
கோடை வந்து விட்டாலே குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவோம். தமிழ்நாட்டுக்கு மிக அருகில் இருக்கும் மினி காஷ்மீர் என்று சொல்லப்படும் இந்த காந்தளூர் கிராமம் விடுமுறையை சிறந்த முறையில் கொண்டாட திட்டம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல பட்ஜெட் ஸ்பாட் ஆகும்.
மினி காஷ்மீர்:
திருப்பூர் அல்லது உடுமலைப்பேட்டையில் இருந்து கிளம்பினால் ஒரே நாளில் சுற்றிப் பார்த்துவிட்டு வரக்கூடிய அருமையான இடங்கள் உள்ள இடம் இது. மினி காஷ்மீர் என அழைக்கப்படும் காந்தளூர் (Kanthalloor) அழகிய மலை கிராமமாகும். தென்னிந்தியாவில் காந்தளூரில் மட்டும்தான் ஆப்பிள்கள் விளைவிக்கப்படுகின்றன என்பது சிறப்போ சிறப்பு!
மனதை மயக்கும் மலைகளும் அருவிகளும்:
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் காந்தளூர் மலை கிராமம் உள்ளது. மலைவளம் மிக்க காடுகள் நிறைந்த, அருவிகள், ஆர்பரிக்கும் அழகிய சுற்றுலா தலம் இது. இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே தேவிகுளம் தாலுகாவில் அமைந்துள்ளது.
இங்குள்ள தேயிலை தோட்டங்களும், பழ தோட்டங்களும், மலைகளும், நீர்வீழ்ச்சிகளும் நம்மை கிறங்கடிக்கின்றன. சுமார் 4842 ஹெக்டர் பரப்பளவை கொண்டுள்ளது.
பழ தோட்டங்கள்:
தமிழ்நாடு மற்றும் கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த கிராமம் கடல் மட்டத்திலிருந்து 5000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஆரஞ்சு, ப்ளம்ஸ், ஸ்ட்ராபெரி பழங்கள் இங்கு விளைவிக்கப்படுகின்றன.
இந்த கிராமத்தின் அழகை காண வேண்டும் என்று நினைப்பவர்கள் கூடார அமைப்புகளில் தங்கலாம். இது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும். இந்த கூடாரங்கள் வாடகைக்கு கிடைக்கின்றன.
குறிஞ்சி பூக்கள்:
வெயிலின் கடுமை தெரியாது இருக்கும் இந்த கிராமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூக்கள் பூக்கின்றன. இங்கு இரவில் ஜீப் சபாரி செய்வது மிகவும் அருமையான அனுபவத்தை வழங்குகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த கிராமத்து மக்களில் பெரும்பாலானவர்கள் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள். மலையாளம் மற்றும் தெலுங்கு பேசுபவர்களும் உள்ளனர். இங்கு நிறைய வியூ பாயிண்ட்கள் உள்ளன.
அனகோட்டா பார்க்:
அனகோட்டா பார்க் அந்தக் காலத்தில் சமணர் படுகைகள் என்று சொல்லக்கூடிய கற்களால் அமைக்கப்பட்டு வீடு போன்ற சில அமைப்புகளுடன் பார்க்கவே வித்தியாசமாக இருக்கும். வரலாற்றுப் பிரியர்கள் இந்த இடத்தை மிஸ் பண்ணாமல் பார்க்கலாம்.
வரலாற்று சிறப்புமிக்க அனகோட்டா பார்க், தேயிலை தோட்டங்கள், டென்ட் ஸ்டே, ஆர்பரிக்கும் அருவிகள், மலைகள் சூழ்ந்த அழகிய மலைக் கிராமம் சிறந்த சுற்றுலா தலமாகும்.