கூகுள் பே (Google Pay) செயலியில் கோல்டு லோன், சிபில் ஸ்கோர் சரிபார்ப்பது எனப் பல்வேறு சிறப்பான அம்சங்கள் இருப்பதால் மற்ற யுபிஐ செயலிகளை விட அதிக மக்கள் இதையே பயன்படுத்துகின்றனர். கூகுள் பே மூலம் பணம் அனுப்பும்போது தவறுதலாக வேறு யாருக்காவது அனுப்பி விட்டால் அதை எப்படித் திரும்பப் பெறுவது என்று பார்க்கலாம்.
நாம் ஒருவருக்கு பணத்தை கூகுள் பேவில் அனுப்பும்போது, போன் நம்பரில் தெரியாமல் ஒரு நம்பரை மாற்றிப் போட்டால் கூட வேறு ஒருவரின் அக்கவுண்டிற்கு அந்த பணம் சென்று விடும்.
அப்படி தவறான யுபிஐ நம்பருக்கு பணம் போனால், அதனை பெற்றவரைத் தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப பெறுவதற்கு உதவி கோரலாம். அல்லது கூகுள் செயலியின் கஸ்ட்மர் கேர் எண்ணை தொடர்பு கொண்டு தவறாக பணம் அனுப்பிய விவரத்தைக் கூறலாம். பணத்தை திரும்ப பெற வேண்டியதற்கு, அது சார்ந்த தகவல்களை பயனர்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் பே சேவை மையம் எண் 1800-419-0157 என்று indiatvnews இணையதளம் வெளியிட்டுள்ளது.
அதன்பின்னர் கூட உங்களுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்றால், ஆர்பிஐ அமைப்பின் NPCI portal இணையப் பக்கத்தில் புகார் அளிக்கலாம். அதன்படி NPCI வலைத்தளமான npci.org.in தளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு What we do tab என்ற பக்கத்திற்குச் சென்று, பின்னர் UPIஐத் தேர்வு செய்து Dispute Redressal Mechanism என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அந்த பக்கத்தில் உள்ளபுகார் பெட்டியில், யுபிஐ பரிவர்த்தனை ஐடி, வங்கி பெயர், விர்ச்சுவல் பேமெண்ட் முகவரி, மாற்றப்பட்ட தொகை, பரிவர்த்தனை தேதி, மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை கொடுக்க வேண்டும். இதைச் செய்தால் அடுத்த 24-48 மணி நேரத்தில் பணம் திரும்ப வரும். அதிலும் பணம் செலுத்துபவர் மற்றும் பணம் பெறுபவர் வங்கிகளில் ஒரே வங்கியாக இருந்தால் பணத்தைத் திரும்பப் பெற குறைந்த நேரமே ஆகும். ஆனால், இரண்டு வங்கி கணக்குகளும் வெவ்வேறாக இருந்தால் பணத்தை திரும்பப் பெற அதிக நேரமாகும்.
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) சில UPI பரிவர்த்தனைகளைத் தடுக்க, கடந்த பிப்ரவரி 1, 2025 முதல், சிறப்பு எழுத்துக்களால் ஆன UPI ID-களைக் கொண்ட பரிவர்த்தனைகள் இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்று கூறியுள்ளது. அதாவது, உங்கள் UPI ID தகவலில் @,#, $, *, ! போன்ற சிறப்பு எழுத்துக்கள் (special characters) இருந்தால் அவற்றை உடனே மாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.|
குறிப்பாக NPCI வெளியிட்ட தகவலின்படி, பிப்ரவரி 1 முதல், பரிவர்த்தனை ஐடியில் எண்ணெழுத்து எழுத்துக்கள் (எழுத்துக்கள் மற்றும் எண்கள்) மட்டுமே பயன்படுத்தப்படும். அதாவது உங்கள் பெயருக்கு இடையில் எழுத்துக்களுடன் நம்பர்களை சேர்த்துக்கொள்ளலாம்.
உங்கள் பணப்பரிவர்த்தனை சீராக நடைபெறவில்லை என்றால் உங்கள் UPI ID விபரங்களைச் சரிபார்க்க வேண்டும்.