட்டும் வட்டி செலுத்தினால் போதும். இதனால் வட்டிச் சுமை வெகுவாகக் குறைகிறது.
6) சுயதொழில் புரிவோருக்கு சிறந்தது:
தொழில் தேவைகள் அல்லது தனிப்பட்ட அவசர செலவுகளுக்கு சொத்தை விற்காமலேயே உடனடி பணப்புழக்கத்தைப் பெறமுடியும். பணப்புழக்கம் குறைவாக இருக்கும் சிறு வணிகர்களுக்கு இது ஒரு சிறந்த நிதி ஆதாரமாகும்.
7) யார் பயன்படுத்தலாம்?
குறுகிய கால நிதித் தேவை உள்ளவர்களுக்கும், வணிகர்களுக்கும் மிகவும் ஏற்றது. அடிக்கடி அவசர நிதி தேவைப்படுபவர்கள், பணப்புழக்கத்தை நிர்வகிக்க சிரமப்படுபவர்கள் மற்றும் வட்டிச் சுமையை குறைக்க விரும்புபவர்கள் இந்த வசதியை தேர்ந்தெடுக்கலாம்.