பங்கு சந்தை வீழ்ச்சியில் இருந்து முதலீட்டாளர்கள் தப்பிப்பது எப்படி? வாங்க தெரிந்துக்கலாம்!

NIFTY50
NIFTY50

ந்திய பங்குசந்தை கடந்த வாரத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடும் சரிவை சந்தித்தது. இதனால், பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த சாதாரண முதலீட்டாளர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இதுபோல் எதிர்பாராமல் வரும் பங்குசந்தை சரிவில் இருந்து முதலீட்டாளர்கள் எவ்வாறு தங்களை தற்காத்துக்கொள்வது என்பதை இங்கே பார்க்கலாம்..

கடந்த வாரத்தில் மட்டும் இந்தியாவின் 10 அதிக சந்தை மதிப்புள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு 1.52 இலட்சம் கோடிகள் வீழ்ச்சி அடைந்தன. இதில், ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும், கிட்டத்தட்ட 35 ஆயிரம் கோடி சந்தை மதிப்பை இழந்தது. டாடா கன்சல்டன்சி நிறுவனம் கிட்டத்தட்ட 28 ஆயிரம் கோடி சந்தை மதிப்பை இழந்தது. இந்துஸ்தான் யூனிலீவர் கிட்டத்தட்ட 18 ஆயிரம் கோடி சந்தை மதிப்பை இழந்தது.

இதைபோல் மற்ற அதிக மதிப்புள்ள நிறுவனங்களான ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், ஐடிசி, பாரதி ஏர்டெல், பாரத ஸ்டேட் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் போன்ற நிறுவனங்களும் கணிசமாக சந்தை மதிப்பை இழந்துள்ளன. இத்தகைய வீழ்ச்சிகள், முதலீட்டுக் கலவையின் (portfolio) பரவலாக்கத்தின் (diversification) முக்கியத்துவத்தை மறுபடி தெரிவிக்கின்றன.

முதலீட்டுக் கலவையின் பரவலாக்கத்தின் மூலம், நம்மால் நமது இழப்பை குறைத்துக் கொள்ளமுடியும். நாம் முதலீடு செய்யும் நிறுவனங்களில் பரவலாக்கத்தின் மூலம், நமது முதலீட்டைப் பின்வருமாறு பரவலாக்கிக் கொள்ளலாம்.

  • ஒரே முதலீட்டுக் கலவையில், பல்வேறு வகை சொத்துக்கள்(asset class) - பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம், நிலம், தொன்மையான பொருட்கள், வைப்பு நிதிகள் என பல்வேறு வகை சொத்துக்களை நாம் முதலீட்டுக் கலவையில் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம், ஒரு சொத்து நன்றாக லாபம் ஈட்டித் தராவிட்டாலும், மற்ற சொத்து வகைகள் லாபம் ஈட்டித் தர வாய்ப்புண்டு. உதாரணமாக, பங்கு சந்தை வீழும் போது, கடன் பத்திரங்கள் இலாபம் ஈட்டித் தரும்.

  • ஒரே வகை சொத்தில்,பல்வேறு தொழிற்துறைகள்(industry)- பங்குகள் என்ற சொத்தினை எடுத்துக் கொண்டால், வெவ்வேறு வகை தொழில்கள் சார்ந்த பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். வங்கி, தகவல் தொழில்நுட்பம், கட்டுமானத் துறை, மருத்துவத் துறை என்று வெவ்வேறு தொழில் நிறுவனங்களில் பங்குகள் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம், ஒரு தொழில்துறை பங்குகள் வீழ்ச்சி அடைந்தாலும், மற்ற தொழிற்துறை பங்குகள் முதலீட்டிற்கு உதவும். உதாரணமாக, கொரோனா காலத்தில் சுற்றுலாத் துறை பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. மருத்துவப் பங்குகள் எழுச்சி அடைந்தன.

  • ஒரே தொழில்துறையில், பல்வேறு நிறுவனங்கள்(companies) - வங்கி என்ற தொழிலை எடுத்துக் கொண்டால், ஒரே வங்கியின் பங்குகளை மட்டும் வாங்காமல், ஐசிஐசிஐ, பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎப்சி என பல்வேறு வங்கிகளின் பங்குகளை வாங்க வேண்டும். இதன் மூலம், ஒரு வங்கியின் பங்கு வீழ்ச்சி அடைந்தாலும், மற்ற பங்குகள் முதலீட்டிற்கு உதவும். உதாரணமாக, யெஸ் வங்கி நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தபோதும், மற்ற வங்கிகளின் பங்குகள் வீழ்ச்சி அடையவில்லை.

இவ்வாறு பரவலாக முதலீடு செய்யும் போது, நமது முதலீடானது காக்கப்படுகிறது. ஏதேனும் ஒரு சொத்துவகை, ஒரு தொழில்துறை, ஒரு நிறுவனம் பாதிக்கப்பட்டால் கூட, நமது பரவலான முதலீடு காரணமாக, நமது முதலீட்டுக் கலவையின் இழப்பு குறைக்கப்படுகிறது.

நீண்ட காலத்தில் நல்லதொரு பணப் பெருக்கத்தினை நமது முதலீட்டுக் கலவையினால் அடைய முடிகிறது. மேலும், நமது குறிக்கோளுக்கு ஏற்ற முதலீட்டுக் கலவையினை வைத்திருக்க வேண்டும். உதாரணமாக, குறுகிய காலக் குறிக்கோள்களுக்கு பங்கு சந்தை முதலீடு அபாயகரமானது. வங்கி வைப்பு நிதிகள் சிறப்பானவை. குறிக்கோளுக்கு ஏற்ற முதலீட்டுக் கலவையைத் தேர்ந்தெடுத்து, பரவலாக முதலீடு செய்து, நமது எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com