

ஜப்பானை தலைமையிடமாகக் கொண்ட ஹோண்டா (Honda) நிறுவனம் ஒரு பன்னாட்டு வாகன உற்பத்தி நிறுவனமாகும். இது கார்கள், மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் பவர் எக்யூப்மென்ட் தயாரிப்பதில் உலகளவில் புகழ்பெற்றது. குறிப்பாக இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் பிரிவில் வலுவான சந்தையைக் கொண்டுள்ளது. தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் தனது அமேஸ் காரின் 3-ம் தலைமுறை வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் ADAS (Advanced Driver Assistance System) தொழில்நுட்பத்துடன் வருகிறது. இதில் ஆட்டோ ஹை பீம் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் அடங்கும். இதன் மூலம் ஹோண்டா அமேஸ் இந்தியாவில் மிகவும் மலிவான ADAS பொருத்தப்பட்ட கார்களில் ஒன்றாக உள்ளது.
இந்த கார் பாதுகாப்பு ரேட்டிங்கிற்காக Bharat NCAP சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. அதாவது 32 புள்ளிகளுக்கு 28.33 பெற்றுள்ளது. Bharat NCAP சோதனையில் முன்பக்க மோதல், பக்காவாட்டு மோதல், குழந்தைகள் சீட் பொருத்துதல் உள்ளிட்ட சோதனைகள் செய்யப்படும். அதில் முன்பக்க மோதலில் மொத்தம் 16க்கு 14.33 புள்ளிகளையும், பக்கவாட்டு மோதல் சோதனையில் 16க்கு 14.00 புள்ளிகளையும் பெற்றுள்ளது.
மேலும் சிறியவர்களுக்கான பாதுகாப்பு அம்சத்தில் 4 ஸ்டாரும், அதாவது 49 புள்ளிகளுக்கு 40.81 புள்ளிகளும், பெரியவர்களுக்கான சோதனையில் 24க்கு 23.81 புள்ளிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பான கார்களின் பட்டியலில் ஹோண்டா அமேஸ் காரும் இணைந்துள்ளது.
இந்த காரில் 6 ஏர் பேக்குகள், சீட் பெல்ட் ரிமைண்டர்கள் ஸ்டாண்டர்ட் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர, இந்த காரில் ESC (Electronic Stability Control), இடியுடன் கூடிய ஏபிஎஸ் (ABS), ஏர்பேக் கட் ஆஃப் சுவிட்ச், பின்பக்க டீஃபாகர்கள், ரியர் பார்க்கிங் கேமரா, ISOFIX எக்ஸ் சைல்டு சீட் ஆங்கர்கள் (குழந்தைகளுக்கான சேப்டி லாக்குகள்) போன்ற பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.
இந்த காரில் வாடிக்கையாளர்களின் வசதியான பயணத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட இருக்கைகள், சிறந்த ஏர் கண்டிஷனிங் மற்றும் வசதியான பின் இருக்கைகள் போன்ற உட்புற வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் மேம்படுத்தப்பட்ட என்விஎச் (Noise, Vibration, and Harshness) அளவுகள், சஸ்பென்ஷன், பயன்பாட்டுக்கு உகந்த வடிவமைப்புடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பாதுகாப்புக் அம்சங்களுடன் வருகிறது.
இதன் ஆரம்ப ஆன்-ரோடு விலை ரூ.7.45 லட்சம் முதல் ரூ. 10.90 லட்சம் வரை இருந்தது. இந்நிலையில் டிசம்பர் மாதத்தில், ஹோண்டா நிறுவனம் அமேஸ் காருக்கு ரூ.87 ஆயிரம் வரை சலுகைகளை அறிவித்துள்ளது. ஹோண்டா அமேஸ் கார் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் 8 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த காரின் மொத்த எடை 1241 கிலோ ஆகும்.
கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் முதலில் பார்ப்பது காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை தான். அந்த வகையில் ஹோண்டாவின் அமேஸ் கார் பாதுகாப்பு ரேட்டிங்கில் 5 ஸ்டாரும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டாரும் பெற்றுள்ளதால் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் என்பதுடன் காரின் விற்பனையும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.