
விலைவாசி உயர்ந்து வரும் இன்றைய நிலையில், மாதச்சம்பளத்தை மட்டுமே வைத்துக் கொண்டு வாழ்வில் முன்னேறுவது மிகவும் கடினம். சொந்தத் தொழில் ஒன்றே நம்மை பொருளாதார ரீதியாக முன்னேற்றும். சொந்தத் தொழில் செய்யும் முடிவுக்கு வந்து விட்டால், பலருக்கும் எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுப்பது என்று குழப்பமாக இருக்கும். அவ்வகையில் உங்களிடம் முதலீடு செய்ய பெரிய அளவில் பணம் இருந்தால், கேஸ் சிலிண்டர் டீலர்ஷிப்பைத் தொடங்கி நல்ல இலாபம் பார்க்கலாம். இதனை எப்படித் தொடங்குவது உள்ளிட்ட பல தகவல்களை வழங்குகிறது இந்தப் பதிவு.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.400-க்கும் குறைவாகவே இருந்தது. அப்போதைய நிலையில் சிலிண்டர் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கையும் குறைவு தான். ஆனால் இன்றோ ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.800 முதல் ரூ.1,000 வரை விற்பனையாகிறது. கேஸ் சிலிண்டர் இல்லாத வீட்டைப் பார்ப்பது கூட அரிதாகி விட்டது. அந்த அளவிற்கு சிலிண்டர் அனைத்து வீட்டுச் சமையலறைகளையும் ஆக்கிரமித்து விட்டது. மாதந்தோறும் ஒன்றாம் தேதி கேஸ் சிலிண்டர்களின் விலையும் மாற்றியமைக்கப்படுகிறது.
இந்நிலையில் கேஸ் சிலிண்டர் டீலர்ஷிப்பைத் தொடங்குவது நிச்சயமாக நல்ல இலாபத்தைக் கொடுக்கும். இதனைத் தொடங்குவதற்கு கிராமப் பகுதியாக இருந்தால் கிட்டத்தட்ட ரூ.30 இலட்சமும், நகரம் மற்றும் புறநகர்ப் பகுதியாக இருந்தால் ரூ.40 இலட்சமும் செலவாகும் என கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் 14.2 கிகி சிலிண்டரை விற்றால் ரூ.73 வரையும், 5 கிகி சிலிண்டரை விற்றால் ரூ.35 வரையும் கமிஷன் தொகை கிடைக்கிறது. தோராயமாக ஒரு மாதத்திற்கு ரூ.75,000 முதல் ரூ.2 இலட்சம் வரை இலாபம் கிடைக்கும் என்கின்றனர் மற்ற விநியோகஸ்தர்கள்.
கேஸ் சிலிண்டர் டீலர்ஷிப்பைத் தொடங்குவதற்கு முன்பாக அது அமையப் போகும் இடம், அப்பகுதியில் கேஸ் சிலிண்டர்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பயன்பாட்டில் உள்ளது போன்ற அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். எந்தெந்தப் பகுதிகளில் கேஸ் சிலிண்டர் விநியோகஸ்தர்கள் தேவைப்படுகிறார்கள் என்ற விவரத்தை, அவ்வப்போது பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இண்டேன், பாரத் கேஸ் மற்றும் எச்.பி. கேஸ் ஆகியவை பத்திரிகைகளில் விளம்பரம் செய்யும். இதனைப் பார்த்து டீலர்ஷிப் தொடங்க விண்ணப்பிக்கலாம். மேலும் https://www.lpgvitarakchayan.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று விநியோகஸ்தர்கள் தேவை, வழிமுறைகள் மற்றும் நெறிமுறைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் டீலர்ஷிப் பெற விண்ணப்பித்ததும், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார். அதன்பிறகு அவர் கேஸ் டீலர்ஷிப் தொடங்க தகுதியானவர் எனில் அவரது விவரங்களை எண்ணெய் நிறுவனங்கள் இணையதளத்தில் வெளியிடும். அதன்பிறகே விண்ணப்பதாரர் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆய்வு:
கேஸ் ஏஜென்சி அமையவிருக்கும் இடத்தை சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்கள் நேரில் வந்து ஆய்வு செய்யும். விண்ணப்பதாரர் கேஸ் குடோனை சொந்தமாக கட்ட வேண்டும். சொந்த இடம் இல்லையெனில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கு ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுக்க வேண்டியது அவசியமாகும்.
முன்னுரிமை:
இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் 50% விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. எஸ்சி, எஸ்டி பிரிவினர், முன்னாள் இராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஓய்வே பெற்ற காவல் அதிகாரிகள் ஆகியோர் இட ஒதுக்கீட்டைப் பெறத் தகுதியுடையவர்கள்.