
பெட்ரோல் என்பது பாறைகளிலிருந்து பெறப்படும் ஒளி ஊடுருவும் ஒரு திரவமாகும்! அது இலகு ரக வாகனங்களிலிருந்து அதி கனரக வாகனங்களை மட்டுமல்லாது ஆகாய விமானங்களையும் இயக்கும் அதி சக்தி வாய்ந்தது! அது பல்வேறு கூட்டுப் பொருட்களால் ஆனது!
முன்பெல்லாம் வாகனங்களை இயக்கப் பயன்பட்ட பெட்ரோல் திடீரென்று அரசியலில் குதித்து, அதகளம் செய்து வருவதை நாமனைவரும் அறிவோம்!உச்சத்தில் இருப்போருக்கே அரசியல் சொந்தம் என்ற நாட்டு நிலைக்கேற்ப, அதன் விலை உச்சத்தை எட்டியபோதுதான் அது அரசியலில் இடம் பிடித்தது! இன்றைய இந்திய அரசியலில் அது மகத்தான இடத்தில் உள்ளது. தேர்தல் சமயங்களில் அதன் தாக்கம் அதிகம்! சாதாரணமாகப் பொருட்களின் விலை, தேவை-வழங்கல் நிலையைப் பொறுத்தே மாறுபடும். தக்காளி விலை ரூ.200ஐத தொட்டு மக்களைச் சில காலம் வதைத்தால், எதிர் மறையாகி, பறிக்கவும், எடுக்கவும் யாருமின்றி பயிரிட்டவர்களைப் பலவாறாக வதைப்பதையும் காண்கிறோம்!
ஆனால் உணவுப் பொருட்களையும் தாண்டி, அத்தியாவசிய அடிப்படைப் பொருளாக இன்று உயர் நிலையில் உள்ளது பெட்ரோல்தான்!
சைக்கிள் வைத்திருக்க மட்டுமே பொருளாதார வசதி படைத்தவர்களை மொபட்டுக்கும், பிற டூ விலருக்கும் உரிமையாளர்களாக்கிய பணி, வங்கிகளையே சாரும்!அது போலவே டூ விலர் வைத்திருக்கத் தகுதி பெற்றவர்களைக் கார் ஓனர்களாக்கியதும் அவர்களே! வீட்டில் கார் நிறுத்த இடம் இல்லாதவர்களும், காரை வாங்கி, சாலைகளில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்வதும் நம் நாட்டில்தான்!
பெட்ரோலின் விலை பல காரணிகளைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. கச்சா எண்ணை விலை, உள்ளூர் தேவை, அரசுகளின் வரி, டீலர்ஷிப் கமிஷன், விநியோகச் செலவு, மானியம் போன்றவை அவற்றில் முக்கியமானவை! பன்னாட்டுச் சந்தைகளில் கச்சா எண்ணையின் விலை குறைந்த போதும், நம் நாட்டில் மட்டும் அதன் பலன் பெட்ரோல் விலையில் பிரதிபலிக்கவில்லை என்பது பொதுவான குற்றச் சாட்டு.
மத்திய அரசின் கலால் வரியும், மாநில அரசுகளின் வரிகளுமே பெட்ரோல் விலை உயர்வுக்குக் காரணமென்றும், மத்திய அரசுதான் விலையைக் குறைக்க ஆவன செய்ய வேண்டுமென்று மாநில அரசுகளும், மாநில அரசுகள்தான் அதனைச் செய்ய வேண்டுமென்று மத்திய அரசும் கூறி, மக்களின் தலையில் தொடர்ந்து மிளகாய் அரைத்துக் கொண்டே இருக்கிறார்கள்!
இந்தியாவின் விலையேற்றம், வளர்ச்சி பெற்ற மற்ற நாடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அங்கெல்லாம் விலையில் திடீர் ஏற்றத் தாழ்வுகளைக் காண்பது அரிது. முந்தா நாள் 200 ரூபாய்! இன்றைக்கு 20 ரூபாய்!
நமது நாட்டில் பெட்ரோல் விலை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. பத்துப் பதினைந்து ரூபாய் வித்தியாசப்படுகிறது. மாநில அரசுகளின் வரியே இந்த வித்தியாசத்திற்குக் காரணமென்று கூறப்படுகிறது. அதிக அளவில் பெட்ரோல் போடுவோருக்கு இந்த வித்தியாசம் பூதாகாரமாகத் தெரிய வாய்ப்புண்டு!
கடந்த ஆறு நாட்களாக விலையில் மாற்றமின்றி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.80லேயே தமிழ் நாட்டில் இருப்பதாக, இதை எழுதுகையில் (16-02-2025) செய்திகள் தெரிவிக்கின்றன. கேரளாவில் ரூ107.48; கர்நாடகாவில் 102.92; ஜார்கண்டில் 99.10; ஜம்மு காஷ்மீரில் 95.70 மற்றும் ஹரியானாவில் 95.56 என்ற விலை நிலவுகிறதாம்.
இப்பொழுது ஹாட் டாபிக்கே, பெட்ரோல் விலை ரூ 100 ஐத் தாண்டி இருப்பதற்குக் காரணம் மத்திய அரசின் வரியா? மாநில அரசின் வரியா? என்பதே.
இதற்கு விடையளிக்கும் விதமாக ஒரு சட்டம் உள்ளதாம்! ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும், ஒரு விபரப் பலகையைப் பொருத்தி, அதில் பெட்ரோலின் அடிப்படை விலை, மத்திய அரசின் வரி, மாநில அரசின் வரி, டீலரின் கமிஷன் போன்ற விபரங்களைக் குறிப்பிட வேண்டுமாம். எமக்குத் தெரிந்து எங்கள் பகுதி பெட்ரோல் பங்குகள் எதிலும் அந்த விபரப் பலகை இல்லை! (அப்படி இருப்பதைப் பார்த்தவர்கள் யாரேனும் உண்டென்றால் விபரம் தெரிவியுங்கள்!)
மத்திய அரசு கலால் வரி என்ற பெயரில் பெட்ரோலின் மீது அதிகமாக வரி விதிப்பதே விலை உயர்வுக்குக் காரணமென்று சில செய்திகள் கூறுகின்றன.
2014 ஆம் ஆண்டில் இவ்வரி லிட்டருக்கு ரூ 9.48 ஆக இருந்தது, தற்போது 32.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாம். இதன் மூலம் 2014-2021 கால கட்டத்தில் மத்திய அரசின் வருமானம் 300 விழுக்காடு கூடியுள்ளதாக மத்திய அரசே அறிவித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனநாயக நாட்டில் எல்லா நிகழ்வுகளிலும் வெளிப்படை தேவை என்று சொல்லப்பட்டாலும், சந்திரபாபு ஏனோ அடிக்கடி ஞாபகத்திற்கு வந்து விடுகிறார்.
ஒண்ணுமே புரியலே ஒலகத்திலே
என்னவோ நடக்குது... மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியலே ஒலகத்திலே...
என்று பாடியது அவர்தானே!
சரி! நாம் வழக்கம்போல் இவற்றையெல்லாம் ஓரந்தள்ளிவிட்டு தலைப்புக்கு வருவோம். நமது இளைஞர் ஒருவர் பூடான் நாட்டிற்குச் சென்று அங்குள்ள பெட்ரோல் பங்கில் தனது டூவீலருக்கு பெட்ரோல் போட்டாராம். அங்குதான் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.64 ஆம்! பூடானின் கரன்சியான குல்ட்ரமும் (Bhutanese Ngultrum), இந்தியாவின் ரூபாயும் ஒரே மதிப்பு கொண்டவையே!(1ரூ=1.003குல்ட்ரம்). அது எப்படி? வியப்பாக இல்லை?!
என்னங்க! எதுக்கு டூ விலரை எடுக்கறீங்க? பூடான் போயி பெட்ரோல் போட்டுக்கிட்டு வரவா?அது ரொம்ப தூரங்க!