நமது பணத்தை இழக்கும் அபாயத்தினை தாங்கும் நிலைக்கு ஏற்ற முதலீட்டினை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். மற்றவர்கள் ஒரு வகையான முதலீடு செய்கிறார்கள் என்று நாமும் அந்த முதலீட்டில் இறங்கக்கூடாது. ஒரு முதலீட்டில் இறங்குவதற்கு முன்னாக அந்த முதலீட்டினை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு முதலீட்டிற்கும் மூன்று கூறுகள் உண்டு:
1. வளரும் விகிதம்
2. நீர்ப்புத்தன்மை
3. பணத்தை இழக்கும் அபாயம்
இது முதலீட்டிற்கு முதலீடு மாறுபடும். அதிகமான வளரும் விகிதம் உள்ள முதலீடுகளில் அதிகமாக பணத்தை இழக்கும் அபாயமும் உண்டு. எனவே அந்த அபாயங்களை நம்மால் சகித்துக் கொள்ள முடியும் என்றால் மட்டுமே அத்தகைய முதலீட்டில் இறங்க வேண்டும்.
இதனைக் குறித்த ஒரு ஈசாப் கதையைப் பார்ப்போம்.
ஒரு கிராமத்து எலியும் ஒரு நகரத்து எலியும் உறவினர்களாக இருந்தன. நகரத்து எலி கிராமத்து எலியின் அழைப்பை ஏற்று கிராமத்திற்கு வந்தது.
கிராமத்து எலி கோதுமை, பார்லி வயல்கள், குளங்கள் என பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றது. வேகவைத்த கோதுமையும், பழங்களும் உண்ணக் கொடுத்தது. பின்னர், நகரத்து எலி கிராமத்து எலியை தனது வீட்டிற்கு அழைத்தது.
'நகரத்திற்கு வந்து புதியதொரு பிரம்மாண்டமான உலகை நீ காண வேண்டும். எனது வீட்டிற்கு வா' என்றது நகரத்து எலி.
கிராமத்து எலியும் நகரத்து எலியின் அழைப்பை ஏற்று நகரத்து எலியின் வீட்டிற்குச் சென்றது. செல்லும் இடங்களில் எல்லாம் இருந்த பிரம்மாண்ட கட்டடங்களைக் கண்டு கிராமத்து எலி வியந்தது. நகரத்து எலி ஒரு பெரிய மாளிகையில் ஒரு எலி வளையில் வசித்து வந்தது.
அங்கு சாப்பாடு மேசையில் பிரம்மாண்டமானதொரு கேக் வைக்கப்பட்டிருந்தது. கிராமத்து எலி அந்த கேக்கை மிகவும் விரும்பி உண்டது. மேலும், பாலாடைக் கட்டி மற்றும் உலர்ந்த பழங்கள் இருந்தன. கிராமத்து எலி அவைகளை உண்டு நகரத்து வாழ்க்கை மிகவும் அருமையாக உள்ளது என்று கூறியது.
அப்போது ஒரு பூனை கத்தும் சத்தம் கேட்டது. நகரத்து எலி உடனே கிராமத்து எலியை ஒளிந்து கொள்ளுமாறு கூறியது. அவை இரண்டும் ஒளிந்து கொண்டன. கிராமத்து எலி நடுங்கியது.
'இவை நகரத்தில் நடப்பதுதான். பயப்படாதே' என்றது நகரத்து எலி.
வீட்டின் பையன் ஒரு பெரிய நாயுடன் அங்கு வந்தபோது, மறுபடியும் இரண்டு எலிகளும் ஒளிந்து கொண்டன.
அன்று இரவு, அந்த எலி வளையில் அவைகள் இருந்தபோது திடீரென பெரிய புகைமண்டலம் அங்கு வந்தது.
'மாளிகையின் சொந்தக்காரருக்கு எலிகளைக் கண்டாலே பிடிக்காது. இந்த புகையினால் நாம் மூச்சு திணறி இறந்து விடுவோம். எனவே, உடனே ஓடத் தொடங்கு. எலி வளையில் இருந்து வெளியேறியவுடன் வெகு விரைவாக ஓடு. என்னைத் தோட்டத்தில் சந்திக்கலாம்' என்றது நகரத்து எலி.
கிராமத்து எலி வெளியேறியவுடன் வீட்டின் சொந்தக்காரர் பெரிய குச்சியுடன் படார் படார் என்று அடிக்கத் துவங்கினார். உடம்பில் அங்கங்கு அடிபட கிராமத்து எலி வெகு விரைவாக ஓடி தோட்டத்தினை அடைந்தது. அங்கு நகரத்து எலியைச் சந்தித்தது.
'நகர வாழ்க்கை சுவாரசியமாக இருந்தாலும் இங்கு அமைதி இல்லை. நாளை நான் கிராமத்திற்கு திரும்புகிறேன்' என்றது கிராமத்து எலி.
**************
இங்கு நகர வாழ்க்கை என்பது பங்குச்சந்தை முதலீடு போன்றது. பல்வேறு சுவையான உணவுகள் கிடைத்தாலும், உடலில் அடிபட, உயிருக்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு. பணத்தைப் பெருக்கும் வாய்ப்பு அதிகமாக இருந்தாலும், பணத்தை இழக்கும் அபாயம் அதிகம். நகரத்து எலி அதனைக் கையாள்கிறது. நகரத்து எலிக்கு அபாயத்தினைத் தாங்கும் மனப்பக்குவம் அதிகமாக உள்ளது. கிராமத்து எலிக்கு அபாயத்தினைத் தாங்கும் மனப்பக்குவம் குறைவாக உள்ளது. பணத்தை இழக்க வாய்ப்புள்ள அபாயகரமான முதலீடுகளில் அதனைச் சந்திக்க போதிய மனப்பக்குவம் இருந்தால் மட்டுமே இறங்க வேண்டும்.
கிராம வாழ்க்கை என்பது வங்கியின் வைப்பு நிதியைப் போன்றது. அதில் இலாபம் சராசரியாக இருந்தாலும் பணத்தை இழக்கும் அபாயம் கிடையாது. வைப்புநிதிகளுக்கான மனப்பக்குவம் எளிது.
சிறிய வயதில் எலியினால் அடிகளைத் தாங்கி ஓடுவதற்கு போதிய பலம் இருக்கும். சிறிய வயதில் நம்மால் பங்குச்சந்தையில் ஏற்படும் இழப்புகளைத் தாங்க முடியும். பணத்தை இழந்தாலும், மறுபடி சம்பாதித்துக் கொள்ள முடியும். ஓய்வு காலத்தில், இத்தகைய இழப்புகளைத் தாங்குவது கடினம். எனவே, ஓய்வு காலத்தில் வைப்பு நிதிகளுக்குச் செல்வது சரியானது.
இதனைப் போலவே, சில முதலீடுகளில் அதிக திறன் தேவைப்படும். உதாரணமாக, தொன்மையான ஓவியங்கள், தொன்மையான நாணயங்கள் சார்ந்த முதலீடுகள். அத்தகைய முதலீடுகளில் பணத்தை இழக்கும் அபாயமும் அதிகம். எனவே, அத்தகைய முதலீடுகளில் திறமை இருந்தால் மட்டுமே, இறங்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில், அபாயம் அல்லாத வங்கி வைப்பு நிதி, அஞ்சலக வைப்பு நிதி போன்ற திட்டங்களில் இருப்பது நல்லது.