

தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் (Gold vs real estate) முதலீடுகளில் எது சிறந்தது என்பது நம் நிதி இலக்குகள், இடர் சகிப்புத்தன்மை மற்றும் முதலீட்டிற்கான நேரம் ஆகியவற்றைைப் பொறுத்தது. தங்கத்தை நாம் நினைத்தவுடன் வாங்கலாம், நினைத்தவுடன் விற்று பணமாக்கலாம். சந்தையில் பிரச்னைகள் வரும் பொழுது நம்முடைய மொத்த முதலீட்டையும் காப்பாற்றும் ஒரு பாதுகாப்பு வலை போல் செயல்படும். ஆனால் ரியல் எஸ்டேட் என்பது வாடகை மற்றும் நிலம் அல்லது வீட்டின் மதிப்பு உயர்வதன் மூலம் நீண்ட காலத்திற்கு செல்வத்தை உருவாக்கும் வாய்ப்பைத் தருகிறது.
தங்கத்தில் முதலீடு செய்வதால் ஏற்படும் நன்மைகள்:
தங்கத்தில் முதலீடு செய்தால் அதனை உடனடியாக பணமாக்க முடியும். அதிக பணப்புழக்கம் கொண்டது மற்றும் நிலையற்ற காலங்களில் ஸ்திரத்தன்மையை வழங்குகிறது. பண வீக்கத்திற்கு எதிரான ஒரு பாதுகாப்பாக செயல்படுகிறது. தங்கம் எப்போதும் ஒரு சிறந்த பாதுகாப்பு வளையம்.
எந்த ஒரு நிறுவனத்தின் தோல்வியும் தங்கத்தின் மதிப்பை உடனடியாக பாதிக்காது. அதனால் தான் பங்குச் சந்தை சரியும்போது கூட தங்கத்தின் விலை உயர்கிறது. இதனை வாங்கவும், விற்கவும் எளிது. எனவே, முதலீடு குறித்து அதிகம் தெரியாதவர்களுக்கு கூட, தங்கத்தில் ஒரு சிறு பகுதி முதலீடு செய்வது, மொத்த முதலீட்டை நிலைத்தன்மையுடன் வைத்திருக்க உதவுகிறது.
தங்க பத்திரங்கள் அல்லது தங்க ETFகள் மூலம் முதலீடு செய்யலாம். முதிர்ச்சியின் போது வரிசலுகைகளும் உண்டு. ஆனால், நகைகள் வாங்குவது என்பது முதலீட்டுக்கு சிறந்ததல்ல. காரணம் அதற்கான செய்கூலி, சேதாரம் நம் லாபத்தை குறைக்கும். தங்கம் என்பது ஒரு வருமானம் கொடுக்கும் சொத்து கிடையாது. அதன் விலை ஏறினால் மட்டுமே லாபம் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அத்துடன் இதன் குறைபாடுகள் என்றால் இது வாடகை அல்லது வருமானத்தை உருவாக்குவதில்லை. முதலீட்டு வருமானத்தை மட்டுமே சார்ந்துள்ளது.
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதால் ஏற்படும் நன்மைகள்:
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதால் இரண்டு வழிகளில் வருமானத்தைப் பெறலாம். ஒன்று நாம் வாடகைக்கு விடுவதன் மூலம் வருமானத்தை ஈட்டலாம். மற்றொன்று காலப்போக்கில் நாம் வாங்கிய சொத்தின் மதிப்பு உயரக்கூடும். ஆனால், சொத்து வாங்குவதற்கு முன்பு அந்த இடத்தின் முக்கியத்துவம், போக்குவரத்து வசதிகள், நல்ல கட்டுமான நிறுவனங்கள் ஆகியவற்றை சரி பார்ப்பது அவசியம்.
சொத்துக்களை பராமரிக்கும் செலவுகள், சொத்து வரி, வாடகைக்கு ஆள் கிடைக்காமல் இருப்பது போன்ற அபாயங்களும் இதில் உள்ளன. அத்துடன் தங்கத்தைப் போன்று இதனை உடனடியாக விற்பது, பணமாக்க முயல்வது போன்றவற்றில் சிரமம் ஏற்படலாம்.
விரைவான, பாதுகாப்பான மற்றும் எளிதாக பணமாக்கக் கூடிய ஒரு முதலீட்டை தேடுகிறீர்கள் என்றால், தங்கம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். வாடகை வருமானம், சொத்து மதிப்பு உயர்வு மற்றும் வரிச்சலுகைகள் போன்ற நீண்ட கால, நிலையான வருமானத்தைப் பெற விரும்பினால் ரியல் எஸ்டேட் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். தங்கம் அவசர காலத்திற்கும், ரியல் எஸ்டேட் நீண்ட கால நிலையான வருமானத்திற்கும் ஏற்றது.