PF Pension
PF Pension

PF பென்சன் பணத்தை எடுக்க வேண்டுமா? விதிமுறைகள் இதோ!

Published on

வேலைக்குச் செல்லும் அனைவரது சம்பளத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகை, வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. இதில் பிடித்தம் செய்யப்படும் பிஎஃப் தொகையை எளிதாக எடுத்து விடலாம். ஆனால் பென்சன் தொகையை மட்டும் எப்படி எடுப்பது என பலரும் குழப்பத்தில் உள்ளனர். உங்களின் குழப்பத்தை தீர்த்து வைக்க உதவுகிறது இந்தப் பதிவு.

மாதச் சம்பளத்திற்கு வேலைக்குச் செல்லும் அனைவரது வருங்கால பணத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதி ஆணையம் செயல்பட்டு வருகிறது. வருங்கால வைப்பு நிதிக்கு உங்களின் மாதச் சம்பளத்தில் இருந்து 12% மற்றும் வேலை செய்யும் நிறுவனத்திடம் இருந்து 12% தொகை பிடித்தம் செய்யப்படும். நிறுவனம் செலுத்தும் தொகையில் 3.67% தொழிலாளர் ப்ராவிடன்ட் தொகையிலும் (EPF), 8.37% தொழிலாளர் பென்சன் திட்டத்திலும் (EPS) சேர்க்கப்படும்.

மேற்கண்ட பங்களிப்பில் திருமணம், வீடு கட்டுதல் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு ப்ராவிடன்ட் தொகையை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும். இத்தொகைக்கு விண்ணப்பிக்க நீங்கள் ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 6 மாதங்களாவது வேலை செய்திருக்க வேண்டும். ஆனால் பென்சன் தொகையை பெறுவதற்கான விதிமுறைகள் முற்றிலும் வேறாக இருக்கிறது.

நீங்கள் 6 மாதங்களுக்கும் அதிகமாக பணி புரிந்திருந்தால் மட்டுமே பென்சன் தொகைக்கான தகுதியைப் பெறுவீர்கள். நீங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்தாலும் நினைத்த உடனே பென்சன் பணத்தை எடுக்க முடியாது. இருப்பினும் பென்சன் பெறுவதற்கான தகுதியை மட்டுமே அடைவீர்கள். 50 முதல் 58 வயதுக்குட்பட்ட காலகட்டத்தில் தான் உங்களால் பென்சன் பணத்தைப் பெற முடியும்.

10 வருடத்திற்கு குறைவான வேலைக் காலம்:

நீங்கள் 10 வருடங்களுக்கு குறைவாக பணி புரிந்தால், பென்சன் (EPS) மற்றும் ப்ராவிடன்ட் தொகையை (EPF) முழுமையாக எடுக்க முடியும். இந்த விண்ணப்பத்திற்கு 10C படிவத்தை நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டு முழுத் தொகையும் வங்கியில் டெபாசிட் செய்த பிறகு, உங்களது கணக்கு வருங்கால வைப்பு நிதி ஆணையத்தால் மூடப்படும்.

இதையும் படியுங்கள்:
PF பணம் எடுக்க வரி கட்டணுமா?
PF Pension

ஓய்வுக்குப் பின் பென்சன்:

நீங்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பென்சன் தொகைக்கு விண்ணப்பிக்க 10D படிவத்தை நிரப்ப வேண்டும். எந்தச் சூழலிலும் ஒருவர் பென்சன் தொகையைப் பெற இந்தப் படிவத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்க முடியும்.

10 ஆண்டுகளுக்கு உள்ளாகவே பல நிறுவனங்களில் வேலை செய்திருந்தால், நிறுவனம் மாறிய உடனே பிஎஃப் கணக்குகளை ஒன்றாக இணைத்து விடுங்கள். இப்படி இணைக்காமல் ப்ராவிடன்ட் தொகைக்கு விண்ணப்பித்து விட்டால், அதன்பிறகு பென்சன் தொகைக்கு விண்ணப்பிப்பது சிரமமாகி விடும். ஆகையால் பிஎஃப் பணத்தை எடுப்பதில் இருக்கும் ஆர்வம், அது தொடர்பான விதிமுறைகளை அறிந்து துரிதமாக செயல்படுவதிலும் இருக்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com