குறிக்கோளும் முதலீடும்: முதலீடுகள் என்பவை எப்போதுமே ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டவை. முதலீட்டின் குறிக்கோள் என்றால், அது எப்போது தேவை, எதற்காக தேவை, அதன் நோக்கம் என்ன, என்பது தெளிவாக இருக்க வேண்டும். உதாரணமாக, எனக்கு பூக்களை பறிப்பது என்ற நோக்கம் என்றால் அதற்கு வெறும் விரல்களே போதும். ஆப்பிள் பழத்தினை பறிப்பதற்கு கை தேவைப்படும். தென்னை மரத்தில் ஏறி தேங்காய்கள் பறிப்பதற்கு எனக்கு கட்டுமஸ்தான உடம்பும், மேலே ஏறி பறித்துப் போடும் திறனும் வேண்டும். எனவே எந்தக் குறிக்கோளோ, அதற்கேற்றவாறு முதலீட்டையும் நாம் முடிவு செய்ய வேண்டும்.
நிதிக் குறிக்கோள்கள் வகைகள்:
நிதி குறிக்கோள்கள் நான்கு வகைப்படும்.அவையாவன:
1. மிகக் குறுகியகால (Ultra short term) குறிக்கோள்கள்: ஒரு வருடத்திற்கு உள்ளான தேவைகளுக்கான குறிக்கோள்கள். எ.கா: மோட்டர் வண்டி வாங்குவது, மகிழுந்து வாங்குவது, நிச்சயக்கப்பட்ட திருமணத்திற்கான தேன் நிலவிற்கு சுற்றுலா செல்வது
2.குறுகிய கால (short term) குறிக்கோள்கள்: ஒரு வருடம் முதல் 5 வருடத்திற்கான குறிக்கோள்கள். எ.கா: மகிழுந்து வாங்குவது, வீடு வாங்குவதற்கான முன் பணம் கட்டுவது
3. நடுத்தர கால (medium term) குறிக்கோள்கள்: ஐந்து வருடம் முதல் 10 வருடத்திற்கான குறிக்கோள்கள். எ.கா: பள்ளியில் படிக்கும் ஆண்/பெண்ணிற்கான கல்லூரிப் படிப்பு செலவுக்கானது, கல்லூரியில் சேர்ந்த ஆண்/பெண்ணின் திருமணத்திற்கான செலவுகள்
4. நீண்டகால(long term) குறிக்கோள்கள்: பத்து வருடம் தாண்டி உள்ள எந்த ஒரு குறிக்கோளும். எ.கா: ஓய்வு காலத்திற்கான நிதி திட்டமிடல், பிறந்த குழந்தையின் மேல் படிப்பு மற்றும் திருமணத்திற்கான நிதி திட்டமிடல்.
அதேபோல் முதலீட்டிற்கு மூன்று கூறுகள் உண்டு. அவையாவன:
பணம் வளரும் விகிதம் (rate of return)
பணத்தின் நீர்ப்புத் தன்மை (liquidity)
பணத்தை இழக்கும் அபாயம் (risk)
எனவே எந்த ஒரு குறிக்கோளுக்கும், முதலீட்டின் இந்த மூன்று கூறுகளை எண்ணிப் பார்த்து அதற்கேற்ற முதலீடு முடிவு செய்ய வேண்டும்.
மிகக் குறுகிய மற்றும் குறுகிய காலத்திற்கான முதலீடுகள்: இத்தகைய முதலீடுகளில், பணத்தின் நீர்ப்புத் தன்மை மிகவும் முக்கியம். பணத்தை இழக்காமல் இருக்க வேண்டும். பணம் வளரும் விகிதம் மிகவும் அதிகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அத்தகைய குறிக்கோள்களுக்கு, வங்கியில், அஞ்சலகத்தில் வைப்பு நிதி சாலச்சிறந்தது. இவற்றில் வளரும் விகிதம் சற்று குறைவாக இருப்பினும் பணத்தை இழக்கும் அபாயம் இல்லை. நீர்ப்புத் தன்மையும் அதிகம்.
நடுத்தர காலத்திற்கான முதலீடுகள்: இவற்றில் பணத்தின் நீர்ப்புத்தன்மை முக்கியம். வளரும் விகிதம் சற்று அதிகமாக இருக்க வேண்டும் பணத்தை இழக்கும் அபாயமும் குறைவாக இருக்க வேண்டும். இத்தகைய குறிக்கோளில், உங்களது பணத்தின் இழப்பினை சந்திக்கும் அளவிற்கு ஏற்றபடி உங்களது முதலீட்டினை கடன் பத்திரம் சார்ந்த பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம். பணத்தை இழக்கும் அபாயத்தை சந்திக்க வேண்டாம் எனில் வங்கி வைப்பு நிதிகளில் மட்டுமே வைத்துக் கொள்ளலாம்.
நீண்ட கால குறிக்கோள்களுக்கான முதலீடுகள்:
இவற்றில் பணத்தின் வளரும் விகிதம் மிகவும் முக்கியம். பணவீக்கத்தை சமாளிப்பதற்கு ஏற்றவாறு வளர வேண்டும். இவற்றில் பெரும்பாலான முதலீடுகள் பங்குச் சந்தை குறியீடு சார்ந்த அல்லது பங்குச் சந்தை சார்ந்த பரஸ்பர நிதிகளில் இருக்க வேண்டும். மீதி பணமானது கடன் பத்திரம் சார்ந்த முதலீடுகளில் இருக்கலாம். முதலீட்டின் பரவலாக திற்காக தங்கத்திலும் மேலும் நிலத்திலும் கூட முதலீடு செய்யலாம்.
உங்களுக்கு வேறு வகையான திறன் சார்ந்த முதலீடு தெரியும் என்றால் அவற்றில் கூட முதலீடு செய்யலாம். இவற்றில் உங்களது வயதிற்கேற்றவாறு முதலீட்டு விகிதாசாரப்படி முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக 110 — வயது என்ற கோட்பாடின் படி, உங்களுக்கு 30 வயது என்றால் 80% பங்கு சந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதிகளில் மீதி 20 % கடன் பத்திரம் சார்ந்த பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம். வயது ஏற ஏற இவற்றின் விகிதாச்சாரத்தில் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். இதனை வருடாந்திர சமன்படுத்துதல் (annual rebalancing) என்று கூறுவார்கள்.
எனவே குறிக்கோளுக்கு ஏற்ற முதலீடு தேர்ந்தெடுத்து பணத்தை முதலீடு செய்து வருங்காலத்தை வளமாக்குவோம்.