
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), இந்தியாவின் நம்பர் ஒன் இருசக்கர வாகன நிறுவனமாகும். ஆனால், எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்வதில் நேரடியாக இறங்காமல், 'விடா' (Vida) என்கிற துணை நிறுவனத்தின் மூலமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றது. அந்த வகையில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம், புதிய விடா வி-எக்ஸ் 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதில் வி-எக்ஸ் 2 பிளஸ் மற்றும் வி-எக்ஸ் 2 கோ என 2 வேரியண்ட்கள் உள்ளன.
இது இரண்டு வகைகளிலும், ஏழு வண்ணங்களிலும் கிடைக்கும். சில வருடங்களுக்கு முன் மார்க்கெட்டில் நுழைந்த ஹீரோ விடா பிராண்டில் வி2 (V2) என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஏற்கனவே விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் இருப்பதால், அதனை காட்டிலும் வேறுப்பட்ட தோற்றத்தில் புதிய விஎக்ஸ்2 ஸ்கூட்டர் இருக்கும் என்பது உறுதி.
புதிய மற்றும் கவர்ச்சிகரமான டிசைன் கொண்டுள்ள வி-எக்ஸ் 2 பிளஸ் ஸ்கூட்டரில் 3.4 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட 2 நீக்கக்கூடிய பேட்டரிகள் உள்ளன. இவற்றை தனியாக எடுத்துச் சென்று சார்ஜ் செய்யலாம். முழுமையாக சார்ஜ் செய்தால் 142 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். மணி வரை 85 கிமீ வேகத்தில் செல்லும்.
வி-எக்ஸ் 2 கோ வேரியண்டில் 2.2 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட ஒரு பேட்டரி உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 92 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். அதிவேக சார்ஜர் மூலம் ஒரு மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம். ஸ்கூட்டருடன் வழங்கப்படும் ஸ்டாண்டர்டு சார்ஜரை பயன்படுத்தினால் இதே அளவு சார்ஜ் ஆக 6 மணி நேரம் ஆகும் என நிறுவனத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
வி-எக்ஸ் 2 பிளஸ் ஸ்கூட்டரில் 4.3 அங்குல டி.எப்.டி. டிஸ்பிளே உள்ளது. கிளவுட் இணைப்புடன் கூடிய இதில் நேவிகேஷன் உட்பட பல அம்சங்கள் உள்ளன. வி-எக்ஸ் 2 கோ வேரியண்டில் எல்.சி.டி. டிஸ்பிளே உள்ளது. ஷோரூம் விலையாக வி-எக்ஸ் 2 கோ சுமார் ரூ.99,490, வி-எக்ஸ் 2 பிளஸ் சுமார் ரூ.1.1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஹீரோ நிறுவனத்தின் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்றாகும்
பேட்டரி வாடகை திட்டத்திலும் இந்த ஸ்கூட்டர்கள் கிடைக்கும். இதன்படி வி-எக்ஸ் 2 கோ சுமார் ரூ.59,490 எனவும், வி-எக்ஸ் 2 பிளஸ் சுமார் ரூ. 64,990 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.