
முதலீட்டுக் கோட்பாடுகளை ஒருவர் பரிந்துரைக்கும் பொழுது, அந்தக் கோட்பாட்டிற்கு அவரால் தரவுகள் தர முடியுமா என்று பார்க்க வேண்டும். அந்தத் தரவுகள் கடந்த காலத்தில் நடந்ததாக இருக்கலாம் அல்லது நிகழ் காலத்தில் நடப்பதாக இருக்கலாம். எப்படி ஆயினும் கோட்பாட்டை உறுதிப்படுத்த தரவுகள் வேண்டும்.
இதனைக் குறித்த ஓர் ஈசாப் கதையைப் பார்ப்போம்.
ஒரு தாய் நண்டு தனது மகன் நண்டிடம் நேர்க்கோட்டில் நடப்பதைக் குறித்து அறிவுரை கூறியது.
'நீ ஒரு பக்கமாக நடக்கிறாய். நீ நேர்க்கோட்டில் நடந்தால் நன்றாக இருக்கும்' என்று தாய் நண்டு கூறியது.
'அம்மா! நீங்கள் நேர்க்கோட்டில் நடப்பது எப்படி என்று எனக்கு நடந்து காட்டுங்கள். நான் அதைப் பின்பற்றுகிறேன்' என்றது மகன் நண்டு.
தாய் நண்டு நேர்க்கோட்டில் நடக்க முயற்சித்தது. ஆனால், தாய் நண்டினாலும் நேர்க்கோட்டில் நடக்க முடியவில்லை. அதுவும் ஒரு பக்கமாகத்தான் நடந்தது. தாய் நண்டு தனது மகன் நண்டிடம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டது.
இங்கு தாய் நண்டானது தனது மகன் நண்டிற்கு நேர்க்கோட்டில் நடக்கக் கூறியது என்பது முதலீட்டு ஆலோசனையைப் போன்றது. அந்த முதலீட்டு ஆலோசனையை முதலில் தாய் நண்டானது நிரூபித்துக் காட்ட வேண்டும். அதற்கான தரவுகளை, உதாரணங்களைக் காட்ட வேண்டும். அவ்வாறு காட்டாத பட்சத்தில் அந்த முதலீட்டு ஆலோசனை கோட்பாடு அளவிலுள்ளதே தவிர, அது நிதர்சனமானதாக இல்லாமலிருக்கலாம். முதலீட்டு ஆலோசனையைக் கூறிய அந்தத் தாய் நண்டாலேயே நேர்க்கோட்டில் நடப்பது என்ற முதலீட்டு ஆலோசனையைக் கடைப்பிடிக்க முடியாத போது, அது எவ்வாறு தனது மகன் நண்டிடம் அத்தகைய முதலீட்டு ஆலோசனையைக் கடைபிடிக்க கூற முடியும்?
இணையத்தில், ஊடகங்களில் இவ்வாறு முதலீடு செய்யலாம் அவ்வாறு முதலீடு செய்யலாம் என்று பல்வேறு முதலீட்டு ஆலோசகர்கள் பல்வேறு ஆலோசனைகளைக் கூறுவார்கள். அவர்களது கடந்த கால முதலீட்டு ஆலோசனைகளின் வரலாற்றினை நாம் பார்க்க வேண்டும். அவர்கள் அத்தகைய முதலீட்டு ஆலோசனையைப் பின்பற்றி வெற்றி அடைந்தார்களா என்று பார்க்க வேண்டும். அந்த முதலீட்டு ஆலோசகர்களே கடந்த காலத்தில் அத்தகைய முதலீட்டில் தோல்வியடைந்திருப்பின் அத்தகைய முதலீட்டு ஆலோசனையை நாம் பின்பற்றுவது முதலுக்கே மோசமாகலாம்.
அதைப்போலவே எந்த ஒரு முதலீட்டு திட்டத்தையும் தேர்ந்தெடுக்கும் போது அதன் கடந்த கால வரலாற்றைப் பார்க்க வேண்டும். அந்த முதலீட்டுத் திட்டமானது பங்குச் சந்தை ஏறுமுக காலங்கள், பங்குச் சந்தை இறங்குமுக காலங்கள் போன்ற சமயங்களில் எவ்வாறு செயல்பட்டது என்று அறிந்து கொள்ள வேண்டும். வருடா வருடம் அது எவ்வளவு ஈட்டித் தந்துள்ளது என்று அறிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் அந்த முதலீடு நமது குறிக்கோளுக்கு சரிப்பட்டு வருமா வராதா என்பது தெரிய வரும்.
இதனைத் தான் ஆங்கிலத்தில் historical returns அதாவது கடந்த கால ஈட்டுதல் என்று கூறுவர். ஒரு முதலீடானது கடந்த காலங்களில் எவ்வாறு செயல்பட்டது என்று அறிந்து கொள்ளும் பொழுது, அதனை நம்மால் நன்கு புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, பொருளாதார மந்தம் போன்ற சமயங்களில், அந்த முதலீடு எவ்வாறு செயல்பட்டது என்று அறிந்து கொள்ளும் பொழுது, அந்த முதலீடு எதிர்காலத்தில் பொருளாதார மந்த சமயங்களில் எவ்வாறு நடந்து கொள்ளும் என்று நம்மால் கணிக்க முடியும்.
வரலாற்றைப் பார்த்தோம் என்றால், நீண்டகாலத்தில் தங்கமானது பணவீக்கத்தை ஒட்டியே வளர்ந்துள்ளது. ஆனால், பங்குச் சந்தைக் குறியீடானது பணவீக்கத்தினை விட அதிகமாக வளர்ந்துள்ளது. எனவே, நீண்ட காலக் குறிக்கோள்களுக்கு, தங்கத்தின் முதலீடு என்பது பரவலாக்கத்திற்கு பயன்படுத்தலாமே தவிர, அதிகமாக பயன்படுத்தினால், பங்குச் சந்தையைப் போல் பணத்தைப் பணவீக்கத்தினை விட அதிகமாக பெருக்க முடியாது என்பது நமக்குத் தெரிய வருகிறது. கடந்து வந்த பாதை நமக்கு நல்லதொரு உதாரணமாக உள்ளது.
எனவே, எந்த ஒரு முதலீட்டையும் நாம் தேர்ந்தெடுக்கும் முன்பு, அதற்கான உதாரணங்களை , தரவுகளைக் கண்ட பிறகு அந்த முதலீட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். முதலீட்டுக் கோட்பாடுகளுக்கு உதாரணங்களைக் காணும் பொழுது, அந்த முதலீட்டை நம்மால் நன்கு புரிந்து கொள்ள முடியும். உதாரணங்கள் இல்லாத முதலீட்டுக் கோட்பாடானது இன்னும் நிரூபிக்கப்படாத கோட்பாடு என்று கொள்ள வேண்டும். அத்தகைய முதலீடுகளில் இறங்குவது அபாயகரமானது என்று உணர வேண்டும்.
முதலீட்டு கோட்பாடுகளின் உதாரணங்களைக் கண்டு, சரியான முதலீட்டினைத் தேர்ந்தெடுப்போம்.