PF பணம் எடுக்க வரி கட்டணுமா?

PF Money
PF Money
Published on

அத்தியாவசியத் தேவைக்கு பிஎஃப் பணத்தை நாம் எடுக்கும் போது, அதில் வரி விதிக்கப்படுமா இல்லையா மற்றும் பிஎஃப் விதிமுறைகள் சொல்வது என்ன என்பதைப் பற்றி ஆராய்கிறது இந்தக் கட்டுரை.

மாத ஊதியத்திற்கு வேலைக்கு செல்லும் அனைவருக்குமே தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தால் (EPFO), பிஎஃப் தொகை மாதாமாதம் பிடித்தம் செய்யப்படுகிறுது. இது தொழிலாளர்களின் வருங்கால நலனை முன்னிறுத்தி செயல்படுகிறது. அவசர மருத்துவ செலவு, திருமணம் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு உற்றத் தோழனாய் கைக்கொடுப்பது பிஎஃப் பணம் தான். இருப்பினும் முழுப் பணத்தையும் நம்மால் எடுக்க இயலாது. தற்போதுள்ள புதிய விதிப்படி அதிகபட்ச முன்பணமாக ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம். அப்படி நாம் பணத்தை எடுக்கும் போது, இதற்கு வரி விதிக்கப்படுமா என்பது பலருக்கும் குழப்பமாகவே உள்ளது.

வேலை உயர்வு மற்றும் அதிக சம்பளம் போன்ற சில முக்கிய காரணங்களுக்காக, தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு வேலை மாற்றம் அடைவது உண்டு. இவ்வாறு பணியிடத்தை மாற்றும் போது, பிஎஃப் கணக்கையும் புதிய நிறுவனத்திற்கு மாற்ற வேண்டும். இதில் சற்று கவனக் குறைவாக இருந்தாலும், அதுவே அதிக வரிவிதிப்பை ஏற்படுத்தி விடும்.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் உங்களின் பதவிக்காலமானது 5 வருடங்களுக்கு குறைவாகவும், பிஎஃப் கணக்கில் இருக்கும் மொத்த வைப்புத் தொகை ரூ.50,000-க்கு குறைவாகவும் இருந்தால், இந்தத் தொகையை திரும்பப் பெற விண்ணப்பிக்கும் போது நீங்கள் எந்தவித வரியையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை உங்கள் பிஎஃப் தொகை ரூ.50,000-க்கும் அதிகமாக இருந்தால், 10% வரி (TDS) செலுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
EPFO அறிமுகப்படுத்திய தானியங்கி முறையின் அம்சங்கள்!
PF Money

பல நிறுவனங்களில் வேலை செய்த ஒரு தொழிலாளர், அனைத்து PF கணக்குகளையும் ஒன்றாக இணைப்பதன் மூலம், உங்களுடைய அனைத்துப் பணி அனுபவங்களையும் UAN ஒருங்கிணைத்து விடும். உதாரணத்திற்கு, நீங்கள் மூன்று வெவ்வேறு நிறுவனங்களில் பணி புரிந்துள்ளீர்கள் என வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு நிறுவனத்திலும் 2 வருடங்கள் பணி புரிந்து, மூன்று நிறுவனங்களின் PF கணக்குகளையும் ஒன்றாக இணைத்திருந்தால், உங்களின் மொத்த பணி அனுபவம் 6 வருடங்களாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

ஒருவேளை இந்த மூன்று நிறுவனங்களிலும் தொடங்கப்பட்ட உங்களின் பிஎஃப் கணக்குகளை நீங்கள் ஒன்றிணைக்கவில்லை எனில், ஒவ்வொரு நிறுவனத்தின் பணிக்காலமும் தனித்தனியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இப்படியாக உங்கள் பிஎஃப் கணக்குகளை இணைக்காமல் பணத்தை எடுக்க விண்ணப்பிக்கும் போது, ஒவ்வொரு நிறுவனத்தின் 2 வருட பணிக்காலமும் தனித்தனியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதன் விளைவாக ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனியாக 10% டிடிஎஸ் வரி விதிக்கப்படும்.

ஆகவே, பிஎஃப் பயனாளர்கள் அனைவரும் இனி விழிப்புடன் இருக்க வேண்டும். வரி விதிப்பைக் குறைக்க பிஎஃப் கணக்குகளை ஒன்றாக இணைப்பது மிக மிக அவசியமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com