Gen Z மக்களே! 'அண்ணாச்சி கடைகள்' பற்றி தெரியுமா? கேள்விப்பட்டதுண்டா?

small business shop
small business shop
Published on

காலப்போக்கில் சூப்பர் மார்க்கெட்கள் பெருகி தெருமுனைக் கடைகள் கிட்டத்தட்ட அழிந்து வருகின்றன. சில்லறை வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரிகள் அனைவரும் காணாமல் போய் வருகின்றனர். அண்ணாச்சி கடையில் பலசரக்கு வாங்குவதும், கீரைக்கார அம்மாவிடம் கீரைகளும், காய்களும் வாங்குவதும், உள்ளூர் கடைகளில் முடி வெட்டிக் கொள்வதும், தெருமுனையில் உள்ள பேக்கரியில் பிரெட், கேக் என  வாங்கி சாப்பிடுவதும் தான் ஆரோக்கியம் மட்டுமல்ல சிறு வியாபாரிகளின் வயிற்றில் அடிக்காமல் அவர்கள் பிழைக்கவும் வழி செய்யும். சூப்பர் மார்க்கெட்டுகள் பெருகாமல் இருக்கவும், அதிக லாபம் சம்பாதிக்காமல் இருக்கவும் வழி வகை செய்யும்.

மளிகை கடைகளை அந்நிய நிறுவனங்கள் நடத்த நேர்ந்ததால் உள்நாட்டு வியாபாரிகளும், சிறு கடை முதலாளிகளும் பிழைப்பிற்கு என்ன செய்வார்கள். அண்ணாச்சி கடைகளில் வேலை செய்பவர்களை விட நல்ல சம்பளம், பணி நேரம், வேலை சுழல் எல்லாம் சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்க வேலை செய்ய அங்கு சென்று விடுகிறார்கள். இதனால் சிறு கடை முதலாளிகள் கடைகளை நடத்த மிகவும் சிரமப்படுகிறார்கள். சூப்பர் மார்க்கெட்களின் வருகையால் சிறு கடைகள் வியாபாரம் இன்றி தவிக்கின்றன.

முன்பெல்லாம் டென்ட் கொட்டாயில் படம் பார்த்தது போய், அந்த டூரிங் கொட்டாய்களை எடுத்து விட்டு நவீன சினிமா தியேட்டர்கள் மால்களில் வருவது போல் நூற்றுக்கணக்கான சிறு வணிகர்களை அழித்து விட்டு பெரிய கடைகள் வருகின்றன. இது ஒரு குடும்பம் சார்ந்த பிரச்னை  அல்ல; சமூகம் சார்ந்த பிரச்னை.

வெளிநாட்டு கம்பெனிகளின் படையெடுப்பு நம் நாட்டு சில்லறை வியாபாரிகளை வெகுவாக பாதித்துள்ளது. தெருவோர காய்கறி கடைகள் மற்றும் சிறு கடைகளின் நிலைமையை தெருமுனையில் இருக்கும் அண்ணாச்சியிடம் கேட்டாலே விளக்கமாக சொல்வார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வியாபாரம் மிகவும் குறைந்து போய் உள்ள நிலையில் அதை ஈடு கட்டுவதற்காக மளிகை வியாபாரத்துடன் சேர்த்து செல்போன் ரீசார்ஜ் செய்வது, பால் பாக்கெட் போடுவது, தண்ணீர் கேன் விற்பது என்று நிறைய சின்ன சின்ன வேலைகளையும் செய்கிறார்கள்.

பெரிய சூப்பர் மார்க்கெட் கடைகளுக்கு அருகில் இருக்கும் சாதாரண சின்ன கடைகளுக்கு முன்பிருந்த வியாபாரம் பாதி கூட நடைபெறுவதில்லை. லாபமும் பெருமளவில் குறைந்துள்ளது. பேரங்காடிகள் விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்வதுடன், தேவைப்படும் சமயங்களில் கமிஷன் மண்டி ஏஜெண்டுகளிடமிருந்தும் அடிமாட்டு விலைக்கு மொத்தமாக வாங்கிக் கொள்கிறார்கள். இந்த அளவுக்கு மொத்தமாக வாங்கும் அளவுக்கான சந்தை இல்லாத சாதாரண அண்ணாச்சி கடைகள் இவற்றுடன் போட்டி போட முடியாமல் தவிக்கிறது.

இதையும் படியுங்கள்:
கோடைக்கேற்ற சிறந்த சுற்றுலா தலம் - மினி காஷ்மீர் எனப்படும் காந்தளூர் அழகிய மலை கிராமம்
small business shop

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com