கடும் நிதிநெருக்கடியில் ஒருவன் இருக்கும்பொழுது, தன்னிடம் இருக்கும் முதலீட்டில் சிறிதளவு இலாபம் இருந்தால் கூட அதனைப் பணமாக்கிக் கொள்ள வேண்டும்.
அந்த சிறிய இலாபத்தில் திருப்தி அடைய வேண்டும். அந்த இலாப பணமானது நிதி நெருக்கடியைச் சமாளிக்க உதவும். அந்த முதலீடு பின்னால் பெரிய இலாபம் கொடுக்கும் என்று அந்த முதலீட்டைப் பணமாக்காமல் இருந்தால், அந்த முதலீடானது நஷ்டமாகவும் வாய்ப்பு உண்டு.
இதனைக் குறித்த ஒரு ஈசாப் கதையைப் பார்ப்போம்.
ஒருவன் கடும் பசியில் இருந்தான். அப்போது அவன் தூண்டிலை ஆற்றங்கரையில் வைத்து வெகு நேரம் காத்திருந்தான். தூண்டிலில் எதுவும் சிக்கவில்லை.
வெகு நேரம் காத்திருந்த அவன் பசியில் திண்டாடியபொழுது, அவன் தூண்டிலை ஏதோ ஒன்று இழுத்தது. உடனே சரசரவென்று தூண்டிலை இழுத்த பொழுது, அதில் ஒரு சிறிய மீன் மாட்டியிருந்தது.
அந்தச் சிறிய மீன் உடனே அவனிடம் பேசத் தொடங்கியது.
'நான் சிறிய மீனாக இருக்கிறேன். இப்போது என்னை விட்டு விடு. நான் பெரிய மீனான பின்னர் என்னை வந்து பிடித்துக் கொள்' என்றது சிறிய மீன்.
அந்த மனிதன் அமைதி காத்தான். அவனை தனது சாதுரிய பேச்சினால் வழிக்கு கொண்டு வரலாம் என்று அந்தச் சிறிய மீன் தனது பேச்சைத் தொடர்ந்தது.
'இந்த ஆற்றிலேயே பெரிய மீன்கள் நிறைய உள்ளன. அவற்றை நீ பிடித்துக் கொள்ளலாமே? ஏன் இந்த சிறிய மீனை பிடித்து உண்ண எண்ணுகிறாய்?' என்றது சிறிய மீன்.
'என்னை முட்டாள் என்று நினைத்தாயா? கிடைப்பதில் திருப்தி அடைவது உயர்ந்த குணம். எனக்கு கிடைத்த இந்தச் சிறிய மீனைக் கொண்டு நான் திருப்தி அடைவேன்' என்று கூறினான் அவன்.
அந்தச் சிறிய மீனை எடுத்து அவன் தனது பையில் போட்டுக் கொண்டான்.
வைப்பு நிதி போன்ற சில முதலீடுகள் மெதுவாக வளரும். பங்குச் சந்தை போன்ற முதலீடுகள் மிகுந்த ஏற்றத்தாழ்வுகள் உடையவை. ஒருவனுடைய கடும் நிதி நெருக்கடியில் பங்குகளின் வளர்ச்சி குறைவாக இருந்தாலும், அவற்றை விற்று பணமாக்கி தனது நிதி நெருக்கடியைச் சமாளிக்க முயல வேண்டும். அந்த நிதி நெருக்கடியில் அவன் தனது பங்கு எதிர்காலத்தில் வளரும் என்று எண்ணி, பங்கினைப் பணமாக்காமல் இருந்தால், அவன் நிதி நெருக்கடியைச் சமாளிக்க கடன் வாங்க நேரலாம்.
மேலும், எதிர்காலத்தில் பங்கு நிச்சயமாக வளரும் என்று கூற இயலாது. தனது முதலீட்டின் குறைந்த இலாபத்தை கொண்டு, திருப்தி அடைந்து, தனது நிதி நெருக்கடியைச் சமாளிக்க முயல வேண்டும்.
துன்ப காலத்தில் உதவாத முதலீட்டினால் என்ன பயன்? துன்பகாலத்தில் முதலீட்டினைப் பணமாக்கும் பொழுது, இலாபம் குறைவாக இருந்தாலும், அதில் திருப்தி அடைந்து துன்ப காலத்தைச் சமாளிக்க வேண்டும்.
ஒரு காலத்தில் பங்குச்சந்தையில் கொடிகட்டிப் பறந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் போன்ற ஜாம்பவான் நிறுவனங்கள் கூட, இன்று அடிமட்ட விலைக்கு வந்துவிட்டன. அதே போன்று கொடிக் கட்டிப் பறந்த ஜெட் ஆர்வேஸ் நிறுவனம் இன்று பங்குச்சந்தையிலேயே இல்லை.
எனவே, எந்த பங்கிற்கு எந்த நிலை ஏற்படும் என்பதைக் கணிக்க முடியாது. நிதி நெருக்கடியில் வீட்டில் உள்ள தட்டுமுட்டு சாமான்கள், சொத்துக்கள், முதலீடுகள் போன்றவற்றில் கைவைத்தாவது, கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். நிதி நெருக்கடி காலங்களில், முதலீடுகளில் இலாபம் குறைவாக இருந்தாலும், அதில் திருப்தி அடைந்து முதலீடுகளைப் பணமாக்கி, கடன் வாங்குவதைத் தவிர்ப்போம்.