
நமது முதலீடு சம்பந்தமான முடிவுகளை நாமே எடுக்க வேண்டும். நமது முதலீடு குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறுவார்கள். அந்தக் கருத்தை எல்லாம் மாற்றி மாற்றி நாம் செயல்படுத்த ஆரம்பித்தால் அந்த முதலீட்டையே நாம் இழக்க நேரலாம்.
இதனைக் குறித்த ஒரு ஈசாப் கதையைப் பார்ப்போம்:
ஒரு தந்தையும் அவரது மகனும் தங்களது கழுதையுடன் சந்தைக்குச் சென்றனர்.
அவர்கள் கழுதையுடன் நடந்து கொண்டிருந்தபோது, எதிரே ஒரு நபர் வந்தார்.
'எதற்கு கழுதையை சும்மா நடக்க விடுகிறீர்கள் ? யாராவது அதன் மேல் அமர்ந்து கொள்ளலாமே?' என்றார் அந்த நபர்.
உடனே, தந்தை தனது மகனை அந்த கழுதையின் மீது உட்கார வைத்தார். மறுபடியும் பயணம் தொடர்ந்தது. மறுபடியும், எதிரே ஒரு நபர் வந்தார்.
'வயதான தந்தையை நடக்க விட்டு, சிறிய பையன் நீ கழுதையில் உட்காரலாமா? இது சரியல்ல' என்றார் அந்த நபர்.
உடனே, தந்தை தனது மகனை கழுதையிலிருந்து இறக்கிவிட்டு தான் அதில் உட்கார்ந்து கொண்டார். மறுபடியும் பயணம் தொடர்ந்தது. மறுபடியும், எதிரே ஒரு நபர் வந்தார்.
'சிறிய பையனை நடக்க விட்டு, வயதான தந்தை இப்படி பயணிக்கலாமா?' என்றார் அந்த நபர்.
உடனே, தந்தை தனது மகனை தனக்கு முன்பாக உட்கார வைத்துக் கொண்டு, அவர்கள் இருவரும் கழுதையின் மேல் அமர்ந்தபடி பயணம் செய்தனர். மறுபடியும், எதிரே ஒரு நபர் வந்தார்.
'என்ன கொடுமையடா இது. வாயில்லா ஜீவன் கழுதையின் மேல் இவ்வாறு இருவரும் அமர்ந்து கழுதையை கொடுமை படுத்தலாமா?' என்றார் அந்த நபர்.
உடனே தந்தை ஒரு பெரிய கோலினை எடுத்தார். கழுதையின் முன்னங்கால்கள், பின்னங்கால்களைக் கட்டி அந்தக் கோலில் தொங்கவிட்டு, இருவரும் கழுதையைச் சுமந்து சென்றனர்.
அவர்களது இந்தச் செய்கையைக் கண்டு மக்கள் சிரித்தனர். அப்போது அவர்கள் ஒரு பாலத்தை கடக்க வேண்டி வந்தது.
தன்னைச் சுற்றி ஏற்பட்ட சலசலப்பினால் பதட்டமடைந்த கழுதை ஒரு காலை விடுவித்துக் கொண்டு, சிறுவனை எட்டி உதைக்க அந்த சிறுவன் அந்தக் கோலினை விட்டு விட்டான். கழுதை பாலத்திலிருந்து தவறி தண்ணீரில் விழுந்தது. அதன் முன்னங்கால்கள் கட்டப்பட்டிருந்தபடியால், நீந்த முடியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்து போனது.
தந்தையும் மகனும் தாங்கள் இவ்வாறு மாற்றி மாற்றி முடிவு செய்ததை எண்ணி வருந்தினர்.
கழுதையை எவ்வாறு சந்தைக்குக் கூட்டிச் செல்வது என்பது குறித்து நபர்களுக்கு நபர் கருத்து வித்தியாசம் இருக்கிறது. இங்கு கழுதை என்பதை நமது சேமிப்புப் பணமாக எடுத்துக் கொள்வோம். சந்தைக்குச் செல்வதென்பதை நமது நிதிக் குறிக்கோளாக எடுத்துக் கொள்வோம். அதற்கு கழுதையை எவ்வாறு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதை நாம் தான் சுயமாக முடிவு செய்ய வேண்டும்.
நமது வாழ்க்கையில் பல்வேறு நிதி குறிக்கோள்கள் இருக்கலாம். ஓய்வு காலம், சுற்றுலா செல்வது, குழந்தைகளின் மேல்படிப்பு, குழந்தைகளின் திருமணம் போன்ற குறிக்கோள்களுக்கு பணத்தினை எவ்வாறு முதலீடு செய்வது என்பது நாம் சுயமாக முடிவு செய்ய வேண்டும். யாரோ சொல்கிறார்கள் என தவறான வழிகளில் முதலீடு செய்தால் பணத்தை இழக்க நேரலாம். குறுகிய காலக் குறிக்கோள்களுக்கு வைப்பு நிதிகள் சிறப்பானவை. நடுத்தர காலக் குறிக்கோள்களுக்கு கடன் பத்திரங்கள் சார்ந்த பரஸ்பர நிதிகள் சிறப்பானவை. நீண்ட காலக் குறிக்கோள்களுக்கு பங்குச்சந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதிகள் சிறப்பானவை.
எனவே, குறிக்கோளுக்கு ஏற்ற முதலீட்டினை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். கழுதையின் மேல் எத்தகைய சுமையை ஏற்றவதென்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.