சரியான உடல்நலக் காப்பீட்டை எப்படி தேர்வு செய்வது தெரியுமா? 

Health Insurance
How to Choose the Perfect Health Insurance

உடல்நலக் காப்பீடு என்பது நிதிப் பாதுகாப்பு மற்றும் திடீர் சுகாதார தேவைகளுக்கு மிகவும் முக்கியமான முதலீடாகும். இதை பல காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குவதால் அதில் சரியானதை தேர்வு செய்வது சவாலானது. உடல்நலக் காப்பீட்டை தேர்ந்தெடுக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய காரணிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

கவரேஜ்: நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கப் போகிறீர்கள் என்றால் முதலில் அதன் கவரேஜை மதிப்பிடவும். ஒருவேளை பாலிசிதாரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவசர சிகிச்சை, மருந்துகள் மற்றும் பராமரிப்பு போன்ற அனைத்து அத்தியாவசிய சேவைகளும் அதில் கவர் ஆகிறதா என்பதை பார்க்க வேண்டும். குறிப்பாக நீங்கள் எடுக்கவிருக்கும் திட்டத்தில் உங்களுக்கான மருத்துவ நிலைமைகள் அல்லது சிகிச்சைகள் உள்ளடங்கியுள்ளதா என்பதை கவனிக்கவும். 

நெட்வொர்க் ஹாஸ்பிடல்: உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் குறித்த விவரங்களை சரிபார்க்கவும். முடிந்தவரை உங்களுக்கு அருகே இருக்கும் மிகப்பெரிய மருத்துவமனை அதில் இருக்கிறதா என்பதைப் பாருங்கள். அப்போதுதான் ஏதேனும் அவசர காலத்தில் உங்களால் உடனடியாக அருகேயிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியும். மேலும் தேவைப்பட்டால் நெட்வொர்க்கில் அல்லாத மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்துக்கொள்ளும் விருப்பம் உள்ளதா என்பதையும் கவனியுங்கள். 

பிரீமியங்கள் மற்றும் செலவுகள்: ஹெல்த் இன்சூரன்ஸுடன் தொடர்புடைய மாதாந்திர பிரீமியம்கள், விலக்குகள், அவற்றின் கொள்கைகள் போன்றவற்றை மதிப்பிடுங்கள். இவை உங்களது வருமானத்திற்கு ஏற்றபடியாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். 

Pre-existing Illness: மருத்துவக் காப்பீடு எடுப்பதற்கு முன்பே உங்களுக்கு ஏதேனும் நோய்கள் இருந்தால் அதை மறைக்காமல் தெரிவிக்கவும். அத்தகைய நோய்க்கான மருத்துவ சிகிச்சை பெற எத்தனை ஆண்டு காலம் காத்திருக்க வேண்டும் என்பதையும் பார்த்து மருத்துவக் காப்பீடு எடுங்கள்.

Cashless: ஏதேனும் அவசரத்திற்கு மருத்துவமனைக்கு சென்றால் நீங்கள் முன்கூட்டியே பணம் செலுத்தாத கேஷ்லெஸ் திட்டங்களில் சேருங்கள். சில மருத்துவ காப்பீட்டில் Copay எனக் குறிப்பிட்டு இருப்பார்கள். Copay என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே இன்ஷூரன்ஸ் நிறுவனம் கொடுக்கும், மீத பணத்தை நீங்கள்தான் செலுத்த வேண்டி இருக்கும். எனவே இந்த விஷயத்தில் சற்று கவனமாக இருங்கள். 

வாடிக்கையாளர் சேவை மற்றும் நற்பெயர்: நீங்கள் மருத்துவக் காப்பீடு எடுக்கும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மற்றும் அவர்களின் நற்பெயரை கவனிக்கவும். இணையத்தில் அந்நிறுவனத்தின் ரிவ்யூகளைப் படித்து நல்ல புரிதலை ஏற்படுத்திக் கொண்டு அந்த நிறுவனத்தில் காப்பீடு எடுங்கள். 

நெகிழ்வுத்தன்மை: உங்களது கவரேஜ் எந்த அளவுக்கு நெகழ்வுத்தன்மையுடன் இருக்கிறது என்பதைப் பாருங்கள். நீங்கள் அடிக்கடி பயணம் செய்வீர்கள் என்றால் அல்லது இடம் மாற்றுவீர்கள் என்றால் அதற்கு ஏற்றவாறு பாலிசியை மாற்றும் தன்மையைபற்றி அறிந்து கொள்ளுங்கள். இதுபோன்ற மாற்றங்களை காப்பீடு திட்டம் அனுமதிக்கிறதா என்பதையும் கவனியுங்கள். 

இதையும் படியுங்கள்:
உங்களது வயதைக் குறைக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா? 
Health Insurance

ஒப்பீடு மற்றும் ஆலோசனை: வெவ்வேறு உடல்நலக் காப்பீட்டு திட்டங்கள் அவற்றின் நன்மைகள் மற்றும் செலவுகளை ஒப்பிட்டுப் பார்க்க நேரம் ஒதுக்குங்கள். இப்போதெல்லாம் இணையத்திலேயே இத்தகைய ஒப்பீடுகளை செய்து பார்க்க கருவிகள் வந்துவிட்டன. மேலும் காப்பீட்டு தரகருடனும் இணையத்திலேயே கலந்த ஆலோசிக்கலாம். மருத்துவ காப்பீட்டை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு இதில் முதலீடு செய்யவும். 

இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு உங்களுக்கான சரியான மருத்துவக் காப்பீட்டை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும். இந்த விஷயத்தில் அவசரப்படாமல் நிதானமாக முடிவெடுத்து சரியான நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு எடுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com