

ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும், "இந்த வருஷம் கண்டிப்பா ஜிம்முக்கு போவேன்", "டயட் இருப்பேன்" என்று சபதம் எடுப்பதைப் போலவே, "இந்த வருஷம் பணத்தை மிச்சப்படுத்தி பெரிய ஆளாகிடுவேன்" என்று நினைப்பவர்கள் நம்மில் பலர். ஆனால், ஜனவரி மாதம் முடிவதற்குள்ளேயே அந்த சபதங்கள் காற்றில் கரைந்துவிடும். 2025 முடிந்துவிட்டது அடுத்து வரப்போகும் 2026 வது வருடமாவது நாம் சேமிப்பில் இறங்கி எதிலாவது முதலீடு செய்தால் நன்றாக இருக்கும் என நினைப்பவர்களுக்கான ஆலோசனைகள் தான் இங்கு.
ஏன் முதலீடு செய்ய வேண்டும்?
நம்மில் பலர் பணத்தைச் சம்பாதித்து, அதை அப்படியே வங்கிச் சேமிப்புக் கணக்கிலோ அல்லது வீட்டிலோ வைத்திருப்பதுதான் பாதுகாப்பு என்று நினைக்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல. பணவீக்கம் (Inflation) என்ற கண்ணுக்குத் தெரியாத பூதம் நம் பணத்தின் மதிப்பைத் தினசரி குறைத்துக் கொண்டே இருக்கிறது.
உதாரணமாக, 5 வருடங்களுக்கு முன்பு 5 ரூபாய்க்கு வாங்கிய சாக்லேட் அல்லது பிஸ்கட் பாக்கெட் இன்று 10 ரூபாய் ஆகியிருக்கும் அல்லது அதன் அளவு குறைந்திருக்கும். இதுதான் பணவீக்கம். சராசரியாக 6% பணவீக்கம் இருக்கும்போது, வங்கியில் வெறும் 2-3% வட்டிக்கு பணத்தைப் போட்டு வைப்பது நஷ்டத்தையே தரும். எதிர்காலத்தில் மருத்துவம், கல்வி, வாகனச் செலவுகளைச் சமாளிக்க வேண்டுமென்றால், நம் பணம் தூங்கக்கூடாது, அதுவும் வேலை செய்ய வேண்டும்.
முதலீட்டுத் தேர்வுகள்!
முதலீடு செய்ய நினைப்பவர்களுக்குப் பல வழிகள் உள்ளன:
தங்கம் (Gold): இது காலங்காலமாக நம்பகமான முதலீடு. அவசர காலத்திற்கு உதவும். ஆனால் குறுகிய காலத்தில் பெரிய லாபம் தராது.
ரியல் எஸ்டேட் (Real Estate): நிலம் அல்லது வீடு வாங்குவது பாதுகாப்பானதுதான். ஆனால், இதை வாங்குவதற்கும் விற்பதற்கும் அதிக பணம் மற்றும் நேரம் தேவைப்படும்.
நிலையான வைப்பு நிதி (FD/PPF): மிகக்குறைந்த ரிஸ்க் கொண்டது. ஆனால், இது பணவீக்கத்தை மட்டுமே ஈடுசெய்யும், பெரிய அளவில் செல்வத்தை உருவாக்காது.
பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் (Equity): நீண்ட காலத்தில் செல்வத்தை உருவாக்க இதுவே சிறந்த வழி. இதில் சராசரியாக 12-15% வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
எது சிறந்த தேர்வு?
நீங்கள் 2026-ல் புதிதாக முதலீட்டைத் தொடங்குகிறீர்கள் என்றால், 'Asset Allocation' மிக முக்கியம். உங்களின் அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக்கூடாது. அவசரத் தேவைக்குச் கொஞ்சம் பணம் வங்கி அல்லது FD-ல் இருக்க வேண்டும். பாதுகாப்பிற்குத் தங்கம் வேண்டும்.
ஆனால், உண்மையான வளர்ச்சிக்கு பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது இடிஎஃப் (ETF) சிறந்தது. பங்குச்சந்தையில் ரிஸ்க் இருந்தாலும், நீண்ட காலத்தில் அதுதான் பணவீக்கத்தைத் தாண்டி லாபம் தரும். ஒரு தனி மனிதராக நீங்கள் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களின் வளர்ச்சியில் பங்குகொள்ள இது ஒரு வாய்ப்பு.
எப்படி ஆரம்பிப்பது?
முதலீடு செய்ய லட்சக்கணக்கில் பணம் தேவையில்லை. 'டிக்கெட் சைஸ்' (Ticket Size) என்று சொல்லக்கூடிய குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை, பங்குச்சந்தையில் மிகவும் குறைவு. வெறும் 100 அல்லது 500 ரூபாயில் கூட SIP (Systematic Investment Plan) மூலம் முதலீட்டைத் தொடங்கலாம்.
இதற்குத் தேவை ஒரு டீமேட் (Demat) கணக்கு மற்றும் கேஒய்சி (KYC) ஆவணங்கள் மட்டுமே. மார்க்கெட் ஏறும்போதோ இறங்கும்போதோ பயப்படாமல், தொடர்ந்து முதலீடு செய்வதே வெற்றியின் ரகசியம்.
முதலீட்டை "நாளைக்கு ஆரம்பிக்கலாம்" என்று தள்ளிப்போடுவதுதான் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு. 2026-ல் உங்கள் நிதி நிலைமை மாற வேண்டும் என்றால், இன்றே முதல் படியை எடுத்து வையுங்கள். பணவீக்கத்தைத் தாண்டி சம்பாதிக்கவும், தூங்கும்போது வருமானம் ஈட்டவும், சரியான அறிவோடு முதலீட்டைத் தொடங்குங்கள்.