

பொதுவாக அனைவருக்கும் பணக்காரராக வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. ஆனால் எளிதாக ஒரே நாளில் யாரும் பணக்காரர் ஆகி விட முடியாது. பணக்காரர் ஆவதற்கு அதிகமாக உழைப்பதோடு அந்த உழைப்பால் வந்தப் பணத்தை படிப்படியாக சேமிக்க வேண்டும். இப்படி பணக்காரர் ஆவதற்கு சிறிது காலம் ஆகும். அந்த வகையில் பணக்காரர் ஆவதற்கும், சேமிப்பை கூட்டுவதற்கும் நாம் மேற்கொள்ள வேண்டிய பழக்கங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
சேமிப்பு :
ஒரே நாளிலோ அல்லது ஒரே நேரத்திலோ பணத்தை சேமிக்க முடியாது. நாள்தோறும் நாம் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களில் இருந்து தான் சேமிப்பு கட்டமைக்கப்படுகிறது. மாத சம்பளம் உள்ளவர்கள் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்பிற்கு கண்டிப்பாக ஒதுக்கி விட வேண்டும். தினமும் வருமானம் உள்ளவர்கள் தினசரி சேமிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இந்த பழக்கத்தை முதலில் ஆரம்பிக்கும் போது சற்று கடினமாக தெரிந்தாலும் நாளடைவில் இது மிகப்பெரிய பலனை கொடுக்கும்.
உத்வேகம் :
பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக தினமும் பணம், சேமிப்பு, வணிகம் ஆகியவை குறித்து எதையாவது படிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் வணிகத்தில் வெற்றி பெற்றவர்கள் பற்றி படிப்பது மனநிலையை கூர்மையாக்குவதுடன், சிந்தனை திறனை அதிகரித்து, சேமிப்பை படிப்படியாக அதிகரிக்க வேண்டும் என்ற உத்வேகம் கூடி வாழ்க்கையில் முன்னேற ஊக்கம் ஏற்படும்.
செலவுகளைக் கண்காணிக்க வேண்டும் :
வரவை விட செலவு குறைவாக இருக்கிறதா என்பதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் பட்ஜெட் போட்டு செலவு செய்வதோடு, அவசிய தேவைகளுக்கும் மற்றவற்றிற்கும் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதை தெரிந்து வரவுக்கேற்ற அளவு செலவு செய்ய இது உதவி புரியும்.
முதலீடு தேவை :
சேமிப்பு மட்டும் ஒருவரை பணக்காரர் ஆக்கி விடாது. பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், தங்க பத்திரங்கள், பிஎஃப் போன்ற பல முதலீட்டு சேமிப்பு வழிமுறைகளும் ஒருவரது வருமானத்தை பெருக்கி பணக்காரராக்கும் வழிமுறையாகும்.
பொறுமை வேண்டும் :
பணத்தைப் பெருக்கி பணக்காரராக வேண்டும் என நினைப்பவர்கள் மிகுந்த பொறுமையை கையாள வேண்டும். மேலும் நிதி சார்ந்த விஷயங்களில் தனக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் இல்லாமல் அதற்குறிய நபர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். படிப்படியாக பணத்தை பெருக்கி பணக்காரர் ஆகி விட்டோம் என்றாலும் அதையும் புத்திசாலித்தனமாக கையாண்டு வாழ்க்கையில் வளர்ச்சி பெற வேண்டும்.
மேற்கூறிய பழக்கவழக்கங்கள் அனைத்தும் எளிதாக தோன்றினாலும், ஆரம்பிக்கும்போது சற்று கடினமாக இருந்து நாளடைவில் இது உங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தி உங்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்பதில் சற்றும் ஐயமே இல்லை.