முதுமை என்பது நாம் அனைவருமே கடந்து செல்லும் ஒரு இயற்கையான செயல்முறையாகும். ஆனால் சில உணவுகள் உங்களது வயதான தோற்றத்தை மெதுவாக்கி உங்கள் சருமத்தை இளமையாகவும் துடிப்பாகவும் வைத்திருக்க உதவும். இந்த பதிவில் இளமைத் தோற்றத்தை ஊக்குவிக்கும் உணவுகள் பற்றி பார்க்கலாம்.
பெர்ரி பழங்கள்: ஸ்ட்ராபெரி மற்றும் ராஸ்பெரி போன்ற பெர்ரிக்களில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. இந்த சுவையான பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து சரும நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்த உதவும்.
கீரைகள் மற்றும் காய்கறிகள்: கீரைகள் மற்றும் காய்கறிகளில் விட்டமின் ஏ, சி மற்றும் இ உட்பட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இந்த வைட்டமின்கள் சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் ஆரோக்கியமான நிறத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
கொழுப்பு நிறைந்த மீன்கள்: சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் சருமத்தை மேம்படுத்தி, வீக்கத்தைக் குறைத்து, இயற்கையான ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகின்றன.
நட்ஸ் மற்றும் விதைகள்: பாதாம், அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள் மற்றும் சியா விதைகள் அனைத்தும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தவை. இந்த ஊட்டச்சத்துக்கள் சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், அதன் அமைப்பை மேம்படுத்தவும் உதவுகின்றன. உங்களது வயதான தோற்றத்தைக் குறைக்க உங்கள் உணவில் தினசரி சிறிதளவு நட்ஸ் மற்றும் விதைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சைந் பழங்கள் போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது. கொலாஜன் உற்பத்திக்கு இந்த வைட்டமின் சி அவசியம். இது சருமத்தை மிருதுவாகவும் உறுதியாகவும் வைத்திருக்கும். இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைத்து ஆரோக்கியமான பளபளப்பை மேம்படுத்த உதவும்.
அவகாடோ: வெண்ணைப்பழம் எனப்படும் அவகாடோவில் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின் ஈ மற்றும் சி போன்றவை அடங்கியுள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் சருமத்தை ஈரப்பதமாக்கி, வீக்கத்தைக் குறைத்து, கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து சருமத்தை என்றும் ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும். எனவே அவகாடோ பழத்தை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது இளமை மற்றும் பொலிவான சரும நிறத்திற்கு வழிவகுக்கும்.
தர்பூசணி: தர்பூசணி கோடையில் புத்துணர்ச்சியூட்டும் பழம் மட்டுமல்ல சருமத்திற்கு ஈரப்பதமூட்டும் மற்றும் வயதான தோற்றத்தைக் குறைக்கும் உணவாகவும் இருக்கிறது. இதில் லைகோபின், விட்டமின் ஏ மற்றும் சி, அமினோ அமிலங்கள் உள்ளன. அவை சருமத்திற்கு தேவையான கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து நம்மை என்றும் இளமையுடன் வைத்திருக்க உதவுகிறது.
இத்தகைய உணவுகளை நீங்கள் தினசரி சாப்பிட்டு வந்தால், வயதானாலும் உங்களது தோற்றம் என்றும் இளமையாகவே இருக்கும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு என்றும் இளமையுடன் மகிழ்ச்சியாக இருங்கள்.