பணவீக்கம் நமது முதலீட்டை எப்படி பாதிக்கிறது தெரியுமா?

Inflation
Inflation
Published on

நமது முதலீட்டுப் பணம் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைப்பதில் தவறில்லை. அதற்காக நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அவ்வகையில், நாட்டின் பணவீக்கம் நம் முதலீட்டுப் பலனை எப்படி பாதிக்கிறது என்பதை இப்போது பார்ப்போம்.

நாளையத் தேவைக்கான முதலீட்டில் நாம் கவனம் செலுத்தும் போது அதில் உள்ள நன்மைகளை மட்டும் பார்க்காமல், தீமைகளையும் அலசி ஆராய வேண்டும். இல்லையெனில் முதலீட்டுக்கான பாதுகாப்பில் சிக்கல் ஏற்பட்டு விடும். நமது முதலீட்டை பாதிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று பணவீக்கம். இது எப்போது குறையும், எப்போது உயரும் என்று சாதாரண மக்களால் கணிக்க இயலாது. இருப்பினும், பணவீக்கம் பற்றி அறிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருக்கலாம்.

ஒரு நாட்டில் விலைவாசி உயரும் போது, அந்நாட்டின் சந்தையில் பொருள்களை வாங்கும் திறன் குறைந்து போவதைத் தான் பணவீக்கம் என்கின்றனர். இந்த பணவீக்கத்திற்கும் நம் முதலீட்டிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். பணவீக்கம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதுதான் விஷயமே.

வைப்பு நிதி முதலீடு: பொதுமக்கள் அதிகமாக முதலீடு செய்யும் வைப்பு நிதித் திட்டங்களைக் கொண்டு, நம்மால் பணவீக்கத்தை மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும். வைப்பு நிதி முதலீட்டுக்கான வட்டி விகிதம் பொதுவாக 6 முதல் 7 சதவிகிதமாக இருக்கும். இதிலிருந்து பணவீக்கத்தின் 5 சதவிகிதத்தைக் கழித்தால் கிடைக்கும் 1 அல்லது 2 சதவிகிதம் தான் நமக்கு முதலீட்டின் பலனாக கிடைக்கும். மேலும் இத்திட்டத்தில் வரி தாக்கமும் கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது.

வாங்கும் திறன்: பொருள்களின் விலை உயர்வு வாங்கும் திறனைக் குறைத்து விடுகிறது. பணவீக்கம் 5 சதவிகிதமாக இருக்கும் போது ஒரு பொருளின் விலை 100 ரூபாய் எனில், அதனை நாம் 105 ரூபாய்க்கு வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். ஆகவே முதலீட்டின் பலனும் பணவீக்கத்திற்கு ஏற்ப இருக்க வேண்டியது அவசியமாகிறது.

இதையும் படியுங்கள்:
முதிர்வடையும் முதலீட்டை மறு முதலீடு செய்வது சரியான தீர்வா?
Inflation

முதலீட்டுத் தாக்கம்: வாங்கும் திறனை பணவீக்கம் பாதிக்கும் காரணத்தால், நமது முதலீடு அளிக்கின்ற பலன் பணவீக்கத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. உதாரணத்திற்கு பணவீக்கமானது 5 சதவிகிதமாக இருந்து, நமது முதலீடு அளிக்கின்ற பலன் இதற்கும் குறைவாக இருப்பின், முதலீட்டின் பலன் எதிர்மறையாகத் தாக்கும். ஆகையால், எப்போதும் பணவீக்கத்தின் மதிப்பை ஆராய்ந்து செயல்படுவது நல்லது.

பரவலான முதலீடு: பணவீக்கத்தை விடவும் அதிக முதலீட்டுப் பலன் கிடைத்தாலும், அவற்றின் இடர் தன்மையையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆகவே தான் ஒரே மாதிரியான திட்டங்களில் அதிக முதலீடு செய்வதைக் காட்டிலும், பரவலான முறையில் பல திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

பங்குச்சந்தை முதலீடு: பங்குச்சந்தை முதலீட்டில் இடர் தன்மை அதிகம் என்றாலும், நீண்ட கால நோக்கத்தில் பணவீக்கத்தை வெல்லக் கூடியத் திட்டமாக இது இருக்கும்.

இதுதவிர ரியல் எஸ்டேட் முதலீடு மற்றும் தங்க முதலீடு ஆகிய திட்டங்களும் பணவீக்கத்திற்கு எதிராக பாதுகாப்பு அளிக்கக் கூடியவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com